வியாழன், 10 மே, 2018

ராகுல் காந்தி உருக்கம் : எனது தாய் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்தான் ஆனால் ..

tamilthehindu :பெங்களூரில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி - ;படம் உதவி: ட்விட்டர் என்னுடைய தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான், ஆனால், சிறந்த இந்தியராகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலமுதல்வர்கள் எனப் பல முக்கிய பிரச்சார பீரங்கிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, ஏ.கே. அந்தோனி, உம்மன் சாண்டி உள்ளிட்ட பல தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது.
இதையடுத்து தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில், பெங்களூரு நகரில் ராகுல் காந்தி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் கர்நாடகத்தின் வளர்ச்சி நோக்கம், திட்டம் ஆகியவற்றைத் தவிர்த்து தனிநபர் விமர்சனத்துக்கு மாறி இருக்கிறது. என்னையும், மல்லிகார்ஜுன கார்கேவையும் கடுமையாக மோடி தாக்கிப் பேசியுள்ளார்.
ஆனால், தேர்தலில் வெற்றிபெற்றால், கர்நாடக மாநிலத்துக்கு பாஜக என்ன செய்யப்போகிறது என்பது குறித்த திட்டம் இல்லை. ஆனால், காங்கிரஸ்கட்சி திட்டத்தைத் தெளிவாக அறிவித்துள்ளது.
ஆனால், நாங்கள் சில வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருக்கிறோம். மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை அறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்து இருக்கிறோம். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணித்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களின் தேவைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெறும் 4 நாட்களில் ஒரு மூடப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயார் செய்யப்பட்டுள்ளது. எங்களின் தேர்தல் அறிக்கையையும் காப்பி அடித்துள்ளார்கள்.
மக்களுக்கு என்னவிதமான சேவைகளை அளிக்கலாம் என்பதில், பாஜகவினர் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதுகிறேன்.
கடந்த 2 மாதங்களாகக் கர்நாடக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். பல்வேறு மக்களைச் சந்தித்து பல்வேறு அனுபவங்களைக் கற்றேன், அவர்கள் என்னவிதமான எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள், உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடகத்தின் தேவை என்ன, என்ன செய்யப்போகிறோம் என்பதே மக்களிடம் கூறாமல், தனிநபர் தாக்குதல்களை அதிகமாகக் கையாள்கிறது.
பிரதமர் மோடி என் தாய் இத்தாலிக்காரர் என்பதைச் சுட்டிக்காட்டி, தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார்.
உண்மைதான், என் தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால், பல இந்தியர்களை நான் பார்த்தவரையில், அவர் எண்ணற்ற தியாகங்களை நாட்டுக்காகச் செய்துள்ளார். பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில்தான் செலவிட்டுள்ளார்.
இவ்வாறு தனிநபர் மீதான தாக்குதல்கள் ஒரு பிரதமரின் தகுதி என்ன என்பதையும், அவரின் பேச்சுகள் எத்தகையது என்பதையும் காட்டுகிறது.
புத்தர் குறித்த ஒரு கதை இருக்கிறது. போதி மரத்தடியில் புத்தர் தியானத்தில் இருந்தபோது, பல்வேறு மக்களும் அவரைத் சாடினார்கள். ஆனால், அவர் எந்தவிதமான சலனத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் புத்தருக்கு கோபம் யார் மீதும் இல்லை, அவர் மீதும் இல்லை.
ஆனால், பிரதமர் மோடியோ அனைவரின் மீதும் கோபத்தை உமிழ்கிறார். மோடிக்கு கோபம் என்பது அவருக்குள்ளே இருக்கிறது. அதை உணராமல் அடுத்தவர்கள் மீதும், அனைவரின் மீதும் காட்டுகிறார். குறிப்பாக என்னைக் குறிவைத்து என் மீதா வார்த்தைகளால் தாக்குகிறார். அது அவருடைய பிரச்சினைதானேத் தவிர என்னுடையது அல்ல.
இதுபோன்ற கருத்துக்களைக் கூறி மக்களைத் திசைதிருப்ப மோடி முயற்சித்து வருகிறார். நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாக மோடி இதுபோன்று பேசிவருகிறார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கையும் மிகுந்த ஆபத்தாக இருக்கிறது. என்னுடைய கண்ணோட்டத்தில் பாகிஸ்தானில் சீனாவின் படைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ அணிவகுப்பில் சீனாப்படைகள் அணிவகுப்பும் இருந்ததை இங்குக் குறிப்பிட வேண்டும்.
சீனா நமக்குப் போட்டியான சக்தியாகவும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை பரப்புவதற்கு உதவியும் வருகிறது. நம்முடைய வெளிநாட்டுக் கொள்கையை பராமரிக்கும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் ராகுல் குறித்த தேர்தல் அல்ல. ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு என்னைச் சுற்றியே இருக்கிறது. இந்த தேர்தலில் நான் மோடியை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் கற்றுக்கொண்டேன். அவரால் பதில் கூறமுடியாவிட்டால், கவனத்தைத் திசைதிருப்பிவிடுவார்.
இந்தத் தேர்தலில் நாங்கள் மிகச்சிறப்பாகத் தேர்தல் பிரச்சாரம் செய்துஇருக்கிறோம். வெற்றி பெறுவோம், மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று நம்புகிறேன்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: