சனி, 18 மே, 2019

திண்டிவனத்தில் மூவர் கொலை... மகன் கைது சொத்துக்காக மகனும் மருமகளும் சேர்ந்து ..


viluதினமணி : திண்டிவனத்தில் ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அது திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடித்த காவல்துறை அதே குடும்பத்தைச் சேர்ந்த மகன், மருமகளைக் கைது செய்துள்ளது.
குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து மூன்று பேரும் உயிரிழந்ததாகக் கூறிய மகனிடம், காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது மனைவியுடன் சேர்ந்து சொத்துக்காக சொந்த தாய், தந்தை, சகோதரனைக் கொன்றுவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
விசாரணையின் போது இறந்த ஒருவரின் தலையில் ரத்தக் காயங்கள் கண்டறியப்பட்டதால், அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்று காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகனிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 
இந்த சம்பவத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில், மூத்த மகன் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், அவரே தனது மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தாரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை அளித்தார்.
திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ராஜி (60). இவரது மனைவி கலைச்செல்வி (52), இளைய மகன் கௌதமன் (27).
இவர்கள் மூவரும் தங்களது வீட்டில் உள்ள ஓர் அறையில் தூங்கினர். பக்கத்து அறையில் ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் தனது மனைவி காயத்ரியுடன் தூங்கினார்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை ராஜி உள்ளிட்ட மூவரும் தூங்கிய அறையில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியதில் மூவரும் உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
ராஜி, கலைச்செல்வி, கெளதமன் ஆகியோரின் சடலங்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே, சம்பவம் நடைபெற்ற வீட்டை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி உத்தரவின்பேரில், ஆய்வாளர் சீனிபாபு, ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனனை திண்டிவனம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
மேலும், குளிர்சாதனப் பெட்டியில் தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த இயந்திரத்தை மெக்கானிக் மூலம் போலீஸார் பரிசோதனை செய்தனர்.
விசாரணையின் இறுதியில் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி காயத்ரி கைது செய்யப்பட்டனர். தனது பெற்றோருக்கு சொந்தமாக கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கும் நிலையில், மூத்த மகன், சொத்துக்காக சொந்த குடும்பத்தையே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: