வியாழன், 1 நவம்பர், 2018

ஸ்டாலின் : சி பி ஐ .. மத்திய வங்கி போன்ற தன்னாட்சி அமைப்புகளைச் சிதைக்க வேண்டாம்!

தன்னாட்சி அமைப்புகளைச் சிதைக்க வேண்டாம்!
மின்னம்பலம்: தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளையும் மீட்க முடியாத அளவுக்குச் சிதைத்து விட வேண்டாம் என்று மத்திய பாஜக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. உலகம் போற்றும் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து முன்பு ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேற்றினார்கள். இப்போது அடுத்தகட்டமாக தற்போதுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் வரலாறு காணாத நெருக்கடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்து சீர்குலைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று மத்திய அரசின் குறுக்கீடு குறித்து எச்சரித்த பிறகும், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், “கார்ப்பரேட் முதலாளிகளை” காப்பாற்றவும் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் “பல்லாயிரம் கோடி” கடன்களைப் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி, கிங்ஃபிஷர் விஜய் மல்லையா போன்றவர்களை எல்லாம் “பறக்க அனுமதித்த” மத்திய பாஜக அரசு, இதுபோன்ற பொருளாதார விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது
“கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்” “வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன்” என்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாத பாஜக அரசு, இப்போது ரிசர்வ் வங்கியை வம்புக்கு இழுத்து தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க முயல்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தங்கள் தோல்விகளை மறைக்க இதுவரை எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத “பிரிவு 7-ஐ” பயன்படுத்துவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – நிர்வாக சுதந்திரத்தைத் தோற்கடிக்கும் திட்டமிட்டச் செயல் என்று விமர்சித்துள்ள அவர், “ “திசை மாறி தடுமாறிச் சென்று கொண்டிருக்கும் பொருளாதாரத்தைச் சீராக்க பாஜக அரசுக்கு எஞ்சியிருக்கின்ற நாட்களில் கூட நிர்வாகத் திறமை இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளையும் மீட்க முடியாத அளவுக்குச் சிதைத்துவிட வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: