திங்கள், 11 செப்டம்பர், 2017

மாணவர்கள் உட்பட 26 பேர் புழல் சிறையில் அடைப்பு .. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சென்னையில் 13 மாணவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 2-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை. சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பூர் மேம்பாலம் அருகில் மாநகராட்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தையும் மாணவர் அமைப்பினரே தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெசன்ட் நகரில் கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு, போராட்டம் நடத்திய மாணவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: