சனி, 25 நவம்பர், 2017

நிதின் கத்காரி கோதாவரியில் இருந்து குழாய் மூலம் காவிரிக்கு நீர் கொண்டுவர திட்டமாம்!


கட்கரியின் கற்பனைத் திட்டம்!மத்திய நீர்வளத் துறை மின்னம்பலம் :அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் (நவம்பர் 23) சென்னையில் செய்தியாளர்களிடம் கோதாவரியிலிருந்து இரும்புக் குழாய் போட்டு, காவிரிக்குத் தண்ணீர் கொண்டுவரப் போவதாகவும், அதற்குப் பிறகு மாநிலங்களுக்கிடையே தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்து போகும் என்றும் கூறியுள்ளார்.
இதை ஒரு கற்பனைத் திட்டம் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.
கோதாவரியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீர் கொண்டுவந்து, கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும், சோசீலாவிலிருந்து 100 டி.எம்.சி. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

இதுபற்றி காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவிக்கையில்...
“இந்தக் கற்பனைத் திட்டம் நிறைவேற்றப்படுவதாகவே வைத்துக் கொண்டாலும், 100 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகமும், தமிழ்நாடும் பங்கிட்டுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்? அது எப்படி காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்த்துவிடும்?
ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு பணம் கொடுத்து கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு சென்னை குடிநீருக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஓராண்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வேண்டும். இதுவரை எந்த ஆண்டிலும், 12 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக் குடிநீருக்கு ஆந்திரப்பிரதேசம் விட்டதே கிடையாது!
கிருஷ்ணாவிலிருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும் ஆந்திரப்பிரதேச அரசுக்குமிடையே 1977இல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்காக, 2015 மார்ச் வரை மட்டும், சற்றொப்ப 662 கோடி ரூபாயை ஆந்திராவுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டப்படி 12 டி.எம்.சி. தண்ணீர் வரவில்லை, அதிக அளவாக ஓராண்டுக்கு 3.5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது.
இந்த நிலையில், கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் வரும் என்றும், அது கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலுள்ள காவிரிச் சிக்கலைத் தீர்த்துவிடும் என்றும் கூறுவது, தமிழ் மக்களை ஏமாளிகளாகக் கருதிக்கொண்டு கூறுவதாகும்’’ என்கிறார் பெ.மணியரசன்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், “கோதாவரி நீர் கொண்டுவரும் அற்புதமான திட்டத்தை நடுவண் அமைச்சர் அறிவித்திருக்கிறார்” என்று கூறி, மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். கோதாவரித் தண்ணீர் வந்துவிட்டால், டெல்டா மாவட்டங்களில் பருவமழை தவறும்போது ஏற்படும் சாகுபடி பாதிப்பு நீங்கிவிடும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இதுபற்றி மணியரசன் மேலும், “காவிரி டெல்டாவில் சாகுபடி பாதிக்கப்படுவதற்கான முதற்பெரும் காரணம், கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்து விட மறுப்பதுதான் என்பதை மறைத்து, பருவமழைப் பொய்த்துப் போவதுதான் காரணம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது நியாயமா, நேர்மையா?
நடப்பாண்டில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், சராசரி அளவைவிட மிக அதிகமாக மழை பெய்து, கர்நாடக அணைகளும் ஏரிகளும் நிரம்பின. ஆனாலும்கூட, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய மாதவாரியான அளவு நீரைக் கர்நாடகம் திறந்துவிட மறுத்துவிட்டது. அந்த நீரைப் பெற்றுத் தர இந்திய அரசு முன்வரவில்லை. அந்த நீரைப் பெறும் நேரடி முயற்சிகளில் தமிழ்நாடு அரசும் ஈடுபடவில்லை.
நடப்பு சாகுபடியைப் பாதுகாக்க கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற வேண்டிய தேவை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், “கோதாவரித் தண்ணீர் வரும்” என்றும், “ஆகா அற்புதம் அற்புதம்!” என்றும் முதலமைச்சர் குதூகலிப்பது பொறுப்பற்ற செயலாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள், கங்கை - காவிரி இணைப்பு, கோதாவரி நீர் கொண்டுவருதல் போன்ற கானல் நீர் திட்டங்களில் இனியும் ஏமாற மாட்டார்கள். காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டவும், நடப்பு சாகுபடிக்குக் கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறவும் இந்திய அரசும் - தமிழ்நாடு அரசும் நெஞ்சத்தூய்மையோடு விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாண்டும் சாகுபடி பொய்த்தால் வாழ வழி இல்லாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும்” என்று எச்சரித்துள்ளார் மணியரசன்.

கருத்துகள் இல்லை: