திங்கள், 13 மே, 2019

இலங்கையின் 9 மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ எஸ் ஐ எஸ் .... வெளிவரும் புலனாய்வு ...

Jeevan Prasad : பாஸ்க்கு தாக்குதல்!
பாஸ்க்கு ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கி தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் குறிக்கோளாக இருந்தது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள்.
அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவர் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார்.
கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு - வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் தற்போது கைதாகி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள்.

விசாரணைகளின் பின் இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் காத்தான்குடி மற்றும் கல்முனை சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும்.
கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் உள்ள வீட்டில் இறந்த தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்களாவார்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.
துருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
நீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்ப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்தியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீட்டில்தான் குடியிருந்துள்ளார். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார்.
கட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை , டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45'000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்து தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில் , வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
விட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் வரும் குண்டுதாரி 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார்.
தற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறி சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மறஇறும் இடங்களை கண்டறிந்துள்ளனர்.
தொடரும் ....

கருத்துகள் இல்லை: