இந்த வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் இறுதி வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று முதல்வர் தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக சட்டமன்றம் 8ஆம் தேதி தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘’தினகரன் தரப்பின் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து முதல்வருக்கு எதிராக மனு அளித்ததன் மூலம் அவர்கள் அரசுக்கு எதிராகச் செயல்பட்டது தெளிவாகிறது. கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக அவர்கள் செயல்பட்டனர்’’ என்று வாதிட்டனர்.
முதல்வர் தரப்பின் வாதங்களின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதிகாத்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அடிக்கடி கேள்விகள் கேட்டபடி இருந்தார்.
‘’அந்த 18 பேரும் ஆளுநரிடம் புகார் அளித்தது தவறு என்கிறீர்கள். அவர்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறுகிறீர்கள். அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தார்களே. அது கட்சிக்கு எதிரான, ஆட்சிக்கு எதிரான செயல்பாடு இல்லையா? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என்று கேட்டார்.
இதை எதிர்பார்க்காத முதல்வர் தரப்பினர், ‘அந்த விவகாரம் தனி பெட்டிஷனாக நீதிமன்றத்தின் முன் இருக்கிறது. அந்த விசாரணை வரும்போது பதில் சொல்கிறோம்’ என்றனர்.
நீதிபதி சுந்தரோ, “இரண்டும் ஒரே பிரச்னைதான். ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட புகார் அவர்கள் மீதும் உள்ளது. எனவே அந்த 11 பேர் மீதும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.
அப்போது முதல்வர் தரப்பில், ’கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவைத் தலைவராக ஏற்க முடியாது என பன்னீர்செல்வம் தலைமையிலான குழு முடிவு செய்தது. மேலும், சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால், பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று வாதிட்டனர்.
இந்த நிலையில் முதல்வர் தரப்பின் வாதம் நாளையும் தொடரலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
நாளை முதல்வர் தரப்பின் வாதம் முடிவடையும் நிலையில் திமுக சார்பில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட நான்கு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ஓ.பன்னீர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஓ.பன்னீர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும், குட்கா சர்ச்சையில் எதிரக்கட்சித் தலைவர் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, சட்டமன்றத்தைக் கூட்டி முதல்வர் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் தொடுக்கப்பட்ட மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் பட்சத்தில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சிங் சரண் வாதாடுவார் என்று தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக