வெள்ளி, 8 ஜூன், 2018

தமிழர்களை மருத்துவ துறையில் இருந்து ஒழித்து கட்டவே - நீட் - National Elimination Test for Tamils


Narain Rajagopalan  :  நீட்டிற்கு எதிரான ஏராளமான
என்னுடைய கட்டுரைகளில் ஒரு இடத்தில் இதை National Elimination Test for Tamils என்று எழுதி இருப்பேன். நடப்பதை எல்லாம் பார்த்தால் அதை செய்ய முடிவெடுத்து விட்டார்கள் என்று தெரிகிறது.
நீட்டிற்கு முன்பாக இந்திய ஒன்றியத்திலேயே சிறப்பான மருத்துவர்களை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. நீட் உள் நுழைத்தப் பிறகு இந்திய ஒன்றியத்திலேயே தேர்ச்சி விகிதத்தில் கடைசியில் தமிழகம் இருக்கிறது. ஆக, சிக்கல் தகுதித் தேர்வில் இருக்கிறதேயொழிய, மருத்துவ முனைப்புகளில் இல்லை.
அனிதா, சிவசங்கரி, பிரதீபா, சுபஸ்ரீ என வரிசையாய் (தற்) கொலைகள். எல்லா மரணங்களுக்கும் பொங்கலாம். RIP ஸ்டேட்டஸ் போடலாம். அவர்களின் குடும்பத்தின் முன் சமூகமாய் மன்னிப்புக் கேட்கலாம். 'அடேய் எதேச்சதிகார இந்திய அரசே' என்று அறைக்கூவல் விடலாம். இதில் எதுவுமே பயனில்லை.
சட்டரீதியாக இதை நீக்காமல் நமக்கு வாய்ப்புகளே இல்லை. சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பட்ட நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்கிற சட்ட முன்வரைவு கிடப்பில் போடப்பட்டு அப்படியே இருக்கிறது. மோதிமுக அரசின் அமைச்சர்கள், நீட் தகுதித் தேர்வுக்காக அரசே இலவச பயிற்சி மையங்களை நடத்தும் என்று சொன்னார்கள். அரசு நடத்திய பயிற்சி மையங்களையும் சேர்த்து தான் (தனியார்களுக்கு இலட்ச இலட்சமாக கொட்டி கொடுத்தது தனி) இன்றைக்கு தமிழகம் கடைசி நிலையில் தள்ளப் பட்டு இருக்கிறது. ஆக, இங்கே சிக்கல் பயிற்சி மையங்களோ, படிப்போ கிடையாது. இந்த தேர்வே தமிழ் மாணவ, மாணவியர்களுக்கு எதிராக கட்டமைப்பட்டு இருக்கிறது.
அஞ்சலிக் கட்டுரைகள், எமோஷனல் கண்ணீர் விடல்களில் எனக்கு நம்பிக்கைப் போய் வருட கணக்காகிறது. தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கலாம் என்று இபிகோ சொல்கிறது. அப்படியென்றால் நாம் அதிகப்பட்ச தண்டனையை அளிக்க வேண்டியது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, சிபிஎஸி இயக்ககம், மற்றும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தும் ஒன்றிய அரசின் மனித வளத்துறையின் கீழ் வரும் கல்வித் துறை.

நீட்டினை தமிழகத்திலிருந்து முழுமையாக விலக்காமல் நம்முடைய எதிர்கால மருத்துவர்களை வெறும் போட்டோக்களாகவும், சமாதிகளாகவும் தான் நம்மால் பார்க்க முடியும். முதல் தலைமுறை பட்டதாரிகளின் உருவாக்கம் எப்படி திராவிட அரசியல் இயக்கங்களால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டதோ, அதைப் போல முதல் தலைமுறை மருத்துவர்கள் தான் தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்தை தீர்மானிப்பார்கள்.
நாம் காவுக் கொடுத்துக் கொண்டு இருப்பது யாரோ நான்கு பெண்களையோ, ஆண்களையோ அல்ல, மாறாக நம் கண் முன்னால் அழித்து ஒழிக்கப் படுவது தமிழ்நாட்டின் மருத்துவ எதிர்காலம். பொது சுகாதார மண்டலங்களின் எதிர்காலம். பப்ளிக் ஹெல்த்தின் எதிர்காலம். மொழியே புரியாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து மருத்துவராகும் ஆட்கள், தனியார் மருத்துவமனைகளில் சம்பாதிப்பார்கள். சாமான்யர்களுக்கான மருத்துவம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்பட்டு, எட்டாக்கனியாகும். நாளை அரசாங்களுக்கு வேறு வழியில்லாமல், பொது சுகாதாரத்தினை தனியாருக்கு தாரை வார்க்கும் சூழல் உருவாகும். இந்த மோசமான எதிர்காலத்தை தான் ”ஒரே இந்தியா, ஒரே தகுதித் தேர்வு, ஒரே விதமான மருத்துவர்கள்” என்கிற மாய்மால வித்தையைக் காட்டி விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
நம் முன் இருப்பது இரண்டே வழிகள் தான் - டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தரமாக நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வாங்குவது அல்லது டெல்லியின் அதிகாரத்திலிருந்து மொத்தமாய் தமிழ்நாட்டை வெளியேற்றி விலக்குவது. எதை யார் செய்யப் போகிறார்கள் என்பதை காலம் முடிவு செய்யட்டும்.
PS: நீட் என்பது சட்ட விரோதமான தகுதிச் சுற்றுத் தேர்வு என்கிற வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் ஒரு ஒரமாய் இருக்கிறது என்பது தகவலுக்கு.
#NoNEET #NEETisNotNeeded #BanNEET

கருத்துகள் இல்லை: