செவ்வாய், 9 ஜனவரி, 2018

லுங்கி காவியம்.... உடையல்ல, அது ஒரு சமூக குறியீடு ..

Shalin Maria Lawrence : லுங்கி காவியம்.
தமிழனின் வெள்ளை வேஷ்டி - சிந்து சமவெளி நாகாரீகத்தின் வழி வந்தது. தோத்தி (Dauti) எனப்படும் சமஸ்க்ரித சொல் வேதத்தை கற்று பூஜை செய்பவரும், மேட்டுக்குடியினரும் அணிந்து வந்த வெள்ளை துண்டை குறித்தது. தமிழில் தோத்தி "வேட்டி" ஆனது.
பொதுவாக வேலை என்ற ஒன்றை செய்யாத, மற்றவரை வைத்து வேலை வாங்கும் ஒரு சமூகம் மட்டுமே உடுத்தியது அது. தூசி படியாமல், அலுங்காமல் குலுங்காமல் இருப்பவனின் ஆடை அன்று வேஷ்டிதான்.
மாட்டைப் போல் உழைப்பவன் எப்பொழுதும் கந்தல் மட்டுமே அணிந்து கொண்டிருந்தான். வெள்ளை அவனது நிறமல்ல. பழுப்பு துண்டுதான் அவனின் உடை.
சரியாக சொல்ல வேண்டுமானால் "தூசு, நெற்றி வியர்வை, கண்ணீர்", என்று எல்லாம் உரிந்து கலந்த மஞ்சளுக்கும் பழுப்பிற்கும் இடையே ஒரு "ஏழை நிறம்".
அந்த நிறம் அவன் யார், எந்த சாதி, எந்த ஊர் போன்ற விஷயங்களை அவனிடம் பேசாமலே மேட்டுக்குடி தெரிந்து கொள்ள உதவியது.
அந்த நேரம் பார்த்து பர்மாவிலிருந்து திரும்பிய நம் மண்ணின் மைந்தர்களால், குறிப்பாக இஸ்லாமியர்களால் நமக்கு அறிமுகமானது ஏழைகளின் ரட்சகன் "லுங்கி".

"Longyi" என்று அழைக்கப்பட்ட அந்த வஸ்திரம் பெரும்பாலும் பர்மாவில் வாழும் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே அணிந்தார்கள். சங்குமார்க் லுங்கியின் முதல் தொழிற்சாலை பர்மாவில் தான் தமிழர்களால் உருவானது.
அறுபதுகளில் பர்மாவிலிருந்து இந்திய புலம் பெயர்ந்தவர்கள் அதிகம்பேர் அந்த லுங்கிகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தனர். அப்படி வந்த தமிழர்களை வடசென்னையின் வியாசர்பாடியில் குடியமர்த்தினார் அன்றைய முதல்வர் பக்தவச்சலம். வடசென்னைக்குள் அதிரடி என்ட்ரி கொடுத்தது லுங்கி.
வேஷ்டியை விட தான்தான் பலமடங்கு உயர்ந்தது என்று நொடிக்கு நொடி, செயலுக்கு செயல் நிரூபித்துக் கொண்டே இருந்தது லுங்கி.
லுங்கி ஒரே நிறமாய் இருக்கவில்லை. பல நிறங்கள் கலந்து பல வடிவங்கள் ஒருங்கிணைந்த ஒரு சமூக கலவையாய் முறிந்தது லுங்கி. பெரும்பாலும் அடர்நிறங்களிலேயே இருந்தது. பர்மா லுங்கிகள் இளஞ்சிவப்பு, சிவப்பு, பச்சை என்று பல நிறங்களிலும் பூ போட்டும் இருந்தாலும், நீலம் மற்றும் கருப்பு கோடுகள் போட்ட லுங்கி தான் வடசென்னையின் favourite. இன்றும் கூட அந்த லுங்கிதான் இங்கே அதிகமாக தென்படும்.
உழைப்பவனுக்கு லுங்கியை விட ஒரு சிறந்த உடை கிடையாது. ரிக்க்ஷா தொழிலாளி, மூட்டை தூக்குபவர், கட்டிட தொழிலாளி, மீனவர்கள் என்று அவர்களிடம் சக்கைபோடு போட்டது லுங்கி.
ஒரு லுங்கி அழுக்காக தெரிய எப்படியும் குறைந்தது மூன்று மாதம் கூட ஆகலாம். அதை அதனை சுலபமாய் அழுக்காக்கிவிட முடியாது. அப்படியே அது அழுக்கானாலும் அதில் இருந்து நாற்றம் வேண்டுமானால் வரலாமே ஒழிய அழுக்கு கண்ணுக்கு தெரியாது. வெள்ளையனின் கருப்பு கோட்டுக்கும், தமிழனின் லுங்கிக்கும் உள்ள பெரிய ஒற்றுமை இது.
வடிவத்தில் கூட லுங்கி நம்பர் ஒண்ணாகவே இருந்தது. குழல் வடிவத்தில், எங்கேயும் திறந்து இல்லாமல், முடிவற்று இருந்தது லுங்கி. வேஷ்டி போல் காற்றோட்டமாய் இருந்தது அதே நேரத்தில் வேட்டி காற்றில் பறந்தால் உள்ளிருக்கும் சமாச்சாரம் வெளியே தெரியும். ஆனால் அந்த ஆபத்தெல்லாம் தன்மான லுங்கிக்கு கிடையாது. புயலே அடித்தாலும் லுங்கி அசையுமே தவிர அது விலகாது, தூக்காது. டாஸ்மாக்கில் குடிக்க செல்லும் மனிதர்களுக்கு இந்த காரணத்தாலேயே லுங்கி அதிகம் பிடித்தது. குடிமகன்கள் லுங்கியணிந்து குடிக்க போனார்கள், பாதுகாப்பாக உணர்தார்கள். லுங்கி டாஸ்மாக்கின் unofficial யூனிபார்ம்.
அதிகமாக குடித்துவிட்டு வீடு போக முடியாதவர்கள் டாஸ்மாக் வாசலிலேயே அந்த லுங்கியை விரித்து போட்டு படுத்துறங்குவதை பார்த்திருக்கிறேன். லுங்கி நம்பிக்கை.
அங்கேயே வரும் மோதல்களில் லுங்கியை கழட்டி எதிரியின் கழுத்தில் மாட்டி அவரை சுத்த விட்டு அடித்தல், ஆஹா! சிறந்த தற்காப்பு சண்டை முறைகளில் முதலிடத்தில் வருகிறது.
அதற்காக இங்கே நான் குடிப்பவர்களை கேவலமாக சொல்ல வரவில்லை. அங்கே வந்து குடிப்பவர்கள் யார்? காலையில் இருந்து கடுமையான உடலுழைப்பை புரிந்துவிட்டு உடம்பு வலி தீர வந்து குடிக்கும் ஒரு சாராரி மனிதனை நான் எப்பொழுதும் இகழ்ந்ததில்லை. ஃபாரினில் மரம் வெட்டி முடித்து வீட்டுக்கு போய், ஜாக் டேனியல்ஸ் குடிப்பான் ஏழை. இங்கே ஏழைக்கு வீடே கிடையாது அவனுக்கு டாஸ்மாக்தான் எல்லாமே.
இதுமட்டுமல்ல, லுங்கி பார்க்க மெல்லியதாகவும் அதே நேரத்தில் கடுமையானதாகவும் இருந்தது. எவ்வளவு இழுத்தாலும், வேலை நேரத்தில் எங்கே மாட்டினாலும் அவ்வளவு சீக்கிரத்தில் கிழியாது அது. ஏழையின் மனவலிமைபோல.
எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ரிக்க்ஷாவில்தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். கடுகு, ஆதிகேசவன் என்று இரண்டு "ரிக்க்ஷா மேன்கள்" இருந்தார்கள். அவர்கள் காவி அரை டவுசர் போட்டு, அதன் மேலே லுங்கியை மேலே தூக்கி கட்டி இருப்பார்கள். அந்த லுங்கி எதற்கு என்று யோசிக்கும் வேலையில் அவர்கள் அதில் வியர்வையை துடைப்பார்கள். வெயிலில் முகத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முகத்தை துடைத்துக் கொள்வார்கள் பின் சாப்பிட்டு கை துடைப்பதும் அதில்தான். அப்பொழுது எல்லாம் புரியும். ஒரு உடை எந்த ஒரு கலாச்சாரத்தையும் தாண்டி அதன் உபயயோகத்தன்மைக்கென்றே பெருமை வாய்ந்ததென்றால் அது லுங்கி மட்டும்தான்.
சின்ன வயதில் பள்ளியில் இருந்து அழுது கொண்டே வெளியில் வரும்போது கடுகு ரிக்க்ஷா மேன் அந்த லுங்கியில் முகத்தை துடைத்துவிடுவார். அந்த நேரத்தில் அருவருப்பாய் தோன்றிய அது இப்பொழுது நினைத்து பார்க்கையில் பீத்தோவனின் ஆறாம் சிம்பொனியாய் இனிக்கிறது .
புரசைவாக்கத்தில் இரவு நேரத்தில் விளிம்பு நிலை மனிதர்கள் பிளாட்பாரத்தில் மார்கழி மாத குளிரில் அவர்கள் அணிந்திருக்கும் லுங்கியை அப்படியே மேல் இழுத்துவிட்டு முழுதும் மூடி படுத்து கொள்வார்கள். அது எல்லாம் உலக அதிசய லெவல் .
அடுத்து வருவது மலையாளிகளின் லுங்கி. நான் கேரளா மலையாளிகளை சொல்லவில்லை. இங்கே வந்து தங்கி தொழில் செய்யும் மலையாளிகளை போல் லுங்கியை அவ்வளவு ஷ்ரத்தையோடும் ஒரு அழகியலோடும் அணிபவர்கள் எவரும் இல்லை.
டீ கடைக்கு சைக்கிளில் ரொட்டி பிஸ்கட் போட வரும் பேக்கரி மலையாளி தான் கட்டி வரும் கரும் பச்சை நிறத்து லுங்கியில் ரோஸ் கலர் ரோஜா பூ போட்டு இருக்கும். அவரை போல் ஒரு ஸ்டைலிஷான மனிதரை இதுவரை பார்த்ததில்லை. மலையாளிகளை பொறுத்தவரை லுங்கி அவர்களுக்கு அழகியல் சார்ந்த ஒன்று. ஜேம்ஸ் பாண்டின் கோட்டை போல அவர்களுக்கு அது .
இதற்கெல்லாம் இடையே சாவு ஊர்வலங்களில் லுங்கியின் பங்கைப் பற்றி பேசாமல் போவது நான் லுங்கிக்கு செய்யும் மாபெரும் அநியாயம்.
இங்கே வடசென்னை பக்கத்தில் இறுதி ஊர்வலம் என்றால் லுங்கிதான் கதாநாயகன். இல்லை இல்லை... கதாநாயகி. வடசென்னையில் ஒவ்வொரு ஆணும் தன் லுங்கியை தன் காதலியாகத்தான் பாவிக்கிறார்கள். மரண ஊர்வலங்களில் அவர்கள் லுங்கியுடன் ஆடும் நடனம் தங்கள் காதலிகளை அவர்கள் கையாளுவது போல்தான் இருக்கும். அப்படி ஒரு லாவகம். அந்த லுங்கியை வாயில் கடித்துக் கொண்டே ஆடும் நடனம். அதை கழுத்தில் சுற்றி கொண்டு ஆடும் நடனம், அதை இடுப்பிலிருந்து அப்படியே தலையில் இழுத்து மூடி ஆடும் நடனம், என்று டேங்கோ நடனத்தை மிஞ்சும் அது. விட்டு பிரிந்து போனவர்களை பற்றிய அத்தனை துயரத்தையும் மறக்க அவர்கள் அந்த லுங்கியிடம்தான் தஞ்சமடைவார்கள்.
இந்த லுங்கி பற்றி எழுதி கொண்டிருக்கிறேன். ஏதோ ஒன்று மறந்ததை போல் இருக்கிறது. என் ஞானத்தந்தை பெரியார் நினைவில் வருகிறார். மேடையில், கட்டிலில், ஒரு லுங்கியோடு பழுத்த பழமாய் லுங்கியோடு உட்கார்ந்திருக்கிறார். அதன் ஊடே ஒரு மூத்திரப்பை வெளியே தொங்குகிறது.
இதை விட லுங்கியை பற்றி சொல்ல பெரிய விஷயம் இருப்பதாக தெரியவில்லை.
நண்பர்களே, நோய் கொண்டவரின் உடலியல் கறைகளை வெளியில் தெரியாமல் காத்து அவர்களை வெளியுலகில் கடமைக்காக பல மணி நேரம் போராட வைத்தது அந்த லுங்கி தானே?
லுங்கி உடையல்ல, அது ஒரு சமூக குறியீடு .
லுங்கி எங்களின் குறியீடு.
ஷாலின்

கருத்துகள் இல்லை: