வியாழன், 10 மே, 2018

எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை ...


மாலைமலர் :முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை, திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 16 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏப்ரல் 2-ந் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், அரசு குறும்படம் ஒன்றை பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட குறும்பட காட்சிகள்தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பெண் ஒருவர் கோவிலில் அர்ச்சனை செய்வது போன்று அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது.< தமிழக அரசின் இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட குறும்பட காட்சி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த சர்ச்சை ஓரளவு ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கோவிலுக்கு வரும் ஒரு தம்பதி, “பரணி நட்சத்திரம். பிரவீணுக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று அங்குள்ள குருக்களிடம் கூறுகிறார்கள்.

அந்த நேரத்தில் மூன்று சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குருக்களை அழைத்து, “அர்ச்சனை செய்ய வேண்டும். என் பேருக்கு அல்ல. சாமி பேருக்கு” என்று கூறுகிறார்.

குருக்களும், “பேஷா பண்ணிடலாம். எந்த சாமிக்கு” என்று கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், “நம்ம தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான். அவருதானே எனக்கு வேலை கொடுத்த சாமி” என்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வீடியோவும் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டதா?, அல்லது வேறு யாராவது சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு தரப்பில் விசாரித்தபோது, தமிழக அரசு சார்பில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்ட குறும்படம் நிறுத்தப்பட்டுவிட்டது. புதிதாக எந்த குறும்படமும் தியேட்டர்களுக்கு வழங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், தியேட்டர்களில் ஒளிபரப்ப ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று என்றும், எப்படியோ சமூக வலைதளங்களில் மட்டும் வெளியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. எனவே, அதுகுறித்து தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: