வெள்ளி, 2 நவம்பர், 2018

பொதுச் வேலை திட்டம் அமைத்து பேசித் தீர்ப்போம்,, ராகுல் - சந்திரபாபு நாய்டு .

மின்னம்பலம் :
தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த தெலுங்கு தேசம்!
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் ஓரணியாகவும், காங்கிரஸோடு நெருடல் கொண்ட வேறு சில மாநிலக் கட்சிகள் ஓரணியாகவும் இருக்கக்கூடும் என்பதே சில நாட்களுக்கு முந்தைய இந்திய அரசியலின் நிலைமை. காங்கிரஸை மாயாவதி தாக்குவதும், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் அல்லாத அணி என்றும் சொல்லிவருவதுமான நிலைமையில் ‘மகா கட்பந்தன் என்பதெல்லாம் நடக்காத ஒன்று’ என்று பாஜக உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், நேற்று (நவம்பர் 1) இந்த நிலையை மாற்றுவதற்கான தொடக்கப் புள்ளியை இட்டு, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தெலுங்கு தேசம். ஆம்... நேற்று டெல்லி 10, ஜன்பத் சாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக அளித்த பேட்டி பாஜகவின் வயிற்றில் ‘ஆந்திரப் புளியை’க் கரைத்திருக்கிறது.

“நாடு இப்போது இக்கட்டான நிலைமையில் இருக்கிறது. நாடு காப்பாற்றப்பட, நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் காப்பாற்றப்பட நாங்கள் இணைய வேண்டியது ஜனநாயகத்தின் கட்டாயம்” என்று ராகுல் காந்தியோடு நின்று அறிவித்தார் சந்திரபாபு நாயுடு.
“நாங்கள் மட்டுமல்ல... பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுத் தளத்தில் இணைய வேண்டும்” என்றும் திறந்த அழைப்பு விடுத்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
கடந்த மார்ச் மாதம் வரை மத்திய அரசில் அங்கம் வகித்தும், பாஜகவின் கூட்டணிக் கட்சியாகவும் இருந்த தெலுங்கு தேசம், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் பிரதமரைக் கண்டித்து கூட்டணியிலிருந்து வெளியே வந்தது. வாஜ்பாய் காலத்திலிருந்து 2008 வரை பாஜக தலைமையிலான என்டிஏவின் அமைப்பாளராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இப்போது பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் அறிவிக்கப்படாத அமைப்பாளராகிவிட்டார்.
ஜெகன் தாக்குதலும் பாஜக ஆவேசமும்
அக்டோபர் 25ஆம் தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்டார். அவரை விமான நிலைய ஹோட்டல் ஊழியர் சீனிவாச ராவ் என்பவர் கடுமையான பாதுகாப்பையும் தாண்டி கத்தியால் கையில் குத்திவிட ரத்தம் பீறிட்டது. இது ஆந்திராவில் கடுமையான பரபரப்பைக் கிளப்பியது. இப்போது சந்திரபாபுவுக்கு எதிரான ஜன சங்கல்பா யாத்திரை மேற்கொண்டுவரும் ஜெகன், ஒரு வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத் திரும்புகிற நேரத்தில்தான் விசாகப்பட்டினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உடனே பாஜக தரப்பில் கடுமையான கண்டனம் எழுந்தது. கடந்த மே மாதம் பாஜக தலைவர் அமித் ஷா திருப்பதி வந்தபோது தெலுங்கு தேசத் தொண்டர்கள், அமித் ஷாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். அப்போது அமித் ஷாவின் கான்வாயில் வந்த ஒரு கார் மீது கல்வீசப்பட்டது. அதை இப்போது சுட்டிக்காட்டிய ஆந்திர பாஜக, "அன்று எங்கள் தலைவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று ஜெகன் மோகன் மீது தாக்குதல் நடக்கிறது. பவன் கல்யாண் மீதும் தாக்குதல் முயற்சி நடந்தது. மாநில பாஜக தலைவர்களும் தாக்கப்படுகிறார்கள். ஆந்திராவின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. ஜெகன் மோகன் தாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது பாஜக.
இதுபற்றி உளவுத் துறையோடு ஆலோசித்தார் ஆந்திர முதல்வர். இந்தச் சம்பவங்களில் சிலரது சதித் திட்டம் இருப்பதும், அதன் உச்சம் ஆந்திராவின் சட்டம் ஒழுங்கு பற்றிய ஆபத்தான கேள்விகளை எழுப்புவதும்தான் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்க, அதன் பிறகுதான் 27ஆம் தேதி டெல்லி சென்றார் சந்திரபாபு.
கேந்திரமான ஆந்திர பவன்!

தெலங்கானாவில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும் கூட்டணி வைத்திருக்கின்றன. இந்த சீட் பங்கீட்டுக்காக காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தோடு அடிக்கடி பேசி வந்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. பாஜகவைக் கை கழுவியாகிவிட்டது. ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கே உரிய அதிருப்தியையும் எதிர்கொண்டாக வேண்டும். அதனால் ஆந்திராவிலும் காங்கிரஸோடு கூட்டணி வைக்கலாம் என்று தன் கட்சியினரிடையே ஆலோசித்த சந்திரபாபு நாயுடு, ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்லியிருக்கிறார். ‘நம்மை நம்ப வைத்துக் கழுத்தறுத்த மோடியை மீண்டும் டெல்லி பக்கம் வரவிடக் கூடாது' என்பதுதான் அது.

அதை ஒட்டியே சந்திரபாபு நாயுடுவின் கடந்த சனிக்கிழமை டெல்லி பயணம் அமைந்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஷரத் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா என்று பல்வேறு தலைவர்களிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிவிட்டுதான் டெல்லிக்கே சென்றார் சந்திரபாபு.

அனைவரிடமும், ‘மோடி மீண்டும் வராமல் இருப்பதற்கான வழி நாம் எல்லாரும் ஒன்றிணைவதுதான்’ என்று பேசி பொதுத் தளத்தை உருவாக்குவதற்கான முயற்சியை முடுக்கிவிட்டார் சந்திரபாபு.
நாட்டைக் கவனிக்க வைத்த நவம்பர் 1
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 1) காலை மீண்டும் டெல்லி சென்ற முதல்வர் காலையிலேயே குலாம் நபி ஆசாத்தோடு விரிவான பேச்சு நடத்தினார். ஏற்கெனவே ராகுலைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்த சந்திரபாபுவுக்கு நேற்று மதியம் 3.30க்கு ராகுல் காந்தியைச் சந்திக்கலாம் என்று குலாம் நபி ஆசாத் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் வேறு, மாநிலக் கட்சிகள் வேறு என்ற நிலையைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸை உள்ளடக்கிய மாநிலக் கட்சிகளின் அணி என்ற சந்திரபாபு நாயுடுவின் நிலைப்பாடு காங்கிரஸுக்கு இப்போது பெரும் ஆறுதலாகவும், தேவையாகவும் இருப்பதால் சந்திரபாபுவைச் சந்திக்க ஆவலாகவே இருந்தார் ராகுல்.
பிரதமர் முக்கியமல்ல தேசமே முக்கியம்
சுமார் முக்கால் மணி நேர பேச்சுக்குப் பிறகு ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் தேசத்தின் அரசியலுக்குத் திருப்புமுனையாகி விட்டன.

“இருவரும் கடந்த காலம் பற்றிப் பேசவில்லை, நிகழ்காலம் பற்றி, எதிர்காலம் பற்றி பேசினோம். நாட்டின் சூழல் பற்றி நாட்டின் ஜனநாயகம் காக்கப்படுவது பற்றிப் பேசினோம். கொள்கை அளவில் இணைந்துள்ளோம். மற்றவை பிறகு விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்றார் ராகுல் காந்தி.
தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “உங்களில் பலருக்கு எங்களின் கடந்த காலம் பற்றி நினைவு வரலாம். நாங்கள் இப்போது ஒன்று சேர்ந்திருப்பது ஜனநாயகத்தின் கட்டாயம். நாட்டைப் பாதுகாக்க நாங்கள் இணைந்திருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, பாஜகவை எதிர்க்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ஒருங்கிணைக்க விரும்புகிறோம். பொதுச் செயல் திட்டத்தை உருவாக்கி எதிர்காலத்தில் செயல்பட முடிவு செய்துள்ளோம். நான் நாற்பது ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இது போன்றதொரு நிர்வாகச் சீர்கேட்டையும், அரசு அமைப்புகள் சிதைக்கப்படுவதையும் நான் பார்த்ததே இல்லை” என்று குறிப்பிட்டார்.
பாஜகவுக்கு எதிரான இந்த அணியின் முகம் யார், தலைமை வகிப்பது யார் என்று தொடர்ந்து கேள்விகள் வர, “உங்களுக்கு சென்சேஷனல் தேவைப்படுகிறது. நாங்கள் இப்போது கருத்தளவில் இணைந்துள்ளோம். பிறவற்றைப் பேசிக்கொள்வோம்” என்றார் ராகுல் காந்தி.
அப்போது சந்திரபாபு நாயுடு, “நீங்கள் (ஊடகங்கள்) பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறீர்கள். நாங்கள் இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிறோம். யதார்த்தமான உண்மை என்னவென்றால் காங்கிரஸ் கட்சிதான் முக்கியமான எதிர்க்கட்சியாக இருக்கிறது. நாங்களும் எதிர்க்கட்சிகளாக இருக்கிறோம். எனவே பொதுச் செயல் திட்டம் அமைத்து எல்லாவற்றையும் பேசித் தீர்ப்போம்” என்று கூறினார் சந்திரபாபு.
திமுகவையும் அழைப்போம்
தமிழகத்தில் திமுக தலைவரை நீங்கள் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக திமுகவோடும் பேசுவோம். மிக விரைவில் திமுகவோடு இதுகுறித்துப் பேசப் போகிறேன்” என்றார் சந்திரபாபு.
ஆந்திர முதல்வர் இனி வாரந்தோறும் அல்லது அடிக்கடி டெல்லி செல்வதும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதும் தன் வேலை என்று முடிவெடுத்துவிட்டார். அதேநேரம் ஆந்திராவில் இப்போதே பிரதமர் வேட்பாளருக்கு சந்திரபாபு நாயுடுவே பொருத்தமானவர் என்று பேச்சுகள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
- ஆரா

கருத்துகள் இல்லை: