வியாழன், 14 செப்டம்பர், 2017

BBC :மியான்மார் ரோஹிஞ்சா தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவி?

மியான்மரில் இருந்து 3 லட்சத்துக்கும்
அதிகமான ரோஹிஞ்சா மக்கள்
வங்கதேசம் தப்பிச்சென்றதற்கு, மியான்மர் ராணுவம் மற்றும் அர்சா எனும் ரோஹிஞ்சா தீவிரவாதிகள் இடையிலான மோதலே காரணம். ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மரின் ரகைன் மாநிலத்தில் காவல் நிலையங்கள் மீது அரக்கன் ரோஹிஞ்சா ராணுவத்திற்கு எதிராக போரிடும் அர்சா எனப்படும் அரக்கன் ரோஹிஞ்சா மீட்புப்படை (அர்சா) பற்றிய பிபிசி மானிடரிங் பிரிவின் செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவி?
பாகிஸ்தானின் தீவிரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பா, அர்சா எனப்படும் ரோஹிஞ்சா போராளிகளுக்கு பயிற்சி அளித்தாக கூறும் இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை, மியான்மர் செய்தியாளர்களால் நடத்தப்படும் தி மிசிமா ஊடக குழு அடிக்கடி மேற்கோள்காட்டுகிறது.

பாகிஸ்தானின் தாலிபன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருக்கமாக இருக்கும் மியான்மரின் மற்றோரு தீவிரவாதக் குழுவான ஹுஜி-ஆ குழுவின் தலைவரால், அடா உல்லாஹா என்பவர் அர்சா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் எனவும் மிசிமா ஊடக குழு கூறியிருந்தது.
செப்டம்பர் 1-ம் தேதி, சவுத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றினை எழுதிய மிசிமா ஊடக குழுவின் ஆசிரியர் ஷுபிர், வங்கதேசத்தின் ஜமாதுல் முஜாஹிதீன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் அர்சாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது இந்தியாவையும், வங்கதேசத்தையும் கவலையடைய வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து கட்டளை வந்ததா?
ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மர் போலீஸ் சாவடிகளை அர்சா தாக்கியதன் பிண்ணனியில், பாகிஸ்தானின் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) இருந்ததாக செப்டம்பர் 5-ம் தேதி மிசிமாவில் வெளியான மற்றொரு விரிவான அறிக்கை கூறுகிறது. ஐ.எஸ்.ஐக்கும், அர்சாவுக்கு இடையில் நடந்த தொலைபேசி அழைப்புகளை இந்தியா மற்றும் வங்கதேச உளவுத்துறை இடைமறித்துக் கேட்டதாகவும், அப்போது மியான்மர் போலீஸ் சாவடிகளை தாக்குமாறு, அர்சா தலைவருக்கு ஐ.எஸ்.ஐ உத்தரவிட்டதாகவும் பெயர் குறிப்பிடப்படாத சிலரது கருத்துகளையும் மிசிமா மேற்கோளிட்டுள்ளது.
மிசிமா ஊடக குழுவால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
எல்லையில் கைமாறும் பணம்
மியான்மரில் தாக்குதல் நடத்துவதற்காக ஏறத்தாழ 200 தீவிரவாதிகள், வங்கதேச எல்லை வழியாக மியான்மர் சென்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியான செய்தி கூறுகிறது.
அர்சாவில் இணைந்து போராடும் தீவிரவாதிகள் பற்றி பல நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள இப்பத்திரிக்கை, அர்சாவில் உள்ள வெளிநாட்டவர்களில் பெரும்பாலோனோர் பாகிஸ்தானியர்கள் என கூறியுள்ளது.
மேலும், செளதி அரேபியாவில் இருந்து மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம் வழியாக அர்சாவுக்கு பணம் கைமாறுவதாகவும் இந்தப் பத்திரிக்கை எழுதியுள்ளது.
அபாயத்தில் அண்டை நாடுகள்
மியான்மரில்,’ஜிகாதி’க்கு போராட ஆட்கள் தேவை என இந்தோனீசியா, மலேசியா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகின்றன. இதனால், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு சீர்குலையும் நிலை ஏற்படலாம் எனச் சிங்கப்பூரின் சர்வதேச பகுப்பாய்வு நிறுவனத்தின் ராஜரத்தினம் எச்சரிக்கிறார். வங்கதேசம், இந்தோனீசியா, மலேசியாவில் உள்ள ஐ.எஸ் ஆதரவு குழுக்கள், தாக்குதல்களை நடத்துவதற்குத் தயாராக உள்ள ரோஹிஞ்சாகளை கண்டறிந்து, அவர்களை சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறது இந்தோனீசியாவின் ஐபிஏசி நிறுவனம்.
இந்தோனீசியாவில் 800, மலேசியாவில் கிட்டதட்ட 56,500 பதிவு செய்யப்பட்ட ரோஹிஞ்சாக்கள் உள்ளனர். ஆனால், பதிவு செய்யப்படாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
போராளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?
அக்டோபர் 2016-ம் ஆண்டு முதல் பெரிய தாக்குதலை அர்சா நடத்தியபோது, அந்த அமைப்பில் 400 போராளிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறனர்.
இதற்கு ராணுவம் பதிலடி கொடுத்தபோது, துப்பாக்கிகள்,கத்திகள் வைத்திருந்த 300 அர்சா போராளிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்ததாக ராணுவம் கூறுகிறது.
ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் போலிஸ் சாவடிகள் தாக்கப்பட்ட போது, 6,500 போராளிகள் தாக்குதலில் பங்காற்றியதாக மியான்மர் கூறுகிறது.< கடந்த ஆண்டு அக்டோபரில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலே, அர்சாவில் சேர பல இளம் ரோஹிஞ்சாக்களை தூண்டியது என ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.
போராட கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?
ராணுவத்திற்கு எதிராகப் போரிட, இளைஞர்களையும், சிறுவர்களையும் அர்சா கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. அர்சா சார்பில் போராடும் இளம் ஆண்கள், சிறிய கத்தி, வாள், வெடிபொருட்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சாதாரண உடையில் காணப்படுவதாகவும், கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் அர்சாவில் இணைவதாகவும் அக்குழு கூறுகிறது.
bbc

கருத்துகள் இல்லை: