வியாழன், 1 நவம்பர், 2018

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுகிறது..

tamil.indianexpress.com : இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுகிறது. இலங்கை அரசியல் பெரும் பெரும் சவால்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. கடந்த வாரம், இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக அறிவித்தார் மைத்ரிபால சிறிசேனா. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வந்தன
 ரணில் விக்ரமசிங்கே நான் தான் பிரதமர் என்று கூறி, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிக் கொண்டார். ஆனால் அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவித்தார் சிறிசேனா. நவம்பர் 16ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ல் திறக்கப்படுகிறது ஆனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் சபா நாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் தொடர்ந்து, சிறிசேனாவிடம் நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வந்தனர்.
 கரு ஜெயசூர்யா கடிதம் மூலமாகவும் நேரிலும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயத்தினை சிறிசேனாவிற்கு நேற்று (31/10/2018) எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற முடக்க உத்தரவினை தளர்த்தியுள்ளார் மைத்ரிபால சிறிசேனா. நாடாளுமன்ற முடக்க உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க போவது யார் ? 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் மைத்ரிபால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் உறுப்பினர்கள் மொத்தம் 95 இடங்களை மட்டுமே பிடித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவின் யுனைட்டட் நேசனல் பார்ட்டி 106 இடங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 5ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: