புதன், 9 மே, 2018

பட்டிமன்ற நடுவர் டாக்டர் அ. அறிவொளி காலமானார்


மாலைமலர் :திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனீபா காலனியை சேர்ந்தவர் டாக்டர் அ.அறிவொளி. தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளருமான இவர் சிறந்த பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.
டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று முறை மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை கொண்டு சென்ற இவர் புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
திருக்கோவில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பழமையும், பெருமையும் கொண்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும், சிறப்புக்களையும் ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர் ஆவார். 1986-ம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சிக்கல் ஆகும். தமிழ்த் தொண்டாற்றும் பொருட்டு திருச்சியில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டாக்டர் அ.அறிவொளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

Muruganantham Ramasamy : டாக்டர்.அ.அறிவொளி தமிழ் மெய்யியல் தரப்பாக
நின்று வெகுசன தளத்தில் பேசியவர்.. நிச்சயமாக சடங்குமுறை பேச்சாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நுட்பமான புரிதல்களை உள்ளடக்கிய பேச்சு அவருடையது.. இறையடியாராகவும், தமிழடியாராகவும் பிசகாமல் பயணித்த அவரின் ஆன்மா அவர்நம்பிய சிவனடியில் இளைப்பாறட்டும்..
முன்னை தான் நடந்து பின்னை என்னை நடவித்த முன்னோடிகளில் ஒருவரான அவருக்கு என் அஞ்சலி.

கருத்துகள் இல்லை: