வெள்ளி, 8 ஜூன், 2018

நடிகை வரலட்சுமி : ”பாஜக தலைவர் முரளிதரராவ் என்னை சந்தித்துப் பேசினார்!

அரசியல் என்ட்ரி: வரலட்சுமி விளக்கம்!மின்னம்பலம : பாஜகவில் தான் இணைந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
பாஜக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கையை பாஜக தலைவர்கள் அளித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடிகை வரலட்சுமியை சந்தித்தும் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் சாதனை அறிக்கையை நேற்று வழங்கினார்.
இதையடுத்து நடிகை வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ”பாஜக தலைவர் முரளிதரராவ் என்னை சந்தித்துப் பேசினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மிக இனிமையான சந்திப்பாக அமைந்தது. பிரதமர் நரேந்திர மோடி எங்களுடைய கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்குள் இந்த சந்திப்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பியவர்களுக்குச் சொல்கிறேன், நான் பாஜகவில் மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது வரலட்சுமி விஜய் 62, மிஸ்டர்.சந்திரமௌலி, காதல் மன்னன், சக்தி, நீயா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: