வெள்ளி, 11 நவம்பர், 2016

தினக்கூலிகளுக்கு எதிரான போர்: ஆய்வாளர்கள் கருத்து!


minnambalam.com : கடந்த 8ஆம் தேதி செவ்வாய் இரவு மத்திய அரசு, ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. ‘கறுப்புப்பணத்தை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என்று அரசு மீண்டும் மீண்டும் சொன்னாலும் இந்தப் பொருளாதார நடவடிக்கை என்ன விதமான பின் விளைவுகளை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பதை அலசுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
சி.பி.சந்திரசேகர், பொருளாதார பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி:
இந்திய பிரதமர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ரூபாய் 500, 1000 தாள்கள் இனி செல்லுபடியாகாது என அறிவித்திருக்கிறார். இந்த முறையை அமல்படுத்த, ஏ.டி.எம்-கள் இரண்டு நாட்களும், வங்கிகள் இரு நாட்களும் மூடப்படும். இது பயங்கரவாதிகளுக்கான நிதி உதவி, கறுப்புப்பணம், சமூக விரோத செயல்களுக்கு கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவது போன்ற காரியங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சொல்லப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ… ஆனால், இது நிச்சயம் பொருளாதார இயங்கு முறையில் பிரச்னையை உருவாக்கும்.

ஏ.டி.எம்-களில் இருந்தோ, சம்பளமாகவோ பணத்தைப் பெற்று கொண்டு, கிரெடிட் கார்டுகளாலும், டெபிட் கார்டுகளாலும் பணம் செலுத்த முடியாத எவருமே, வங்கிக்கு ஓடியிருப்பர். இதுவே மோசம். அதன் தாக்கங்கள் இதை விட பெரிதாக இருக்கும். பணம் செலுத்துதலையும், பணம் கொடுத்து வாங்கும் அமைப்பையும் முடக்கி, பணப்பரிமாற்ற பொருளாதாரத்தையும் வணிகத்தையும் உறையச் செய்யும். உண்மையான எதிரிகளையும், கற்பனை எதிரிகளையும் தோற்கடிக்கலாம் என்று நினைத்த பிரதமர், சராசரி குடிமகனுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறார்.
அர்விந்த் விர்மானி, பொருளாதார வல்லுநர், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் உறுப்பினர்:
பணத்தில் பெருமளவு, இந்த இரண்டு (500, 1000) மதிப்புகளில்தான் இருக்கும் காரணத்தால், கறுப்புப்பணத்தை வெளியேற்ற இது ஒரு சிறந்த முறை. இது நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் விதமும் ஆச்சர்யமளிப்பதாக இல்லை. இப்படியான நடவடிக்கைகள், அலுவலகத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு அனுகூலமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, ரகசியமாக வைத்தே அறிவிக்கப்படும்.
சிறு வணிகர்கள், வங்கிக்கணக்கு இல்லாத பட்சத்தில் வங்கிக்கணக்கு ஒன்று தொடங்கி பணத்தை டெபாசிட் செய்யலாம். புது பணத்தாளின் இருப்பு நிலை, வங்கிகளில் இருக்கும் நீண்ட வரிசைகள் காரணமாக சில காலத்துக்குச் சிக்கல்கள் உருவாகலாம். இரண்டு வாரங்களுக்கு இது பொருளாதார நடவடிக்கைகளை சீர் குலைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கிராமப்புறங்களில், கிராம மக்களுக்கு ஒருவருக்கு ஒருவரை நன்றாக தெரியும் என்பதால், அவர்கள் நம்பிக்கையின் பெயரில், பணப்பரிமாற்றம் செய்யும் வரையில் உதவிக் கொள்ளலாம். வங்கிக்கு செல்வதற்கு அவர்களுக்கு சிரமமாக இருந்தால், மொத்த கிராமத்துக்கும் சேர்த்து ஒருவரையே, பணத்தை மாற்றிக் கொண்டு வரச் சொல்லலாம்.
இந்தியா ஹிர்வே, டெவலப்மெண்ட் ஆல்டர்நேட்டிவ்ஸி மையத்தின் இயக்குநர் பேராசிரியர், அஹமதாபாத்:
இது நல்ல நடவடிக்கை தான். ஆனால், வங்கிக்கணக்குகள் இல்லாதவர்களை இது எப்படி பாதிக்கும் என்பதுதான் கவலை. கணக்கில் வராத பணங்கள் பெருமளவில் இருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற பல வணிகங்கள் இருக்கின்றன. அந்தப் பணத்தை அவர்கள் வைத்துக்கொள்ள நினைத்தால், வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த நடவடிக்கை நிர்பந்திருக்கிறது. சம்பளத்தைப் பணமாக பெறும், வங்கிக்கணக்குகள் இல்லாத பலர் இருக்கின்றனர். ரூபாய் 2000 தாள், மக்களைக் கூடிய விரைவில் சென்றடையும் என்று உர்ஜித் படேல் சொல்லியிருப்பதால், இது எளிதாகவே இருக்கும். சில காலத்துக்கு சிக்கல்கள் ஏற்பட்டாலுமே, கறுப்புப்பணத்தை சரியாக கையாள்வதால், இது பயனுள்ள நடவடிக்கை தான். ரூபாய் 2000 தாளுமே, மீண்டும் கறுப்புப்பணத்தை உருவாக்கும் என்பது அடுத்த பிரச்னை. இதையும் சமாளிக்க வேண்டும்.
அபிஜித் சென், திட்ட கமிஷன் முன்னாள் உறுப்பினர்:
சட்ட முறைக்கேடாக குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை குறைக்கவே, ரூபாய் 500, 1000 தாள்கள் பண மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணத்தை சேர்த்து குவித்து வைக்கவே இவை பயன்படுத்தப்படுகிறது. பணப்பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், இது மிகச் சரியான காரியம். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தில் 80% இருப்பது ரூபாய் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் இருக்கிறது என்று சொல்கிறது. எனவே, பெருமளவு பணம் நிரந்தரமாக ‘இருப்பாகவே’ வைக்கப்பட்டிருந்தால் இது சரி. அல்லது பணப்பரிமாற்றங்களையே பெரிதும் நம்பி இருக்கும் பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கமாக இந்த நடவடிக்கை இருக்கும்.
இந்தியாவின் பணப் பொருளாதாரத்தின் அளவு மிகச் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், முறைசாரா துறைகளில் எல்லாம் வேலை செய்பவர்களின் அளவை பார்த்தால், மொத்த பொருளாதாரத்தின் பாதி அளவு இருக்கலாம். எனவே, அடுத்த இரண்டு நாட்களில் இந்த பொருளாதாரம் உடனடியாக சுருங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் நீண்ட கால நன்மைகள் என்னவாக இருந்தாலும், தினக் கூலியாகவோ, தங்கள் சரக்குகளை விற்கவோ பணத்தை சார்ந்திருக்கும் பலருக்கு இனி தினங்கள் கடினமாகவே இருக்கும். மேலும், கறுப்புப்பணம் உருவாகும் செயல்முறையை அழிக்காமல், குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தில் சிறிய அளவையே அழிக்கிறது இந்த நடவடிக்கை.

கருத்துகள் இல்லை: