சனி, 16 ஜூலை, 2016

உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!.. இது வரையிலும் எந்த சமூகத்திற்கு கல்வி கிடைத்து வந்தது?

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.  : :உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கூட மூப்பு அடிப்படையில் கீழமை நீதிமன்றத்திலிருந்து ஒருவர் பணியுயர்வு பெற்றுவிடலாம். ஆனால், இங்கே வழக்கறிஞராக தொழில் நடத்துவது தான் கடினம். ஏனென்றால், உச்ச நீதிமன்ற விதிகளின் படி இந்நீதிமன்றம் ஆண்டுதோறும் நடத்தும் “அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்” தேர்வில் தேர்ச்சியடையும் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கவும் வாதாடவும் முடியும் என்ற நிலை இருந்தது. அட்வகேட்-ஆன்-ரெகார்ட் என்பதை தமிழில் “பதிவிலிருக்கும் வழக்கறிஞர்” என்று பொருள் கொள்ளலாம். பின்னர், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி, வழக்கறிஞர்கள் சட்டம், 1961 நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு, எந்தவொரு வழக்கறிஞரும் உச்ச நீதிமன்றம் உட்பட இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தும் உரிமை வழங்கும் அச்சட்டத்தின் பிரிவு 30 அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியின் முயற்சியின் விளைவாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 30 நடைமுறைக்கு வந்தபிறகு எந்த வழக்கறிஞர் வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடலாம் ஆனால் வழக்கு தொடுக்க முடியாது என்ற நிலை இருக்கிறது. பதிவிலிருக்கும் வழக்கறிஞர் முறை வழக்கறிஞர் சமூகத்தின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று உச்ச நீதிமன்றத்திலேயே பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்ட போதிலும் கூட “உச்ச நீதிமன்றத்தின் பண்பையும் தரத்தையும் பராமரிக்க” இம்முறை கட்டாயமாகத் தேவை. எனவே, இம்முறையைத் தளர்த்தவோ, முற்றிலுமாக நீக்கவோ முடியாது” என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சி தொடங்கி வழக்கறிஞர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள் வரையிலும் யார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தி வருகிறார்கள்? இதுநாள்வரையிலும் எந்த சமூகத்திற்கு கல்வி கிடைத்து வந்தது? இந்த பதிவிலிருக்கும் வழக்கறிஞர் வினாத் தாளை அமைப்பது யார்? பதில்களைத் திருத்துவது யார்? இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பெரும்பாலும் யாராக இருக்கிறார்கள்? இப்போது யாரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதித்தால் உச்ச நீதிமன்றத்தின் பண்பும் தரமும் கேடடையும்? இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒருவர் பதிவிலிருக்கும் வழக்கறிஞராகத் தேர்ச்சியடைந்த பிறகும் அந்நபருக்கு வழக்குகள் கிடைக்காவிட்டால் இத்தேர்வின் பயன் என்ன? மறுபுறம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குகள் கிடைக்கப்பெறும் ஒருவருக்கு இத்தேர்வு தடையாக இருக்கலாமா?
கீழமை நீதிமன்றங்களில் சான்று அலுவலர்கள் (notary public) மலிவான விலைக்குச் சான்றளிப்பது போன்று, பதிவிலிருக்கும் வழக்கறிஞர் முறை என்பது தற்போது அதிக விலையிலான வெறும் “பெயர் கடனளிப்பு” சடங்காக மட்டும் இருக்கிறது என்பதே உண்மை.
இதுமட்டுமல்லாது, ஒரு வழக்கை வரைந்து, தொடுத்து, அதற்கு வழக்கு எண் பெறுவதற்குள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும், செலவுகளும் நீதிமன்றங்கள் எளியர்வர்களுக்கு எட்டாக்கனியாக இருந்துவருகின்றன என்பதையே உணர்த்துகிறது.
தட்டச்சு, அச்சிடுதல், நகல் எடுத்தல், உறுதிச் சான்று மற்றும் வக்காலத்தில் சான்று அலுவலர் கையொப்பம் என்று அடிப்படியான தயாரிப்பு செலவுகள்.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஓர் உண்மைக் கோப்போடு, காகித நூல் வடிவத்தில் 3 நகல்களும் சேர்த்து 1+3 என்றளவில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே விதி. ஆனால், தாக்கல் செய்யும் இடம் முதல் வழக்கு கோப்பு நகரும் ஒவ்வொரு பிரிவிலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒன்று, இரண்டு என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து வைத்துக் கொள்வர். ஆக, குறைபாடுகளைத் திருத்தி இறுதியாக வழக்கு எண் பெறுவதற்குள் கிட்டத்தட்ட 10 காகித நூல் நகல்கள் வேண்டும். இவையல்லாது, எதிர் தரப்பிற்கு வழங்க வேண்டிய காகித நூல் நகல்கள் தனி.
இவை செலவுகள் என்றால், வழக்கை எந்த பதிவிலிருக்கும் வழக்கறிஞர் பெயரில் தாக்கல் செய்கிறோமோ அவரின் பதிவு செய்யப்பட்ட எழுத்தர் வகைப்பணியாளர் (registered clerk) நேரில் வந்து அவரது அடையாள அட்டையைக் காட்டினால் தான் வழக்கு தாக்கல் முதல், மறு தாக்கல் திருத்தம், கோப்புப்படுத்துவது, எண் படுத்துதல் வரையிலான அனைத்து பதிவக வேலைகளையும் செய்ய முடியும். அதுமட்டுமல்லாது, ஒரு வழக்கு தாக்கல் செய்ததிலிருந்து இத்தனை நாட்களுக்குள் எண் படுத்தப்பட்டுவிடும் என்று உறுதியாகக் கூற முடியாது. பதிவிலிருக்கும் வழக்கறிஞரின் பதிவு செய்யப்பட்ட எழுத்தர் வகைப்பணியாளர் ஒவ்வொரு பதிவகப் பிரிவிற்கும் சென்று பின் தொடர்ந்தால் மட்டுமே அது எத்தனை அவசரம் வாய்ந்த வழக்காக இருந்தாலும் எண் படுத்தப்படும்.
இத்தனை சிக்கல்களையும் கடந்து ஒரு வழக்கை எண் செய்து விட்டாலும் கூட அதனை பட்டியல் படுத்துவது அதனினும் சிக்கலான ஒரு செயல். ஒரு வழக்கு எண் படுத்தப்படும் தேதியில் இருந்து நீதிபதி முன்பு பட்டியலிடப்படுவதற்கு 15 நாட்கள் ஆகும். ஒரு வேளை அவசர வழக்காக இருந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு குறிப்பிட்டு அதில் அவசரத்தன்மை இருப்பதாக அவர் கருதினால் பட்டியலிட அனுமதி அளிப்பார்.
அந்த அவசரத்தன்மையும் கூட ஒரு முறை வந்து நிற்பதற்கே ரூ.50,000/- முதல் ரூ.5 லட்சங்கள் வரை எந்த பேதமும் இல்லாமல் வாங்கும் முக மதிப்பு கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் வந்து குறிப்பிட்டால் தான் காதுகொடுத்துக் கேட்கப்படும்.
எனவே, வழக்கின் தரவுகள், ஏற்பட்ட உரிமை மீறல்கள், சட்டம் என நீதி வழங்க அடிப்படையானவைகளை விடுத்து, குறிப்பிடுவதிலிருந்து ஒவ்வொரு நிலை வாதங்களிலும் நீதிபதிகள் முக மதிப்பை நாடினால் இப்படியான பதிவுகளிட்டு தான் ஒவ்வொரு வழக்கையும் நடத்த வேண்டியிருக்கிறது.
கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.   thetimestamil.com

கருத்துகள் இல்லை: