செவ்வாய், 8 நவம்பர், 2016

உ.பி-யில் மகா கூட்டணி: முலாயம்சிங் தேர்தல் வியூகம்! மாயாவதி உடன்பாடில்லை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு எதிராக ‘மகா கூட்டணி’ அமைக்க சமாஜ்வாடி கட்சி ஆயத்தமாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கியுள்ள ஆளும் சமாஜ்வாடி கட்சி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறது. மாநில அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ரத யாத்திரை தொடங்கி உள்ளார். சமாஜ்வாடியின் மாநிலத் தலைவரும், முலாயம்சிங்கின் சகோதரருமான ஷிவ்பால் யாதவுக்கும், முதலமைச்சர் அகிலேஷுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலால் கட்சியில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனினும், இதை சீர்செய்யும் நடவடிக்கைகளை கட்சி தலைவர் முலாயம்சிங் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது என்று செய்திகள் வெளியாகின. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சியின் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “சமாஜ்வாடி கட்சி தொடர்பாக மட்டுமே நான் கருத்துகளை தெரிவிப்பேன். தேர்தல்கள் மிகவும் அருகே உள்ளது. கூட்டணியில் யார் பயன் அடைவார்கள், யாருக்கு இழப்பு நேரிடும் என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவ் முடிவு எடுப்பார்” என்றார்.
மேலும், ‘காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கைகோர்க்குமா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அகிலேஷ் யாதவ், “சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விரும்பினால், உங்களால் (மீடியாக்கள்) தடுக்க முடியுமா?” என்று பதில் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வல்லுநராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோர், சமாஜ்வாடி கட்சியின் மூத்தத் தலைவர்களை லக்னோவில் சந்தித்து பேசினார். முலாயம்சிங் யாதவையும் சந்தித்து பேசினார். இதனையடுத்து உ.பி-யிலும் சமாஜ்வாடி கட்சி தலைமையில் மகா கூட்டணி அமையலாம் என்று தகவல்கள் வெளியாகியது.
பீகாரில் கடந்த வருடம் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியதை அடுத்து, மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த லாலுவின் ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளத்துடன் கைகோர்த்தது. மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து பாஜக-வுக்கு எதிராக ‘மகா கூட்டணி’யை உருவாக்கியது. இருப்பினும் கடைசியில் சமாஜ்வாடிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. இருப்பினும் மற்ற கட்சிகள் கூட்டணியாக பாஜக-வை எதிர்த்து வெற்றி பெற்றது. 53 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக வாங்கிய வாக்கு விகிதத்தில் முதன்மை பெற்றது. மாநிலத்தில் அதிகப்பட்சமாக பாஜக 24.4 சதவிகித வாக்குகளை பெற்றது. உ.பி-யிலும் பாஜக வெற்றியை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது. இந்நிலையில் அங்கும் ‘மகா கூட்டணி’ அமைக்கும் பேச்சு எழுந்துள்ளது  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: