வெள்ளி, 12 ஜனவரி, 2018

சென்னை சங்கமம் .... அது நிறுத்தப்பட்டபோது உண்மையிலேயே மனது வலித்தது


Shalin Maria Lawrence : தைபுரட்சி சமூகவியல் படி "புரட்சி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "ஒரு சமூக அமைப்பை வேரோடு மாற்றி அமைத்தல்" ஆகும். A radical and pervasive change in society and the social structure.
கூட்டம் கூடுவதெல்லாம் புரட்சி என்று நான் என்றுமே எண்ணியதில்லை. கூடிய கூட்டத்தால் எந்த வகையிலாவது பல வருடம் இருந்த சமூதாய அமைப்பு மாறியதா என்பதுதான் என்னை பொறுத்தவரை, சமூகவியல் படித்தவர்களை பொறுத்தவரை "புரட்சி" என்பதாகும்.
கடந்த வருடம் நடந்த விஷயம் ஏதாவது ஒரு வகையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்றால், "இல்லை" என்கிற பதில் மனசாட்சியின் படி வரும். பல சமூகம் சேர்ந்து காலம் காலமாக நடத்திவரும் இன்னொரு ஆதிக்க சமூகத்தின் ஒரு கலாசாரத்தை தக்க வைக்க செய்த விஷயம் அது. அதில் சமூக மாற்றம் எல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை.
ஆனால் 2007ம் ஆண்டு இந்த மாநிலத்தில் உண்மையில் ஒரு தை புரட்சி நடந்தது. அது ஒரு கலைபுரட்சி. கலையினூடே கூடிய ஒரு சமூக புரட்சி.
இன்று வரை அந்த நிகழ்வு பலரின் கண்ணுக்கு ஒரு புரட்சியாய் தெரியாமல் செய்தது, அரசியல். அதை வைத்து செய்ய தெரியாத அரசியல். அதை மறைக்க செய்த அரசியல்.
பெரிய ஆர்பாட்டமில்லாத புரட்சிகள் சமூக மாற்றத்தை அனாயசமாக செய்துவிட்டு போகும். அதில் பெரிய கூச்சல் குழப்பங்கள் இருக்காது. நான் சொல்லும் சங்கதியும் இந்த வகையராதான்.

அது "சென்னை சங்கமம்"
"நீங்க உங்க எடத்துல இருங்க, நாங்க எங்க எடத்துல இருக்குக்கோம், நமக்குள்ள சண்டை வராது" என்பது சமத்துவம் கிடையாது.
நீங்களும் நாங்களும் கலந்து ஒன்றாய் இருப்பதுதான் சமத்துவம்.
Inclusiveness (உள்ளடக்கம்) என்கிற வார்த்தையின் வீரியம் நமக்கு ஏனோ புலன்பட மறுக்கிறது.
வெளிநாடுகளில் ஒடுக்கப்பட்டோரின் சமூகப் போர் இதை வேண்டித்தான் இருக்கிறது.
"சேரி தனியே, ஊர் தனியே" என்று இருப்பது "சமத்துவம்" அல்ல. சேரியில் இருந்தவர்களும் ஊருக்குள்ளே மற்றவர்களோடு சேர்ந்து, கலந்து வசிப்பதுதான் சமத்துவம், சகோதரத்துவம்.
சமத்துவம் (equality) என்பது சிந்தனை. சகோதரத்துவம் (fraternity) என்பது செயல். சேர்ந்து ,கலந்து போவதுதான் சகோதரத்துவம். புரட்சியாளர் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்கள் நிறுவிய இந்த நாட்டின் அரசியலமைப்பு இதைத்தானே பறைசாற்றுகிறது. Equality and Fraternity.
குறைந்த காலமே ஆனாலும் சென்னை சங்கமம் என்கிற அந்த நிகழ்வு மேற்சொன்னதை நிகழ்த்தி காட்டியது.
சில வருடங்கள் தான், ஒரு குறிப்பிட்ட காலம்தான் என்றாலும் சென்னை சங்கமத்தின் சாதனை மிகப் பெரியது.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எப்படி அமைதியாக பேசுவாரோ அதே அமைதியுடன் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த துணிந்தது தான் சென்னை சங்கமம்.
வர்க்க பேதம், சாதி பேதம், நாகரிக பேதம் ஆகியவற்றை உடைத்தெறிந்தது சென்னை சங்கமம் தான்.
நிகழ்ச்சிகள் சபாக்களில் நடக்கவில்லை. மாறாக சங்கமத்தின் நிகழ்வுகள் நடந்ததெல்லாம் அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் பொது வெளிகளில். பள்ளி மைதானங்கள், பூங்காக்கள், கடற்கரை, மாநகராட்சி மைதானங்கள் என்று எல்லோருக்கும் பொதுவான இடங்களில் இவை நடந்தது.
ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், கானா கச்சேரி, கரகாட்டம், காவடியாட்டம், பறையாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், உருமி, மேளம், தவில், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாட்டு, கர்நாடக சங்கீதம், ராக் மியூசிக் என்று எல்லாம் ஒரே இடத்தில்.
சபாக்களையும் கோவில்களையும் விட்டு வெளியே வராமல் இருந்த கர்நாடக சங்கீதம் பூங்காக்களிலேயும், மாநகராட்சி மைதானகளிலேயும் பாடப்பட்டது.
ஒரு நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் கானா கச்சேரி நடந்தது. அவர்கள் முடித்ததும் கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு. அவர்கள் முடிந்ததும் பறையாட்டம். இது சொல்லுவதற்கு அவ்வளவு எளிதாக இருந்தாலும் அந்த இடத்தில் நடந்த ஒரு சமூதாய மாற்றம் அளப்பறியாதது.
பணக்காரனோ ஏழையோ "கலை எல்லோருக்கும் பொது", என்கிற ஒரு உன்னத கருத்தை சென்னை சங்கமம் ஓங்கி பிடித்தது. அண்ணா நகர் டவர் பூங்காவில் விளிம்பு நிலை மனிதரும், பென்ஸ் கார் வைத்திருக்கும் பணக்காரரும் கீழே புல்லில் அமர்ந்து சின்ன பொண்ணு பாடுவதை கேட்டு கொண்டிருந்தார்கள்.
இந்த விழா உணவும் அப்படிதான். சைவம் அசைவம் இரண்டும் இருந்தது அருகருகில். பெசன்ட் நகர் கடற்கரையில் பொறித்த பரோட்டா, நாட்டுக்கோழி சாறு சாப்பிட்டுக் கொண்டே வயலின் மிருதங்க கச்சேரி கேட்டதெல்லாம் வேற லெவல் சமூக நீதி.
இப்படி சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் சங்கமித்த இடம்தான் "சென்னை சங்கமம்".
கிராமங்களில் கலைகளுக்குள் இருந்த சாதிய அமைப்பை சென்னை சங்கமம் உடைத்துப் போட்டது. கலைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்து, அதனுள் இருந்த சாதியை தூக்கிப் போட்டது. கலைகளுக்கு பின்னே இருந்த புனிதத் தன்மையை எரித்துப் போட்டது. கலைகளை கலைகளாய் ரசிக்க வழி வகுத்தது.
என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டின் முதல் "casteless collective" என்றால் அது சென்னை சங்கமம் தான்.
அரசியல் காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டபோது உண்மையிலேயே மனது வலித்தது. இன்றும் ஓவ்வொரு வருட ஜனவரி மாதமும் இந்த நிகழ்ச்சியை நினைத்து கொள்ளுவேன்.
ஆக புரட்சி என்று எதையும் சொல்லுவது எளிது. ஆனால் சமூக மாற்றம் என்பது நிகழ்ந்ததா என்பதே எந்த ஒரு நிகழ்வின் கடைசியிலும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாகும்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: