சனி, 12 நவம்பர், 2016

ராமேஸ்வரம் மீன் வியாபாரம் நின்றது ... ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ...மீனவர்கள் வேலை நிறுத்தம்.

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிப்பு காரணமாக ராமேசுவரத்தில் மீன்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் ராமேசுவரம்:; ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். மேலும், மீன்களை தரம் பிரிப்பது, பதப்படுத்துவது, சுமை தூக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 மீனவத் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.


அவர்களுக்கு உடனுக்குடன் சம்பளம், கூலி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் பணத்தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இதனால் மீனவத் தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்க முடியவில்லை.

மேலும் மீன்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் மீன்களின் விலை சரிந்துள்ளது. கொள்முதலுக்கு வரும் ஒருசில வியாபாரிகளும் குறைந்த விலைக்கே மீன்களை கேட்பதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணப்பரிவர்த்தனை சரியாகும் வரை, 12-ந் தேதி (இன்று) முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீனவ சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-

விசைப்படகில் கடலுக்கு சென்றுவர மீனவத் தொழிலாளர்களுக்கு டீசல், ஐஸ்கட்டி என சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். தற்போது ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தரம் பிரிப்பது, சுமை தூக்குவது போன்றவற்றுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. பணத்தை உடனுக்குடன் வழங்கினால்தான் மறுகடலுக்கு பாதிப்பு இல்லாமல் செல்ல முடியும்.

மேலும், மீன்களை கொள் முதல் செய்ய வியாபாரிகளும் வரவில்லை. அவ்வாறு வந்தாலும் குறைந்த விலைக்கே மீன்களை கொள்முதல் செய்வதால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், பணப்பரிமாற்றம் சரியாகும் வரை 12-ந் தேதி (இன்று) முதல் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. நிலைமை சரியான பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.  மாலைமலர்,காம்

கருத்துகள் இல்லை: