வியாழன், 11 ஜனவரி, 2018

மேயர் நகரசபை தலைவர்களை மீண்டும் மக்களே தெரிவு செய்யும் சட்டம்...

மாலைமலர் : மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
சென்னை: மேயர்கள், நகரசபை தலைவர்களை மக்களே நேரிடையாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை தமிழக தேர்தல் ஆணையம் கடை பிடித்து வந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது.
 2016-ம் ஆண்டு இந்த உள்ளாட்சி தேர்தல் முறையில் சில மாற்றங்களை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன்படி மேயர்கள், நகரசபை தலைவர்களை மக்கள் நேரிடையாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டியது இல்லை என்ற திருத்தத்தை 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி கொண்டு வந்தார். இந்த திருத்தத்தின்படி மேயர்கள், நகரசபை தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த மாற்றங்கள் கடந்த 1½ ஆண்டுகளால் நிலுவையில் உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.


இந்த நிலையில் அந்த விதிகள் மீண்டும் திருத்தப்பட்டு மேயர்கள், நகரசபை தலைவர்களை மக்களே நேரிடையாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தொடர்புடைய நகராட்சியச் சட்டங்கள் மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், முறையே, மாமன்ற உறுப்பினர்களால் மற்றும் உறுப்பினர்களால் அவர்களுக்குள்ளேயே தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்ய ஏதுவாக, தமிழ்நாடு மாநகராட்சிகள் (திருத்தம்) சட்டம், 2016 (தமிழ்நாடு சட்டம் 8/2016) மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தம்) சட்டம், 2016 (தமிழ்நாடு சட்டம் 12/2016) ஆகியவற்றின்படி திருத்தம் செய்யப்பட்டது.

இருந்தபோதிலும், மேற்சொன்ன சட்ட திருத்தம் செய்த பின்னர், உடனடியாக, மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் ஆகியோரின் நேரடியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது என்பது சிறந்த அமைப்பு முறையாகும், என்றும் இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் சிறந்த, அமைதியான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்து, அதிகளவிலான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்தும், வெவ்வேறு அமைப்புகளிடமிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வழியாகவும் பெறப்பட்டது என்றும் துறைத் தலைவர்களால் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் மேற்குறிப்பிடப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள் மற்றும் தலைவர்கள் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளுக்கான வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார்களேயன்றி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடங்கியுள்ள மற்ற வார்டுகள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள் என துறைத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் இவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை சார்ந்தே இருக்க வேண்டுமென்பதால் அவர்களால் தனித்து இயங்கி மக்களுக்கான சிறந்த சேவை செய்ய வேண்டி உள்ளாட்சி அமைப்புக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான முடிவினை சுயமாக எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
ஆதலால், அரசு கவனமாக பரிசீலனைக்குப் பின்னர் மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற தேர்தல் முறையில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதனால் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சிறந்த நல்ல நிர்வாக முறையை கொண்டு வர இயலும். மேலும் அதிகப்படியான சிறந்த உடனடியான உள்ளாட்சி பணிகள் மக்களுக்கு செய்து தர முடியும். மேற்கூறப்பட்ட நோக்கக்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான சட்டங்களை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்ட முன்வடிவு மேற்கண்ட முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: