புதன், 13 செப்டம்பர், 2017

குரங்கு பொம்மை ... சென்னை தெருக்களின் சின்னச் சின்ன உணர்வுகள்....

திரையில் கதை சொல்ல உறுதியான
இலக்கணம் எதுவும் இல்லை. எந்த
கதையை சொன்னாலும், எப்படி சொன்னாலும் அது சுவாரசியமாக, பார்ப்பவர்களை கதைக்குள் இழுப்பதாக, உணரவைப்பதாக இருந்தால் அதுவே சிறந்த திரைப்படமாகும். உணர்ச்சிமிக்க  வசனங்களாலேயே பெரும்பகுதி கதையை சொன்னது ஒரு காலம். கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளால்கதை சொல்வதன் பக்கமாக தமிழ்சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய கதை சொல்லல் முறையில், சிறந்த படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இயக்குனர் நித்திலனின் குரங்கு பொம்மை.ஊரே பயப்படும், வெறுக்கும் ஆளான தன் நண்பன் தேனப்பனின் மரக்கடையில் மிக விசுவாசமான ஊழியர் பாரதிராஜா. அவரது மகன் விதார்த், சென்னையில் டாக்ஸி ஓட்டுனர். தன் நண்பனுக்காக, விலையுயர்ந்த ஒரு கடத்தல் பொருளை, குரங்கு பொம்மை படம் போட்ட ஒரு பையில் எடுத்துக்கொண்டு, இன்னொருவருக்குக் கைமாற்ற  சென்னைக்குக்  கொண்டு செல்கிறார் பாரதிராஜா.


சென்ற இடத்தில் அவருக்கு நிகழ்வதும், குரங்கு பொம்மைப் பைக்கு நிகழ்வதும் தான் படம். ஒவ்வொருவருக்கும் பணத்தின் மேல் இருக்கும் பார்வை தான்  படத்தின்  அடிப்படை நூலாக இருக்கிறது. தேவைக்கு மட்டும் போதும் என்பவர்கள், தேவை அதிகமாய் இருப்பவர்கள், தேவையைத் தாண்டிய வெறியோடு இருப்பவர்கள் தான் படத்தின் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அத்தனை தெளிவாக, சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்கி நடித்திருக்கும்  பிக்பாக்கெட்  கதாபாத்திரம் , நாயகி டெல்னா டேவிஸின் தின்னிப்பண்டாரம் உறவினர்  பாத்திரம் என அனைத்தும் படத்துக்கு வழு சேர்ப்பதாகவே அமைந்திருக்கின்றன.  

இயக்குனர்  பாரதிராஜா, நடிப்பில் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். தன் கதையை சொல்லிவிட்டு, என்ன நடக்கப் போகிறது என்பது தனக்குத் தெரியுமென்பதை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி, அவரது நடிப்பாலும், காட்சியமைப்பாலும் தமிழ் திரைப்படங்களின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாக இணைகிறது. விதார்த், தன் நடிப்பை விட படத் தேர்வுகளுக்கு பாராட்டப்பட வேண்டியவர். 

பெரிய வெற்றிகள் பெறுவார் என நம்புவோம். நாயகி டெல்னா டேவிஸ், தேவைக்காக சம்பாரிக்கும், அதே நேரம் எல்லா ஆசைகளும் உடைய  இன்றைய எளிய பெண்களின் பிரதிநிதியாக இயல்பாக, அழகாக இருக்கிறார்.   பாட்டு பாடிக்கொண்டே இருக்கிறார், எதையும் கொலையையும் எளிதாக செய்கிறார், தனது நண்பனுக்கொன்று என்றவுடன் துடிக்கும் தேனப்பனின் கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பு.">படங்களில் எப்போதாவது வந்தாலும் எப்படியும் மனதில் நின்றுவிடுகிறார் குமரவேல். சரியாக பயன்படுத்தியிருக்கிறார் நித்திலன்.

முதல் பாதி சற்று மெதுவாய் பயணித்து வந்து நம்மை நிமிரவைக்க ஏற்படும் தாமதம் ஒன்று தான் படத்தில் சற்று சோதிப்பது. அதன் பின்னர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அழுத்தமாய் பதிகின்றன. வன்முறையாக இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சென்னையின் தெருக்களில் சின்னச் சின்ன விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறது உதயகுமாரின் கேமரா. அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசை சற்று வித்தியாசமாக சிறப்பாக ஒலித்திருக்கிறது.

'பார்த்தும் பார்க்காமல்' பாடல் இனிமை. விதார்த்தின் அறை, கஞ்சா கருப்புவின்  வீடு, காவல் நிலையம் என இயக்குனரின் எண்ணத்தை அறிந்து ரசனையாக செய்திருக்கிறார் கலை இயக்குனர். விறுவிறுப்பான படமென்றால் அதிரடியாக ஒலிக்கும் இசை, நொடிக்கு நூறுமுறை திரும்பும் கேமரா என்றில்லாமல், காட்சிக்கு காட்சி ஒவ்வொரு படியாக அழுத்தத்தை அதிகரித்து இறுதியில் உச்சத்தை எட்டும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கிறார் நித்திலன். வாழ்த்துகள்.">சாதாரண பொம்மை அல்ல !!!  நக்கீரன்

கருத்துகள் இல்லை: