திங்கள், 4 ஜூன், 2018

நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !

விவசாயிகள் போராட்டம்
காய்கறிகளை வீதியில் வீசி நடைபெறும் போராட்டம்
வினவு :மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து 10 நாள் தொடர் போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை (01-06-2018) முதல் நாடெங்கும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர் . ’கிசான் ஏக்தா மன்ச்’ மற்றும் ‘ராஷ்டிரிய கிசான் மகா சங்கம்’ ஆகிய சங்கங்களின் சார்பில் 22 மாநிலங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தங்களது விளை பொருட்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கவும், விளை பொருள் கொள்முதலில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், விவசாயக் கடனை ரத்து செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் போராடுகின்றனர்.
போராட்டத்தின் காரணமாக விவசாய விளைபொருட்களான காய்கறி, பழவகைகள் ஆகியவற்றின் வினியோகம் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளது. பால் வினியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், விலை கிடைக்காத தங்களது விளைபொருட்களை வீதியில் வீசி வருகின்றனர். பாலையும் நடுவீதியில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல்வேறு  நகரங்களில் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றது. லூதியானா, மோகா, முக்சர், குருஷேத்ரா, ஃபதேஹாபாத் மற்றும் சோனிபட் ஆகிய பகுதிகளில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இப்போராட்டம் குறித்து ஹரியானா பா.ஜ.க. அரசின் முதல்வரான கட்டார் கூறுகையில், ”அரசுக்கு எதிராகப் போராடுவதால் ஒரு பலனும் கிடைக்காது. தொடர்ச்சியாக விவசாயிகளுக்கான நலனுக்கு பல வகைகளிலும் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது அரசு. பயிர் நிவாரணத் திட்டம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விலை ஊசலாட்டத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டம் மற்றும் பாசன வளர்ச்சி திட்டம் என பல வகைகளிலும் அரசு விவசாயிகளுக்கு உதவியுள்ளது” என்று கூறினார். இவ்வளவு பெரிய போராட்டம் இந்த அமைச்சரது ‘உண்மைகள்’ தெரியாமல்தான் நடைபெறுகிறது போலும்!
மேலும், “விளை பொருட்களையும், பாலையும் வீதியில் வீசச் செய்ய விவசாயிகளை தூண்டியவர்களை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். விவசாயிகளை அவ்வாறு செய்யத் தூண்டுபவர்கள் மிகப்பெரிய எதிரிகள். விளை பொருட்களை விநியோகத்திற்கு அனுப்பவிடாமல் விவசாயிகளைத் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உயிரையே தூக்கில் தொங்கவிடும் விவசாயிகளை மதிக்காத அரசு அவர்கள் விளைவிக்கும் காய்கறி, பாலுக்காக ஓநாய் போல அழுகிறது!
இது குறித்துக் கருத்துக் கூறிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், விவசாயத்தை மோசமான நிலைக்குத் தள்ளிய மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், தமது நிலையை அரசுக்கு உணர்த்த விவசாயிகள் வீதிக்கு வரவேண்டிய அவல நிலை நாட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் போது அவர்கள் வேறென்ன செய்ய முடியும்? அவர்களது நெடுநாள் கோரிக்கையான விவசாயக் கடனை ரத்து செய்ய மறுக்கிறது மத்திய அரசு. விவசாய பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். விவசாயிகளை பாஜக வேகமாக ஒடுக்குவதற்கு காங்கிரசு கட்சிதான் முன்னோடி! இருப்பினும் தங்களையே விஞ்சுவதால் இவர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இப்போராட்டம் குறித்துக் கூறுகையில்,  “ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதற்கான முயற்சிதான் இந்த விவசாயிகள் போராட்டம்.  சில வழமையற்ற செயல்களைச் (காய்கறிகளை வீதியில் வீசுதல், பாலை தரையில் கொட்டுதல்) செய்வதன் மூலம், விவசாயிகள் ஊடக கவனத்தைப் பெற முயற்சி செய்கின்றனர்” என்று கடந்த சனிக்கிழமை கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரின் இப்பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றதாக இருக்கிறது” என ராஸ்டிரீய ஜனதாதளம் கட்சி கூறியுள்ளது. முன்னாள் அரியானா முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா கூறுகையில் “மத்திய – மாநில அரசுகளின் விவசாயக் கொள்கையானது, விவசாயிகளுக்கு மரண அடியாக உள்ளது. தங்களது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத சூழலில், அவர்கள் எவ்வாறு வங்கிக்கடனை திரும்ப செலுத்த முடியும்? சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையை கொடுக்காத பட்சத்தில், அரசாங்கம் எந்த முகத்துடன் விவசாயிகளிடம் கடனைத் திரும்பக் கேட்க முடியும்?” என்றார்.

விவசாயிகள் போராட்டம்
பாலை வீதியில் ஊற்றி போராடும் பால் உற்பத்தியாளர்கள்
விவசாயிகளின் இப்போராட்டம் காரணமாக, ஹரியானா மாநிலத்தின் பால் வளத்துறையின் கீழ் செயல்படும் ‘விட்டா பால் நிறுவனத்திற்கு’ வழக்கமாக வரும் பால்வரத்து 76,000 லிட்டரிலிருந்து, 5,862 லிட்டராகக் குறைந்தது. வினியோகிக்கும் அளவுக்கு தற்போதைக்கு பால் கையிருப்பு உள்ளதாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பால் விநியோகம் தடைபடும் என்றும் அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங், விவசாயிகளையும் மோடியைப் போல் விளம்பர மோகியாக எண்ணிவிட்டாரோ என்னவோ, விவசாயிகள் ஊடக விளம்பரத்துக்காகவே போராடுவதாக திமிர்த்தனமாகக் கூறி மோடியின் குரலை அப்படியே தெளிவாகப் பேசியுள்ளார்.
மத்திய அரசின் மோசமான விவசாய கொள்கைகளால்தான், கடும் உழைப்பில் உருவான தங்களது விளைபொருட்களை தாமே வீதியில் வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள். இங்கு நாம் சொல்ல வேண்டியதை ஹரியானா முதல்வர் கட்டாரே தெளிவாகக் கூறியுள்ளார்.
“விளை பொருட்களையும், பாலையும் வீதியில் வீசச் செய்ய விவசாயிகளை தூண்டியவர்களை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்”
  • வினவு செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை: