தினமலர் :அ.தி.மு.க., அரசு மீது, தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அக்கட்சி வெற்றி பெற வசதியாக, நான்கு எம்.எல்.ஏ.,க்களிடம், தினகரன் குதிரை பேரம் நடத்தி உள்ளார். இதை முறியடிக்கும் வகையில், அந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களையும், ஆளுங்கட்சி தரப்பினர், தங்கள் கட்டுப்பாட்டில், சிறை வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்குகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், இன்றைய கூட்டத்தில், முதல் முறையாக பங்கேற்கிறார்.
எதிர்பார்ப்பு: அவர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனில், தினகரனுக்கு, 24 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. சமீபத்தில், தினகரன் அணியிலிருந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க., கொண்டு வர வேண்டும் என்றால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 109 பேர் இருக்க வேண்டும். சமீபத்தில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், 'சபாநாயகருடன் சேர்த்து, 112 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என, அமைச்சர் ஜெயகுமார் உறுதிப்படுத்தினார்.
ஆனால், கூட்டத்தில், 104 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள ஏழு பேரில், 'இரு அமைச்சர்கள், அரசு விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர்; மூன்று பேர் சபரிமலை சென்றுள்ளனர்; இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என, ஆளுங்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ரகசிய பேச்சு
'தங்களுக்கு,
112 பேர் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்,
வெற்றி பெறுவோம்' என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில்,
ஆளுங்கட்சியின், 112, எம்.எல்.ஏ.,க்களில், தங்களது அணிக்கு எட்டு பேரை
இழுக்க, தினகரன் ரகசிய பேச்சு நடத்தியுள்ளார். அப்போது, கணிசமான பணம் பேரம்
பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், நான்கு பேர் மட்டும், அணி மாற தயாராக இருப்பதாக, அவரிடம் உறுதி அளித்துள்ளனர்.இந்த தகவல் அறிந்ததும், ஆளுங்கட்சி மேலிடம் சுதாரித்தது. நான்கு பேரும் தினகரன் பக்கம் தாவாமல் இருக்க, அவர்களை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் தினகரனின் முதற்கட்ட முயற்சியை, ஆளுங்கட்சி முறியடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக