புதன், 13 ஜூலை, 2016

ஜெகத்ரட்ச்சகனின் 40 இடங்களில் வருமான வரி சோதனை

இன்று (ஜூலை 13ஆம் தேதி) அதிகாலை அதிரடி சோதனையை நிச்சயம் அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திடுதிப்பென ஆனால், திட்டமிடலோடு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்த இது, திமுக மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், மதுபான ஆலை, கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாரத் பல்கலைக்கழகம், தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதி, தி.நகர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர், அவர் வீரவன்னியர் பேரவை என்ற தனிக்கட்சியை நடத்தி வந்தார். 2004ஆம் ஆண்டு அந்தக் கட்சியை திமுக-வுடன் இணைத்துவிட்டார் ஜெகத்ரட்சகன். இலக்கியத் திறனும், மேடை ஆளுமையும் மிக்கவர். தனது கோர்வையான மொழிநடையின்மூலம் மேடைகளை வசீகரித்து திமுக-வுக்கு பலம் சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து ,அவர் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, வென்று மத்திய இணை அமைச்சராகவும் ஆனார். அப்போது அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது.
அதேபோல், நிலக்கரிச் சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அதிகப் பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் ஜெகத்ரட்சகன் பெயர் அடிபட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்றுவருகிறது.  minnambalam.com

கருத்துகள் இல்லை: