வியாழன், 10 நவம்பர், 2016

சென்னை திருநங்கை தாரா தீக்குளித்து மரணம் .. போலீஸ் அக்கிரமம் . .. கொலை! தற்கொலை அல்ல?


சென்னையில் போலீஸ் நிலையம் முன்பு திருநங்கை ஒருவர் தீக்குளித்து
தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக சக திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருநங்கை சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தாரா (வயது 28), திருநங்கை. நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் இருசக்கர வாகனத்தில் பாண்டிபஜார் வழியாக சென்று கொண்டிருந்தார். திருமலை பிள்ளை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பாண்டிபஜார் போலீசார், தாராவின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தாராவுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தாராவை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருடைய இரு சக்கர வாகனத்தையும், செல்போனையும் வாங்கி வைத்து கொண்ட போலீசார், வீட்டில் உள்ள பெரியவர்களுடன் காலையில் வந்து இரண்டையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.
அப்போது தன்னிடம் இருந்து பறித்த செல்போனை மட்டுமாவது தருமாறு போலீசாரிடம் அவர் கேட்டுள்ளார். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து தாராவை தாக்கியதாக கூறப்படுகிறது.

தீக்குளிப்பு

இதனால் மனமுடைந்த தாரா போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ பெட்ரோலை வாங்கி கொண்டு வந்த அவர் போலீஸ் நிலையத்துக்கு முன்பாக வந்து அதை தன்னுடைய உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். தாராவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த போலீசார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தாராவின் உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி அறிந்த சக திருநங்கைகள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். தாராவின் பெற்றோர், சகோதரர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அனைவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி தாரா இறந்தார்.

சாலை மறியல்

இந்த செய்தியை கேட்டு ஆத்திரமடைந்த திருநங்கைகள் தாராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்களின் மீது ஏறியும், ஆஸ்பத்திரி முன்பு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறியும் சென்று போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் வரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம், தாராவின் உடலையும் வாங்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார், அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருநங்கைகள் குற்றச்சாட்டு

இது குறித்து செய்தியாளர்களிடம் திருநங்கைகள் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் வைத்து தாராவை போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். போலீஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருவர் தீ வைத்து கொள்ளும் வரையில் அங்கு போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் வாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை எங்களுக்கு காட்டிய பின்னர் தான் தாராவின் உடலை வாங்குவோம் என தெரிவித்தனர்.

தொடர்ந்து தாராவின் உடல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டு இருந்ததால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இணை கமிஷனர்கள் மனோகரன், அன்பு ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  dailythanthi.ocm

கருத்துகள் இல்லை: