புதன், 22 நவம்பர், 2017

மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்
தென் கொரியாவைச் சேர்ந்த, உலகின் மிகப் பெரிய இரும்பாலை நிறுவனமான போஸ்கோ, ஒடிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு எஃகு ஆலை அமைக்கும் தனது திட்டத்தைக் கைவிட்டு வெளியேறிவிட்டது.
தமிழகத்திற்கு நோக்கியா, குஜராத்திற்கு டாடாவின் நானோ கார் ஆலை என்பது போல, ஒடிசாவில் 52,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையத் திட்டமிடப்பட்டிருந்த போஸ்கோ இரும்பாலை, தனியார்மயம் – தாராளமயத்தின் மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அப்படிச் சிலாகிக்கப்பட்ட திட்டம், பிறவி ஊனமாகி, ஆலைக்கு அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்பே இந்தியாவிலிருந்து வெளியேறிப் போனதற்குக் காரணம், ஒடிசா மாநிலத்தின் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா, கோவிந்தபூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும், பழங்குடியின மக்களும் நடத்திய பத்தாண்டு கால விடாப்பிடியான போராட்டம்.

2005 -ஆம் ஆண்டு போஸ்கோ நிர்வாகத்திற்கும் ஒடிசா மாநில அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2015, மார்ச்சில் போஸ்கோ தனது கனவுத் திட்டத்தைக் கைடுவிடுவதாக அறிவித்தது. இடைப்பட்ட இந்தப் பத்தாண்டுகள் முழுவதும் போஸ்கோவிற்கு எதிரான போராட்டம், “போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி” (போஸ்கோவிற்கு எதிரான போராட்டக் கழகம்) என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் நடந்தது.
யானை பெரிய உருவம் கொண்ட விலங்குதான். ஆனால், அதன் காதுக்குள் ஒரு சிற்றெறும்பு புகுந்துவிட்டால், அப்பெரிய விலங்கிற்கு என்ன நேருமோ, அந்தக் கதிதான், எஃகு உற்பத்தியில் உலகின் நான்காவது இடத்திலுள்ள போஸ்கோவிற்கு ஏற்பட்டிருக்கிறது, எளிய விவசாயிகளின் போராட்டம் காரணமாக.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் திணிக்கப்பட்டு வருவதைப் போலவே, போஸ்கோவும் வளர்ச்சியின் பெயரால்தான் ஒடிசா-ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் மீது திணிக்கப்பட்டது. 52,000 கோடி ரூபாய் முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு எனத் தேன் தடவிய வாதங்கள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஆனால், இந்த ஜிகினா வார்த்தைகளுக்கெல்லாம் அம்மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும் மயங்கிவிடவில்லை. தமது நெல் வயல்கள், வெற்றிலைக்கொடி தோட்டங்கள், மீன்பிடித் தொழில் ஆகியவற்றின் அழிவில்தான் பீற்றிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி எழுந்து நிற்கப் போகிறது என்பதைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலேயே அவர்கள் உணர்ந்துகொண்டனர்.
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள். இழப்புகள், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அதில் உறுதியுடன் இருந்தார்கள். அதனால் போஸ்கோ வெளியேற நேர்ந்தது.
அரசின் ஆசை வார்த்தைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்து போயிருந்தால், என்ன நடந்திருக்கும்? அதற்கு இரத்த சாட்சியாக உள்ளது, போஸ்கோவிற்கு நிலங்களை “விற்ற” நுவாகாவ் கிராமம்.”அக்கிராமத்தைச் சேர்ந்த பாதிப்பேர் இப்பொழுது வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். போஸ்கோவிடம் நிலத்தை இழந்து, விவசாயிகள் பெற்ற ஈட்டுப் பணமெல்லாம் கரைந்து போய்விட்டது.
போஸ்கோ வருவதற்கு முன்பாக வெற்றிலை தோட்டங்களில் கிடைத்துவந்த வேலையெல்லாம் மறைந்துபோய், இப்பொழுது அக்கிராமத்தைச் சேர்ந்த “முன்னாள்” நடுத்தர விவசாயிகள்கூட கூலிவேலை தேடி, போஸ்கோவை எதிர்த்து நின்ற பக்கத்து கிராமமான திங்கியாவிலுள்ள தோட்டங்களுக்குச் செல்கிறார்கள். அக்கிராமத்தைச் சுற்றியிருந்த வனப்பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்கள் ஆலைக்காக வெட்டப்பட்டுவிட்டதால், விறகிற்குக்கூட அக்கிராமத்தில் வழியில்லை என அந்த சோகத்தைப் பதிவு செய்கிறது, எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஏடு.

***

ந்தவொரு முதலாளியும் தமது சொந்தக் கைக்காசைப் போட்டு தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவி, இலாபத்தைக் குவிப்பதில்லை. மாறாக, விவசாயிகளின் நிலத்தை அபகரித்துக் கொள்வதன் மூலமும், கைத்தொழில் உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து நிர்மூலமாக்குவதன் மூலமும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும்தான் முதலாளித்துவம் தனது வளர்ச்சியைச் சாதித்துக் கொண்டது என்பதை வரலாற்று வழியில் நிரூபித்திருக்கிறது, மார்க்ஸின் மூலதனம் நூல். போஸ்கோ, அந்த நிரூபணத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டு.
இரும்பு எஃகு ஆலை அமைப்பதற்கு 4,004 ஏக்கர் நிலம், ஆலை தொடர்பான அடிக்கட்டுமான வசதிகள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் குடியிருப்பு நகரியத்தை உருவாக்குவதற்கு 2,000 ஏக்கர் நிலம், இரும்புச் சுரங்கத்தை அமைப்பதற்கு 6,177 ஏக்கர் வனப்பகுதி என 12,000 ஏக்கர் நிலத்தை, ஒடிசா மாநில அரசின் துணையோடு அபகரித்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தது, போஸ்கோ. மேலும், ஜடாதாரி என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இரும்பை ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கும் போஸ்கோவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போஸ்கோ கண் வைத்திருந்த நிலப்பகுதி வானம் பார்த்த வறண்ட பூமியல்ல. நெல்லும், வெற்றிலையும், முந்திரியும், பலவிதமான காய்கறிகளும் விளைகின்ற வளமான பூமி. மகாநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி உள்ளிட்ட ஆறுகளும், பல பத்துக்கணக்கான காட்டாறுகளும், நீரோடைகளும், அருவிகளும் கொண்ட நீர்வளமும் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டு வளமும் நிறைந்த பகுதி.
போஸ்கோவின் திட்டம் நிறைவேறியிருந்தால், ஆலை அமையவிருந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயக் குடும்பங்களும்; துறைமுகம் அமையவிருந்த பகுதியைச் சேர்ந்த 20,000 மீனவக் குடும்பங்களும், இரும்புச் சுரங்கம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்ததர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினக் குடும்பங்களும் தமது வாழ்வாதாரங்களை இழந்து, அகதிகளாக வெளியேற வேண்டியிருந்திருக்கும்.
ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் போஸ்கோ திட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில், அந்நிறுவனம் 6,000 பேருக்கு வேலை தரப்போவதாக அளித்த வாக்குறுதியைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் குறிப்பிடமுடியும்.
ஏனென்றால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் வளர்ச்சியும் வருமானமும் இன்றிக் கஞ்சிக்குச் செத்துக் கொண்டிருக்கவுமில்லை. போஸ்கோ வந்துதான் அவர்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் வாழ்ந்து வரவில்லை. “கூலி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் போக, மாதமொன்றுக்கு எனக்கு 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது” என்கிறார், சிறீதர் சுவைன் என்ற வெற்றிலைத் தோட்ட விவசாயி.
இதற்கு அப்பால், “ஒவ்வொரு பருவத்தின் போதும் முந்திரி விளைச்சல் மூலம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்” எனக் கூறும் அவர், “நான் பள்ளிக்கல்விகூட முடிக்காதவன். போஸ்கோவோ அல்லது வேறு நிறுவனமோ எனக்கு இந்த வருமானத்தைத் தருமா?” எனக் கேட்கிறார்.
அவரது வருமானம், இந்தப் பகுதி வெற்றிலை மற்றும் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றம். மேலும், ஒடிசாவிலேயே இந்தப் பகுதியில்தான் விவசாயக் கூலிகளின் வருமானமும் அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போஸ்கோ ஆலை அமையவிருந்த கிராமங்களான திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் விளையும் வெற்றிலையின்  மூலம் மட்டும் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் வெற்றிலை விவசாயம் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அவ்விவசாயம் மேலும் பல நூறு ஆண்டுகள் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், போஸ்கோவின் ஆயுட்காலமோ வெறும் முப்பது ஆண்டுகள்தான் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே போஸ்கோ நிறுவனம் ஏறத்தாழ இரண்டு இலட்சம் காட்டு மரங்களை வெட்டியிருக்கிறது.
இதனால், இனிமேலும் காட்டு மரங்களை வெட்டுவதற்கு அந்நிறுவனத்திற்குத் தடைவிதித்தது, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே இத்துணை அழிவென்றால், போஸ்கோ வெளியேற்றப்படாமல் போயிருந்தால், எதிர்வரும் முப்பது ஆண்டுகளில், அந்நிறுவனம் இந்தப் பகுதியையே சுடுகாடாக்கியிருக்கும்.
ஆனால், ஆளுங்கட்சிகளுக்கும், மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின், மீனவர்களின் வாழ்க்கை அழிவது குறித்தோ, இயற்கையும் சுற்றுப்புறச் சூழலும் நாசமாவது குறித்தோ சிறிதும் கவலையில்லை. அவர்களது அக்கறையெல்லாம் போஸ்கோவின் வளர்ச்சியை, அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு அசாதாரணமான இலாபம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவது மட்டும்தான். அதற்காக அவர்கள் எந்த எல்லை வரையும் செல்லத் தயாராக இருந்தார்கள்.
இரும்புச் சுரங்கத்தையும், ஆலையையும் அமைத்துக்கொள்ள போஸ்கோவிற்கு அனுமதி அளித்ததில் வன உரிமைச் சட்டத்தைக் கடாசியெறிந்தார்கள். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்தார்கள். மேலும், ஒரிசா மாநிலத்தில் தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாதுவில் 30 சதவீதத்தைச் சர்வதேச சந்தை மதிப்பில் முப்பது ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள போஸ்கோவிற்குத் தாராள சலுகையும் வழங்கினார்கள்.

***

“மூலதனத்திற்கு 100 சதவீதம் இலாபம் கிடைக்குமென்றால், எல்லா மனித நியதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்” எனத் தனது மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
மூலதனத்தின் நியதியே இதுதான் எனும்போது, 600 சதவீதத்திற்கும் மேலான இலாபம் எனும் உணர்ச்சியால் தூண்டப்பட்டிருந்த போஸ்கோ இதற்கு விதிவிலக்காக இருந்துவிடுமா? அந்நிறுவனம், தன்னை எதிர்த்து நின்ற விவசாயிகள், மீனவர்கள் மீது அருவருக்கத்தக்க ஊழியாட்டத்தைக்  கட்டவிழ்த்துவிட்டது.
போஸ்கோவிற்கு எதிரான பத்தாண்டு காலப் போராட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பொருளாதார இழப்புகளை மட்டும் சந்திக்கவில்லை. போராட்டத்தில் முன்னணியில் நின்ற நான்கு தோழர்களைக் குண்டுவீச்சுக்குப் பலி கொடுத்தார்கள். சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கல்வியை இழந்தார்கள்.
போராட்டத்தில் உறுதியாக நின்ற கிராமங்கள் போலீசாரால் சட்டவிரோதமாக முற்றுகையிடப்பட்டதால், கிராமத்தைவிட்டு வெளியே செல்ல முடியாமல் முடக்கப்பட்டார்கள். போலீசாலோ அல்லது போஸ்கோ ஆதரவாளர்கள் என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்த குண்டர்களாலோ எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உறையவைக்கப்பட்டார்கள்.
“கொலை, கொலைமுயற்சி, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் இக்கிராம மக்கள் மீது ஏறத்தாழ 3,000 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 70 சதவீதமான வழக்குகள் போஸ்கோவுக்கு எதிராகப் போராடும் யாரையும் கைதுசெய்யும் வண்ணம் அடையாளம் தெரியாத நபர்கள் என்றபடி தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்” கூறுகிறார், இக்கிராம மக்களுக்காக வாதாடிவரும் வழக்குரைஞர்.
ஆனால், இந்த அச்சுறுத்தல்களெல்லாம் அவர்களின் மன உறுதியைக் கொஞ்சம்கூட அசைத்துவிடவில்லை. 2008 -ஆம் ஆண்டில் போஸ்கோ எதிர்ப்பாளர்கள் மீது ரவுடிப் பட்டாளம் நடத்திய குண்டுவீச்சில் துலா மண்டல் மாண்டுபோனார். 2013 -ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு குண்டுவீச்சில் அவரது சகோதரர் தருண் மண்டல் மாண்டுபோனார். அச்சகோதரர்களின் வயதான தந்தை ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை, “இராணுவமயமான அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது மகன்கள் தியாகியானதாக”ப் பெருமிதம் கொண்டாரே தவிர, துவண்டு விடவில்லை.
இந்த மனவுறுதியும் போஸ்கோவின் அடியாளாகச் செயல்பட்ட அரசுப் படைகளின் அடக்குமுறைகள், சூழ்ச்சிகளுக்கு எதிராக அவர்கள் கைக்கொண்ட போராட்ட உத்திகளும்தான் போஸ்கோவைத் துரத்தியடித்தன.

***

போஸ்கோவைத் தோற்கடித்ததன் மூலம் விவசாயிகள் தமது வாழ்வாதாரமான நிலம் அபகரிக்கப்படுவதை மட்டும் தடுத்துவிடவில்லை. விலை மதிப்பற்ற இரும்புத் தாது அடிமாட்டு விலைக்குக் கொள்ளையடிக்கப்படுவதையும், மிக முக்கியமாக அந்தப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலும் காட்டு வளமும் நீர் வளமும் அழிந்துபடும் அபாயத்தையும் தடுத்து நிறுத்தி, நாட்டு நலன், மக்களின் நலனைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
போஸ்கோ வெளியேறிவிட்டபோதும், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட 2,700 ஏக்கர் நிலத்தைத் திருப்பி அளிக்க மறுத்துவருகிறது, ஒடிசா அரசு. அந்நிலத்தை உள்நாட்டு இரும்பாலை முதலாளிகளுக்குக் கொடுத்து, போஸ்கோ கைவிட்ட திட்டத்திற்கு உயிர் கொடுக்க முயலுகிறது. ஒடிசா அரசின் இந்த துரோகத்திற்கு எதிராகத் தமது போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறது, போஸ்கோ பிரதிரோத் சங்கர்ஷ் சமிதி.
போஸ்கோவிற்கு எதிரான வெற்றியைப் பெற அம்மாநில விவசாயிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது உண்மைதான். இத்துணை இழப்புகளுக்குப் பின்னர் இந்தப் போராட்டம் தோல்வியடைந்திருந்தால்கூட, இப்போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைதான் முக்கியமானதாகும்.
இப்போராட்டம் சட்டம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் தயவை நம்பி நடைபெறவில்லை. உள்ளூர் பகுதி மக்களின் சொந்த பலத்தையும், போராட்டக் களத்துக்கு வெளியே இருந்த ஜனநாயக சக்திகளின் ஆதரவை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு நடைபெற்றது.
இதற்கு மாறாக, வழமையான, குறுகிய சட்டவாத போராட்ட வரம்புக்குள் இப்போராட்டம் நின்றிருந்தால், எதிரிகள், அதாவது ஆளுங்கட்சிகளும் அதிகாரவர்க்கமும் இப்போராட்டத்தை என்றோ ஒழித்துக்கட்டியிருப்பார்கள்.
தமிழகத்தின் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு உற்பத்தியாளர்களும் தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் அரசின் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி விடக்கூடாது என்பது மட்டுமல்ல, நீதிக்காக நீதிமன்றப் படியேறக்கூடாது என்பதும் போஸ்கோ எதிர்ப்பு போராட்டம் தரும் படிப்பினையாகும்.
இந்த அரசும், ஆளுங்கட்சிகளும், அதிகாரவர்க்கமும் எதிரிகளின் கையாள் என்பதை மனதிற்கொண்டு போராட வேண்டும். வளர்ச்சி, சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்களால் திணிக்கப்படும் திட்டங்களை மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். அவர்களின் கருணையை நிராகரிப்பதோடு, மக்கள் மீதான இந்த அரசின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.  அதற்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவும் வகையில் போராட்டத் திட்டங்களையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய மாற்றை உருவாக்கி வளர்த்துச் செல்வதுதான் தற்போதைய தேவையாகும். போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் இத்திசைவழியில் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது என்பதுதான் அப்போராட்டத்தின் சிறப்பாகும்.
-திப்பு
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

கருத்துகள் இல்லை: