ஞாயிறு, 3 ஜூன், 2018

துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி... சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர்,,

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் - துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரிமாலைமலர் :போலீசாரின் எப்.ஐ.ஆரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி கோபால், நான் எந்த புகாரும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார்.
துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியதாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

அதில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 22-ந்தேதி நான் தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்தேன். அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் புகார் அளிக்கவும். ஆனால் நான் முன்பு பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே இதுபற்றி உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த கடிதம் காவல்துறை வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க செயலாளர் செந்தூர்ராஜன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து உள்ளன.
கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் புகார் அளிக்கவில்லை என மறுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வருவாய்த்துறை அலுவலர்களை இது போன்ற பொய்யான புகார் அளிக்க வற்புறுத்துவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரை குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: