ஞாயிறு, 12 மே, 2019

117 நாள் லீவ் கிடைச்சிடுச்சு; கூடுதலா 180 லீவ் வேணும்!’- சசிகலாவின் விடுதலை பிளான்

சசிகலாvikatan.com - எம்.வடிவேல் ; மே 23-ம் தேதி, தேர்தல் முடிவுகளை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுதான் தனது வருங்கால அரசியல் பயணத்தையும்  வாழ்க்கையையும் வழிநடத்திச்செல்லும் என்று உறுதியாக எண்ணுகிறார்.
சசிகலா இப்படி எண்ணுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிறையில் நான்கு வருட சிறைத் தண்டனையோடு, அபராதத் தொகை 10 கோடியைச் செலுத்துவதில்லை என்ற முடிவால், கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவித்தாக வேண்டும். இதையெல்லாம் சிறை நன்னடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, தண்டனைக் காலத்தை குறைத்துவிடலாம் என எண்ணிவருகிறார். ஆனால், டிஐஜி ரூபா தெரிவித்த 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகார் தடையாக வந்து நிற்கிறது.


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிமுறைகளின்படி, கைதி ஒருவர் தோட்ட வேலை பார்க்கிறார் என்றால், மாதத்தில் 6 நாள்கள் விடுமுறை நாள்களாகக் கிடைக்கிறது. அதுவே, அலுவலக உதவியாளர் பணி என்றால் 4 நாள்கள்தான். அதன்படி, சசிகலாவும் இளவரசியும் சிறை கார்டன் பணி செய்துவருவதால், ஆண்டுதோறும் 72 நாள்கள் விடுமுறையாகக் கிடைக்கிறது. சிறப்பு நன்னடத்தை விதியின்படி 15 நாள்கள், சிறை கண்காணிப்பாளர், கைதியின் நன்னடத்தையைக் காரணம் காட்டி 30 நாள்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 117 நாள்கள் சசிகலா தரப்பு விடுமுறையாகப் பெற்றுள்ளனர்.
2020 பிப்ரவரி 15 வரை மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிக்கும் சசிகலா தரப்பிற்கு, மொத்தம் 351 நாள்கள் விடுமுறையாகக் கிடைக்கும். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி அபராதத் தொகை 10 கோடி செலுத்துவதில்லை என்ற முடிவால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனால், சசிகலா தரப்பு விடுதலை நாள் மேலும் தள்ளிப்போகிறது.
கர்நாடகா அரசு, சிறைக் கைதிகளை சுதந்திர தினம் மற்றும் நவம்பரில் வரும் கன்னட வருடப் பிறப்பை முன்னிட்டு முன் கூட்டியே விடுதலை செய்துவருகிறது. அதற்காக சிறையில் நன்னடத்தைச் சான்று பெற்றுள்ள கைதிகளை ஆண்டுதோறும் தேர்வுசெய்து, விடுதலை செய்துவருகிறது. இந்த ஆண்டும் அதற்கான பட்டியல் தேர்வுசெய்யப்படுகிறது. அந்தப் பட்டியலில், சசிகலா தரப்பு பெயர்களும் சேர்க்கப்பட்டு, கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி மேக்ரியின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஒப்புதல் அளிக்க வேண்டும். சசிகலா தரப்புக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், கூடுதலாக 180 நாள்கள் விடுமுறை கிடைத்துவிடும்.
ஜெயலலிதா நினைவு நாள் டிசம்பர் 5 அல்லது ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி, சிறையிலிருந்து வெளியே வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மாலை அணிவிக்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.
vikatan.com

கருத்துகள் இல்லை: