வெள்ளி, 15 ஜூலை, 2016

84 பேரைக்கொன்ற பயங்கரவாதியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது

பிரான்ஸின் கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஏற்றி 84 பேரைக்கொன்று தாங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதலாளியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டியின் பெயர் மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெல் என்று பிரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன. 31 வயதான அவர் துனிஷிய நாட்டைச்சேர்ந்தவர் என்று காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவர் உள்ளூரில் வசித்தவர். அவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது. நீஸிலிருக்கும் அவர் வீட்டில் காவலர் சோதனையிடுகிறார்கள்.
இவர் சிறு குற்றங்கள் செய்பவர் என்று காவல்துறைக்கு ஏற்கனவே தெரியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் தீவிரவாத குழுக்களோடு தொடர்பு இருந்ததாக காவல்துறைக்கு தெரியாது என்பதால் பிரெஞ்சு புலனாய்வுத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர் வைக்கப்படவில்லை.

தாக்குதலாளியிடம் கைதுப்பாக்கி இருந்தது. ஆனால் அவரது லாரியில் இருந்தவை அனைத்தும் போலி ஆயுதங்கள். எனவே இவர் தனியாக செயல்பட்டாரா அல்லது துணைக்கு ஆட்கள் இருந்தனரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வாகனத்தையே ஆயுதமாக்கி அப்பாவி பொதுமக்கள் கூட்டத்தின் மீதேற்றி கொன்ற சம்பவம் ஐரோப்பாவில் நடப்பது அபூர்வமானது. ஆனால் இதுவரை நடந்தவற்றிலேயே மிக மோசமான கொடுந்துயரம் இது.
நவம்பர் மாதம் பாரிஸில் நடந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பிரான்ஸின் நெருக்கடி நிலையை அதிபர் ஒல்லாந்த் நீடித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்யுமாறு பிரெஞ்சு மக்கள் கோரப்பட்டுள்ளனர். மேலதிக வன்முறை நடக்கலாம் என்கிற அச்சம் காரணமாக நீஸிலுள்ள மக்கள் வெளியில் நடமாட வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது tamilbbc.com

கருத்துகள் இல்லை: