புதன், 9 நவம்பர், 2016

நூலகம் நாட்டுக்கு கேடு .. டாஸ்மாக் நாட்டுக்கு நல்லது .. அதிமுகவின் கொள்கை விளக்கம்

நூலகம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!”
படிக்க நூலகங்கள் 4,028; குடிக்க டாஸ்மாக்குகள் 6,300
றாயிரம் பணம், இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான மேசை, நாற்காலி உள்ளிட்ட ஃபர்னிச்சர்கள், குடிநீர் குடம் ஒன்று, ஒரு சொம்பு, தற்காலிக வாடகையில்லாக் கட்டடம், இரண்டு அலமாரிகள், எதிர்காலத்தில் கட்டடம் கட்டுவதற்கான இடம். - இவையெல்லாம் மணமகன் வீட்டார் விதிக்கும் நிபந்தனைகள் அல்ல. ‘ஒரு கிராமத்தில் நூலக வசதி செய்து கொடுக்க என்ன விதிமுறைகள் உள்ளன’ எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தமிழக அரசு அளித்த பதில்கள்தான் இவை.

அந்த விதிமுறைகள் என்னென்ன?

 கிராமத்தில் பகுதி நேர நூலகம்தான் முதலில் தொடங்கப்படும்.

ஒரு நூலகம் அமைக்க ரூ 2 ஆயிரம் செலுத்தி இருவர் புரவலராக வேண்டும்.


20 ரூபாய் செலுத்தி, 200 நபர்கள் உறுப்பினர் களாக வேண்டும்.

மேசை, நாற்காலி, இரு புத்தக அலமாரி, குடிநீர் பாத்திரம், ஒரு சொம்பு உள்ளிட்டவை நன்கொடையாகத் தர வேண்டும்.

வாடகையில்லாக் கட்டடம், எதிர்காலத்தில் நிரந்தர நூலகக் கட்டடம் கட்டுவதற்கான இடத்தைப் பத்திரப் பதிவு செய்து தர வேண்டும்.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும் மக்களுக்கு அரசு செய்து கொடுக்கும் வசதிகள் என்ன தெரியுமா? 200 புத்தகங்கள், 2 செய்தித் தாள்கள், 2 வாரப் பத்திரிைகள் அவ்வளவுதான். காலை 8 மணி முதல் 11 மணி வரை நூலக நேரம். நூலகரின் சம்பளம் 50 ரூபாய். வெள்ளி, 2-வது சனிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை. படிக்கவே இவ்வளவு நிபந்தனைகள் இருந்தால் குடிக்க நிபந்தனைகள் என்னென்ன?
நீதிமன்றம் சொல்லியும் கேட்கவில்லை!

‘ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். எங்கள் ஊருக்கு நூலகம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தினர் கலெக்டருக்கு மனு அளிக்​கிறார்கள். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், சகாயமா என்ன? மனுவைக் கிடப்பில் போட்டுவிடுகிறார் கலெக்டர். நீதிமன்றப் படியேறிய பிறகு நூலகம் அமைக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அதன்பின்னும் நடவடிக்கை இல்லை.

நூலகத்துறை அமைச்சர் ரியாக்‌ஷன்!


நூலகத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். ‘‘அனுமந்த​புரத்துக்கு நூலகம் அமைக்க தர்மபுரி நூலக அலுவலருடன் ஆலோசித்து ஏற்பாடு செய்கிறேன். அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நூலகத் துறை இயக்குநர் நியமிக்கப்படுவார்’’ என்றார்.

வீட்டுக்கு ஒரு “குடிமகன்” உருவாக்குவோம்!
அந்த விதிமுறைகள் என்னென்ன?

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது.

பள்ளிகள், நீதிமன்றங்கள், குடியிருப்புகள், வழிப்பாட்டு இடங்கள், நெடுஞ்சாலை ஓரங்களில் டாஸ்மாக் அமைக்க அனுமதியில்லை.

திருவள்ளுவர், காந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள் மற்றும் வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக்குக்கு விடுமுறை.

அரசு அலுவகங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் கல்வி நிலையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படவேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள் நேர்மையாகவும், நாணயமாகவும் பணியற்ற வேண்டும். இழப்பு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது.

பாரில் கழிப்பறை இருக்க வேண்டும், திரைச்சீலை தொங்கவிட வேண்டும்.

பிராணிகளியோ, பறவைகளையோ மதுக்கூடத்தில் சமைக்கக்கூடாது.

மதுக் கூடத்தில் ஆபாசப் படம் இருக்கக் கூடாது.
டாஸ்மாக் விற்பனை சரிந்துவிடக் கூடாது!

அறிவை விசாலமாக்கும் புத்தகங்களைப் படிப்பதற்கு நூலகம் திறக்க அரசுக்கு மனம் இல்லை. ‘பீர் விற்பனை ஏன் குறைந்தது. அந்தக் கடையில் ஏன் மது விற்பனை டல்லடிக்கிறது’ என ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறது அரசு இயந்திரம். தீபாவளிக்கு மது விற்பனை இலக்கை எட்டிவிட்ட சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.

டாஸ்மாக் எம்.டி. ரியாக்‌ஷன்!

டாஸ்மாக் பொது மேலாளர் தங்கவேலிடம் பேசியபோது, ‘‘டாஸ்மாக் பற்றி வாய் திறக்க எனக்கு அதிகாரமில்லை. எம்.டி-யை பாருங்கள்’’ என்றார். எம்.டி. சண்முகத்தை சந்திக்கக் காத்திருந்தபோதும் அவர் நம்மை சந்திக்கவில்லை. நாட்டின் ‘குடிமகன்’களை பார்க்க மாட்டாரா? 

- அ.பா.சரவண குமார்

கருத்துகள் இல்லை: