வியாழன், 10 மே, 2018

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டது தனியார் நிறுவனம்; பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்


hydro

தினமணி :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் பகுதியில் செயல்படுத்த இருந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டுள்ளது.
தொடர் போராட்டம் காரணமாக ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாக ஜெம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த நெடுவாசல் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தங்களது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைப் பார்க்கும் கிராம மக்கள், தமிழகத்தில் வேறு எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக ஜெம் நிறுவனம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் உண்மையில்லை என்றும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைத்தான் கைவிட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசலைத் தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு ஜெம் நிறுவனம் கடிதம் அனுப்பியது. அதற்கு இதுவரை பதில் பெறப்படவில்லை.
மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்ட குத்தகையை, தமிழக அரசு தங்களுக்கு இதுவரை மாற்றித்தரவில்லை என்றும், இதனால் தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவுக்கும் மேல், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்தது.
இது குறித்து ஜெம் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், நெடுவாசலில் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவது குறித்து இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நெடுவாசலுக்கு பதிலாக இந்திய அரசு வேறு எந்த இடத்தைக் கொடுத்தாலும் அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். நாங்கள் எந்த மாற்று இடத்தையும் தேர்வு செய்யவில்லை. அது எங்களது பணியும் அல்ல. 
எங்களது பணி ஆய்வு மட்டுமே. மத்திய அரசு இடத்தை அளித்ததும் பணிகள் தொடங்கிவிடும். புதிய இடத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை. இதுவரை நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ரூ.2 கோடி வரை செலவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: