திங்கள், 7 மே, 2018

பாஜக எம் எல் ஏ கோபால் :பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமண நிச்சயத்தால் லவ் ஜிகாத்தை தடுக்கலாம்

சிறு வயது திருமணம்: பாஜக  எம்.எல்.ஏ யோசனை!மின்னம்பலம்: பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயித்தால் லவ் ஜிகாத்தைத் தவிர்க்கலாம் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஆக்ரா மால்வா தொகுதி எம்.எல்.ஏ ஆக கோபால் பார்மர் உள்ளார். இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “திருமண வயது 18 என்ற நோய்வந்த பிறகுதான் பெண்கள் காதலித்து ஓடத் தொடங்கியுள்ளனர்” என்று சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளார்.
“லவ் ஜிகாத் என்ற வார்த்தை இந்துத்துவா அமைப்புகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய ஆண்கள் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோன்ற லவ் ஜிகாத் நடவடிக்கைகளைத் தடுக்க பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். நம் முன்னோர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால்தான் அவர்களின் திருமணம் வாழ்க்கை இறுதி வரை நீடித்தது. தற்போது அவ்வாறான நிலை இல்லை.
குறிப்பாகப் பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெண்கள் லவ் ஜிகாத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தக் குற்றவாளிகள் பெண்களைத் தந்திரமாக தங்கள் வலைக்குள் சிக்கவைக்கின்றனர். பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் தோன்றும். எனவே, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்வதன் மூலம், பெண்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
குழந்தை திருமணத்தைத் தடுக்கக் குரல் எழுந்துவரும் நிலையில் எம்.எல்.ஏவின் பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: