வியாழன், 1 நவம்பர், 2018

சம்பந்தர் மகிந்தாவிடம் : உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது”:

“உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது”: மஹிந்தவிடம் கூறிய சம்பந்தன்BBC :“நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும்.
அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்” என்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
முன்னதாக தமிழ் மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்ஷவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி எதனைச் சாதித்திருக்கின்றதென்ற கேள்வி இருக்கின்றது.
இவ்வாறு கடந்த நான்கு வருடமாக நல்லாட்சி அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் அல்லது முடிவுகளும் கைநழுவிப் போயுள்ள சூழலையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.”
“ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இறுக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.”
“இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத இரண்டு தரப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.
அவ்வாறு ஆதரவளிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆகவே நடுநிலை வகிப்பதுதான் சிறந்தது.” என்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டதால் இலங்கை அரசியலில் சர்ச்சைகள் எழுந்தன.
நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: