ஞாயிறு, 19 நவம்பர், 2017

தமிழகத்தின் சூப்பர் முதல்வராக செயல்பட துவங்கியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

நக்கீரன் : டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி தமிழகத்தின் சூப்பர் முதல்வராக செயல்பட துவங்கியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கோவை சென்றிருந்த கவர்னர் புரோஹித், நிகழ்ச்சி முடிந்ததும், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசின் உயரதிகாரிகள் பலரையும் அழைத்து ரிவியூ மீட்டிங் நடத்தியிருக்கிறார். அந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சிப் பணிகள், வழக்குகள், ரேசன் பொருட்களின் நிலை, க்ரைம் ரேட் உள்பட பல விசயங்களில் கேள்விகள் கேட்டு அதிகாரிகளை திணறடித்திருக்கிறார் கவர்னர். ஒரு முதலமைச்சர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை -அதாவது முதலமைச்சரின் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் புரோஹித்.
கோவையைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக இத்தகைய ஆய்வுக்கூட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், தனது அதிகார வரம்பை மீறி கவர்னர் நடந்துகொள்கிறார் என சர்ச்சைகள் வெடிக்கத்துவங்கியுள்ளன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட பல்வேறு அரசியல்கட்சிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட மாநில சுயாட்சி உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் பல்வேறு அமைப்புகளும் கவர்னரின் அதிகார மீறலை கண்டித்திருக்கின்றன. ஆனால், தங்களது அதிகாரம் பறிக்கப்படுகிறதே என அலட்டிக்கொள்ளாமல் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. கவர்னர் நடத்திய ஆய்வுக் கூட்டம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, ""அரசு நிர்வாகத்தின் தலைவராக கவர்னர் இருப்பதால் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தது தப்பில்லை'' என்கிறார் ரொம்பவும் சிம்பிளாக.

மாநில சுயாட்சி குறித்தும் கவர்னரின் அதிகாரம் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ""கவர்னரின் நடவடிக்கைகள் மாநில சுயாட்சிக்கு விடப்பட்ட ஒரு சவால். இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நிர்வாக உறவுகளை சீர்திருத்த பல கமிட்டிகள் அமைக்கப்பட்டன. முதல் கமிட்டி, ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு தலைமையில் அமைந்தது. மௌலானா ஆசாத், சரோஜினி நாயுடு போன்றவர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு லக்னோவில் அதன் அறிக்கையை வெளியிட்டார் மோதிலால். அதில்

"மாகாணம் கூடிய சுயாட்சிதான் அவசியம்; மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது' என வலியுறுத்தப்பட்டது.

;அதன்பிறகு அனுமந்தப்பா கமிட்டி, சர்க்காரியா கமிட்டி, ராஜமன்னார் கமிட்டி என அமைக்கப்பட்ட அனைத்தும், மாநில சுயாட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்; மத்திய அரசின் தலையீடுகள் கூடாது என பரிந்துரைத்தன. மாநிலங்கள் மீது மத்திய அரசு செலுத்தும் ஆதிக்கம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களின் மாநாட்டை ஒருமுறை நடத்தினார் கர்நாடக முதல்வராக இருந்த  ராமகிருஷ்ண ஹெக்டே. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மாநிலங்களுக்கு கவர்னர் தேவையில்லை என அறிக்கை வாசித்தார் ஹெக்டே. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது தமிழக கவர்னராக இருந்தார் பிரபுதாஸ் பட்வாரி. அவரது விருந்தினராக இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிருபாளனி சென்னை வந்து ராஜ்பவனில் தங்கியிருந்தார்.

அவரை சில நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து அவரிடம் நாங்கள் விவாதித்தபோது, "கவர்னர் என ஒருவரை நியமித்து மாநில அரசை வேவுபார்க்கும் கங்காணி வேலை பார்க்கக்கூடாது. ஓய்வு பெற்ற வேலையில்லா ஆட்களை கவர்னராக நியமித்து அரசாங்க பணத்தை வீணாக்குகிறார்கள். அதனால் கவர்னர் பதவியே இருக்கக்கூடாது' என சொன்ன கிருபாளனி, இது குறித்து அப்போது மொரார்ஜி தேசாய்க்கும் கடிதம் எழுதினார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருஷ்ணய்யர்,

 "கவர்னர் என்பவர் ராஜ்பவனின் வாடகைதாரர். வாடகைதாரருக்குரிய அதிகாரம் மட்டுமே அவருக்கு இருக்கிறது' என தெளிவுபடுத்தியுள்ளார். ஆக, கவர்னருக்கென விசேஷ அதிகாரம் எதுவும் அரசமைப்பு சட்டம் கொடுக்கவில்லை. அந்த வகையில், தற்போதைய கவர்னர் பன்வாரிலால், தனக்கான அதிகார எல்லையை மீறி செயல்படுகிறார். மாநில சுயாட்சிக்கு இது ஆபத்தானது'' என்கிறார் அழுத்தமாக.

அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் நேரடி தலையீடு மாநில ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற ரீதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். அவரிடம் நாம் பேசியபோது, ""ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையை டெல்லி, பாண்டிச்சேரியை அடுத்து தமிழகத்திலும் பிரயோகப்படுத்த துவங்கிவிட்டது மத்தியிலுள்ள மோடி அரசு. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதிமட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் ஆட்சி நடைமுறையில் இருக்கும்போது, அரசு நிர்வாகத்தில் நேரடியாக ஆளுநர் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. அதனை மீறி ஆளுநர் செயல்படுவது சர்வாதிகாரத்தனம். இவையெல்லாம் தெரிந்தும், ஆளுநரின் நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி அரசு நியாயப்படுத்துவது மாநில அரசை மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பதை நிரூபிப்பதாக இருக்கிறது'' என்கிறார் வேல்முருகன்.


கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிராக முதல்வர் எடப்பாடியிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகளிடம் நாம் பேசியபோது, ""சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் கடமை ஆளுநருக்கு இருக்கிறது. அந்த வகையில், தனக்கு நேரடியாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நிர்வாகத்தை சரி செய்ய ஆளுநர் விரும்பினால், முதல்வரையோ அல்லது தலைமைச்செயலாளரையோ அழைத்து விளக்கம் கேட்கலாம் அல்லது கடிதம் எழுதி கேட்கவும் செய்யலாம். இந்தளவுக்குத்தான் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இதற்கு மாறாக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகாரம் அவருக்கு கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ரூல் அமல்படுத்தப்பட்டு அவருக்கென சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே நிர்வாகத்தில் நேரடியாக கவர்னர் தலையிட முடியும். ஆனால், மோடிக்கு கட்டுப்படும் பலகீனமான அரசு இருப்பதால், நிர்வாகத்தை கவர்னரை வைத்து நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

சில மாதங்களுக்கு முன்பு தலைமைச்செயலகத்திலேயே முதல்வர் எடப்பாடியை வைத்துக்கொண்டே அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார் மத்திய அமைச்சராக இருந்த வெங்கையாநாயுடு. அதை அனுமதித்ததன் விளைவு தற்போது கவர்னர் வரை நீண்டுள்ளது. தமிழ்நாடு கவர்னராக பொறுப்பேற்றதும் டெல்லிக்கு சென்ற கவர்னர் புரோஹித், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய மூவரையும் சந்தித்து தமிழக அரசு நிர்வாகம் பற்றி விவாதித்துவிட்டு சென்னை திரும்பியிருந்தார். அந்த விவாதத்தின் போது, "டெல்லியிலிருந்து உத்தரவு கிடைக்கும்வரை அமைதியாக இருக்கவும்' என சொல்லப்பட்டதால், அமைதியாக இருந்தார். அண்மையில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவும் ஊழல்களும் மலிந்துவிட்டதாக தமிழகத்தை பற்றி ரிப்போர்ட் வந்தபடி இருக்கிறது. அவை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். மாநில அரசு உங்களுக்கு ஒத்துழைப்புத் தரும். நிர்வாகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்பத்தான், செயல்பட துவங்கியிருக்கிறார் கவர்னர்.


ஆட்சியை அதன் ஆயுள்காலம் முடியும் வரை தக்க வைத்துக்கொள்ள இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். விரும்புவதால் தமிழக அரசை மத்திய அரசுக்கு அடமானமாக எழுதிக் கொடுத்துவிட்டனர். விரைவில் கோட்டைக்குள் நுழைந்து ஆய்வு நடத்தும் திட்டமும், முதல்வரின் தலைமையில் நடத்த வேண்டிய கலெக்டர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களின் மாநாட்டை கவர்னர் தலைமையில் நடத்திடும் யோசனையும் கவர்னருக்கு மத்திய அரசு போட்டுக்கொடுத்துள்ளது. ராஜ்பவனில் அப்பாயின்ட்மெண்ட் கேட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக நல அமைப்பினருக்கு நேரம் ஒதுக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. அத்துடன் சட்டசபை வளாகத்தில் உள்ள கவர்னர் அறையுடன், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறை உள்ள பகுதியில் ஓர் அறையும் ரெடியாகிறது. இனி, கவர்னரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அதிரவைக்கும். 2018-19-க்கான பட்ஜெட்டை மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்கள். பட்ஜெட்டுக்கு முன்போ அல்லது பின்போ சட்டமன்றத்தை முடக்கவும் டெல்லியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் கவர்னரின் தற்போதைய ஆக்ஷன்கள்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்


முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை மெல்ல சுழற்ற ஆரம்பித்திருக்கும் மோடியின் தயவில் சூப்பர் முதல்வராகியிருக்கிறார் கவர்னர் புரோஹித்!t;">-இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: