வெள்ளி, 8 ஜூன், 2018

“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்

thetimestamil :ஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது.
ப. ஜெயசீலன் :
  spoilers எதுவும் இல்லை..தைரியமாக படிக்கலாம்.
;art (கலை) :the expression or application of human creative skill and imagination, typically in a visual form such as painting or sculpture, producing works to be appreciated primarily for their beauty or emotional power”
அழகியல் சார்ந்தும், உணர்வெழுச்சி சார்ந்தும், ஓவியம்/சிற்பம் முதலான காட்சி வடிவங்கள் பிரயோகித்து/துணைகொண்டு வெளிப்படும் மனிதர்களின் படைப்பு திறன் மற்றும் கற்பனை திறன்.
மேல்சொன்னது கலை என்பதற்கான வரையறை. ஒரு பொருள்/வெளிப்பாடு எப்படி/எதனால் கலையாக மாறுகிறது?. ஒரு படைப்பு கலையாக மாறுவதற்கு காலம்/வெளி (time and space) முக்கிய காரணியாக விளங்குகிறது.
இரண்டு உதாரணங்கள். நீங்கள் தினமும் அணியும் ஜீன்ஸ் பேண்டுக்கு தற்காலத்தில் எந்த கலாபூர்வ அந்தஸ்தும் கிடையாது. அது வெறும் அழுக்கு ஜீன்ஸ். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அகழ்வாராய்ச்சியில் உங்களது ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அது விலைமதிக்க முடியாதா புராதான கலை பொருளாக அது கருதப்படும். இங்கு அதன் கலைத்தன்மையை “காலம்” தீர்மானிக்கிறது.

உங்களது குழந்தை தினமும் பேப்பரில் நிறைய வரைகிறார்கள். நீங்கள் அதை கலை பொருளாக பார்ப்பதில்லை. ஆனால் ஈழ இறுதியுத்தத்தில் அங்கு சிக்குண்டு இறந்த குழந்தைகளின் கிறுக்கல்களை நீங்கள் ஒரு கண்காட்சியாக்கினால் அங்கு வருபவர்களின் பார்வையில் அந்த கிறுக்கல்கள் அற்புதமான ஓவியங்களாக தெரியும். இங்கு அதன் கலைத்தன்மையை தீர்மானிப்பது யுத்தத்தில் இறந்த குழந்தைகளின் கிறுக்கல்கள் காட்சியாக்கப்பட்டிருக்கும் அந்த அரங்க “வெளி”. ஒரு வெளிப்பாடு எப்படி கலையாக, கலைக்கான மதிப்பை பெறுகிறது என்று இப்பொழுது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதன் அடிப்படையில்தான் “காலா” அற்புதமான கலை படைப்பாக விஸ்வரூபமெடுக்கிறது.
“காலா” இதுவரை வந்த எல்லா ரஞ்சித் படங்களை போலவே பல்வேறு தளங்களில் விரிகிறது. ரஞ்சித்தின் யுக்தி என்பது ஒரு கதையின் ஊடாக வெவ்வேறு தளங்களில்,வெவ்வேறு அரசியல்/நம்பிக்கைகள்/கலாச்சாரம்/பின்னணி கொண்டவர்களிடம் வெவ்வேறான உரையாடல்களை நிகழ்த்தும் சாகசம். ரஞ்சித் மிக லாவகமாக காலாவிலும் இதை செய்கிறார். உதாரணத்திற்கு “கபாலி”யை நீங்கள் ஒரு action drama என்ற வகைமைக்குள் கண்டு களிக்க விரும்பினால் உங்களால் அதை எளிதாக செய்ய முடியும். நீங்கள் அதே படத்தை தலித்திய அரசியல் பேசும் படமாகவும் பார்க்க முடியும். ஒரே படத்தின் ஊடாக ரஞ்சித் பல்வேறு தளங்களில் தனது பார்வையாளனிடம் காத்திரமாக விவாதிக்கிறார். இது அவரது உள்ளடக்கம் சார்ந்த கதை சொல்லும் முறை. இதை தவிர்த்து இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு,அரங்கமைப்பு என்று அவரது படங்கள் பல்வேறு தளங்களில் மிக நுட்பமான கலாபூர்வமான வெளிப்பாட்டு தளங்களில் இயங்குகிறது. நான் நம்புவதை போலவே இந்திய தலித்துகள் அமெரிக்க கருப்பினத்தவரின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று ரஞ்சித் நம்புகிறார். நான் நம்புவதை போலவே ரஞ்சித்தும் அமெரிக்க கருப்பினத்தவரின் எழுச்சியில் அவர்களின் கலைவடிவங்கள் பெரும் சமூக பண்பாட்டு புரட்சிக்கு உதவின என்று நம்புகிறார். அதனால்,அவரால் தனது திரைப்படங்களின் ஓவ்வொரு துறையையும் கூர்மையான கத்தியை போல பயன்படுத்த முடிகிறது. காலாவில் அவர் மிக நுட்பமாக, ஒரு மனோநல மருத்துவரின் சாமர்த்தியதோடு தனது கருத்துக்களை தனது பார்வையாளனுக்கு கடத்துகிறார். பேச நிறைய இருக்கிறது. ஆனால் அவரின் “காலா” பேசும் சமகால காவி அரசியல் பயங்கரவாதத்தை எப்படி time/space துணைகொண்டு ஒரு முக்கியமான கலைபடைப்பாக மாற்றியிருக்கிறார் என்பதை பற்றி மட்டுமே இந்த கட்டுரை.
இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டு, அமெரிக்கா தாலிபான்களுக்கு எதிரான போரை அறிவித்த காலத்தில் மேற்கத்திய செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அரபு மொழி பேசும், தாடி வளர்த்து, தொப்பி அணிந்த தாலிபான் தீவிரவாதிகளை காட்டி வந்தார்கள். தீவிரவாதம் பற்றிய செய்தியோ, தீவிரவாத தாக்குதலோ உலகின் எந்த மூலையில் என்ன காரணத்திற்கு நடந்தலும் அந்த செய்தி ஒளிபரப்பாகும்போது அரபு மொழி பேசும் தாடி,தொப்பி அணிந்த யாராவது அல்லது பின்லேடன் பேசும் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. இதன் மனோவியல், உளவியல் தாக்கங்கள் இன்றுவரை மேற்கத்திய நாடுகளில் தொடர்கிறது. இஸ்லாமிய அடையாளத்துடன் யாரிருந்தாலும் அவர்களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி வெறுக்கும், அஞ்சும் நிலை மேற்கத்திய சமூகங்களில் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் போன்ற மிக முற்போக்கான நாடுகள் கூட பொது இடங்களில் பர்தா அணிய சென்றாண்டு தடைவிதித்ததை நாம் பார்த்தோம். இதுதான் காட்சி ஊடகங்களின் வலிமை. காட்சி ஊடகங்களில் நாம் பார்க்கும் காட்சிகள் நாம் நினைத்து பார்த்திராத மனோவியல் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஒரு காட்சி ஊடகத்தை கையாளும் திறன் பெற்ற ஒருவரால் ஒரு சாமானியனை வெகு லாவகமாக manipulate செய்ய முடியும். கமலின் விஸ்வரூபம் அதற்கு ஒரு classic example. படத்தின் தீவிரவாத காட்சிகளின் போது இஸ்லாமியரின் வேண்டுதல் முறையை/இசையை ஒரு பின்னணி இசைபோல பயன்பட்டிருக்கும். அதுபோன்ற காட்சிகளை பார்க்கும் பார்வையாளனுக்கு படம் முடிந்து வெளிவந்த பின்பும் அந்த நமாஸ் இசை ஆழமாக பதிந்திருக்கும். அவரது தெருவில் தொழுகை செய்யும் இஸ்லாமியரை பார்த்தாலோ, தொழுகை ஓசை கேட்டாலோ இயல்பாக அவர்களது மனதின் ஓரத்தில் அதை தீவிரவாதத்தோடு தொடார்புபடுத்தும், அச்சம்/வெறுப்பு கொள்ளும். காலம் காலமாக இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் தலித்துகளுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும், பெண்களுக்கும் எதிராக தெரிந்தும்/தெரியாமலும் மிக நுட்மாக நடத்தப்பட்டு வந்த இது போன்ற உளவியல் தாக்குதலை ரஞ்சித் முறியடித்ததோடு நில்லாமல் காலாவில் வலுவான எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இந்தியாவில் சம காலத்தில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பார்ப்பனிய அடிப்படைவாத ஹிந்துத்வ பாசிஸ்டுகளுக்கு எதிரான குரல்கள் ஓவ்வொன்றாக விலைக்கு வாங்கப்படுகின்றன, அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கொன்று மௌனிக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு வடிவங்கள் முழுமையாக அவர்களால் கையகப்படுத்தப்படுகின்றன, பட்டிருக்கின்றன. தலித்துகளின் சேரிகளில் புட்டு விரும்பி சாப்பிடும் பிரம்மாண்ட விநாயகர்கள் தொந்தி தள்ளி உட்காந்திருக்கிறார்கள். நாடார், தேவர், கவுண்டர் என்று தமிழ்நாட்டின் சாதிகள் பார்ப்பனிய மதத்தின் முன் மனமுவந்து மண்டியிட்டு நிற்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. உண்மையை சொல்ல வேண்டுமானால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக்தின் கலாச்சார பண்பாட்டு தளத்தில் பார்ப்பனியம் வலுவாக காலூன்றியிருக்கிறது. இந்த “கால/வெளியில்” தான் காலா தனது எதிர்பரசியல் மூலம் தன்னை ஒரு முக்கியமான கலைபடைப்பாக நிறுவிக்கொண்டுள்ளது.



காலா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர் ரஞ்சித்
ரஞ்சித் இதில் குறியீடாக எதையும் பேசவில்லை. மிக நேரடியாக காவிகளின் புனித பிம்பமான ராமரை எதிர்கொள்கிறார். விஷ்ணுவின் இன்னொரு பெயரான “ஹரி”யை தனது பெயராக கொண்ட, விஷ்ணுவின் அவதாரமான ராமரை பூஜிக்கும் ஹரி தாதா ஒரு சில்லறைத்தனமான சைக்கோ மண்டையனாக, தனது புனித நூல்களின் வழி(வால்மீகி எழுதிட்டாரு..கொன்னுதானே ஆகணும்) கொன்றொழிப்பதையும், ராமருக்கு பூஜை செய்வதையும், அதிகாரம் என்பதை மற்றவர்களின் உரிமையை பிடுங்கி அடையும் சந்தோஷமாக கருதிகொள்ளும், நவீன சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல் இன்னமும் தனது மூதாதையர்களின் கத்தியை துரு பிடிக்காமல் பார்த்து கொள்ளும் ரத்தவெறி பிடித்த சில்லறை பயலாகவும் ரஞ்சித் கையாண்டு இருக்கிறார். ஹரிதாதவின் உளவியல் மிக நுட்பமாக பார்ப்பனிய கருத்தாக்க உளவியலை உள்ளடக்கியதாக இருக்கிறது. சரினா கதாபாத்திரத்தை ஹரி தாதா காலில் விழ எதிர்பார்க்கும் காட்சியில் ஹரிதாதாவின் முகத்தில் தெரியும் ஒரு sadistic ஏக்கம் பார்ப்பனிய கருத்தாக்கத்தின் nutshell என்று சொல்லலாம்.
ஹரிதாதாவின் கோமாளித்தனங்களை, சைக்கோத்தனங்களை பார்க்கும் அதே வேளையில் நாம் ஹரிதாதாவின் எதிர் வடிவமான காலா கதாபாத்திரத்தை பார்க்கிறோம். அம்பேத்கரின், புத்தரின், லெனினின், பெரியாரின் அடையாளங்கள் சூழ அடையாளப்படுத்தப்படும் காலா பிறரின் சுயமரியாதையை மதிப்பவனாகவும், சுயமரியாதையை வலியுறுத்துபவனாகவும், கடைபிடிப்பவனாகவும் இருக்கிறார். பார்பனீயத்துக்கு எதிரான எல்லா கருத்தாக்கங்களின், சிந்தனைகளின் தொடக்கமும்/மையமும் இந்த புள்ளிதான். காலா கதாபாத்திரமும் அதன் கண்ணியமான செயல்பாடுகளின் மூலம் நமக்கு ஹரி தாதா ஒரு சில்லறைத்தனமானவர் என்றே உணர்த்துகிறது. மிக குறிப்பாக வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்டு, அதிகாரத்தின் துணைக்கொண்டு ஹரி தாதா தனது பாதக செயலை செய்து கொண்டிருக்கும் போது ராமரை பூஜித்து கொண்டிருப்பதும், அந்த பூஜை காட்சிப்படுத்தபட்ட முறையும் தான் ரஞ்சித் காவிகளின் மீது நிகழ்த்திய வலுவான மனோவியல் தாக்குதல். காலா பார்த்தவர்களுக்கு இனி ராமரின் சிலை என்பது ஹரி தாதாவை சில மாதங்களுக்காவது நினைவுபடுத்தும். ஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது. ரஜினி என்னும் நட்சத்திரத்தை இயக்கக்கிடைத்த வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி சமகாலத்தில் சொல்லியே தீரவேண்டிய கருத்தை, சொல்லியே தீரவேண்டிய அரசியலை சொல்லி தனது அரசியலுக்கும்/கலைக்கும் மீண்டுமொருமுறை உண்மையாய் நடந்திருக்கிறார்.
இதனை தவிர்த்து காலா, சரினா இடையிலான அந்த restaurant காட்சி தனிப்பட்ட முறையில் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்ட்ட matured காதலர்களுக்கு இடையேயான private conversation மற்றும் காதல் காட்சிகளிலேயே one of the best என்பது எனது எண்ணம். அந்த இருவருக்குமான காட்சிகளில் வழியும் காதல் மிகவும் sensual and romantic.
காலாவில் இன்னும் பாராட்ட பல்வேறு தளங்கள் குறிப்பாக பெண்கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட முறை, மிக கவித்துமான அழைப்பை பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயங்கங்களுக்கு பறையிசையோடு விடுக்கும் இறுதிக்காட்சி, காலாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே படம் நெடுகிலும் விரியும் உறவு/நட்பு, இசை/பாடல் அரசியல்(சந்தோஷ் நாராயணன் பெருங்கலைஞன்) என்று நிறைய இருக்கிறது. சில குறைகளும் இருக்கிறது. ஆனால் considering the time and space without any doubt kala establishes itself as a terrific piece of art work and ranjith once again proves himself as a kick ass director.
அம்பேத்கரின் கருத்தியல் தாங்கி நிற்கும் வேங்கை மவன் ரஞ்சித் ஒத்தைல நிக்கான். கம்பீரமாக.
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை: