சனி, 16 ஜூலை, 2016

டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவன் சரவணன் கொலைசெய்யப்பட்டார்... தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை..

டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில், எம்.டி., படிப்பில் சேர்ந்த ஒரு வாரத்தில், தமிழக மாணவர் சரவணன், மர்மமான முறையில் இறந்தார். இது கொலையே என்ற சந்தேகம் கிளம்பி உள்ள நிலையில், சி.பி.ஐ., விசாரணை கோரி, தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சரவணன், 26; மதுரையில், எம்.பி.பி.எஸ்., முடித்த இவருக்கு, எம்.டி., பொது மருத்துவ படிப்பில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஜூலை 1ம் தேதி, படிப்பில் சேர்ந்தார். 9ம் தேதி இரவு, மர்மமான முறையில், தன் அறையில் இறந்து கிடந்தார். அவரது அறை திறந்து கிடந்தது; கையில், 'டிரிப்ஸ்' ஏற்றியதற்கான அடையாளமும் இருந்துள்ளது.    எம் டி படிப்புக்கு விலை சுமார் இரண்டு கோடிக்கும் மேலே சில தனியார் மருத்துவ கல்லூரிகளில். அந்த அளவுக்கு வால்யூ உள்ள படிப்பினை தனது அறிவின் ஆற்றலில் பெற்ற மாணவன்..தற்கொலை செய்துகொள்வது என்பது ஏற்பதற்கு முடியாதது. அறிவாற்றல் உள்ள அந்த மருத்துவரை உடனே இங்கே சிலர் கீழான முறையில் விமர்சிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். போதை பழக்கம் உள்ளவரா என்று கிளப்பி விடுவார்கள் இந்த சிந்தனை சிற்பிகள். நிச்சயம் இதிலே அரசியல் பின்னணியோடு கூடிய கொலை செயல் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. சிறந்த மாணவனை..நல்ல மருத்துவரை இழந்த பெற்றோர்களின் கோரிக்கையை கவனிக்க வேண்டும். படுபாதக செயல் இது..

பொதுவாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்.டி., இடம் கிடைப்பது மிகக்கடினம். தகுதி அடிப்படையில் இடம் பெற்ற அவரது, மர்ம மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
'சரவணனின் மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர், நேற்று, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில், ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுடாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
எம்.டி., படிப்பில் காலி இடங்களுக்கு, ஜூலை 25ம் தேதி, அடுத்தகட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. சரவணன் சேர்ந்த இடம் காலியானால், தங்களுக்கு கிடைக்கும் என்பதால், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
எய்ம்ஸ் கல்லுாரியில், எம்.டி., படிப்புக்கான இடம் பெறும் அளவுக்கு திறமைசாலியான அவர், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அல்லது அவரை யாரேனும் நிர்ப்பந்தம் செய்து, தற்கொலை செய்ய வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து, முறையான விசாரணை வேண்டும்.
டில்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழக முதல்வர் தலையிட்டு, சரவணனின் மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைநடத்த அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்ட கொலை தான்கலெக்டரிடம் தந்தை மனு

சரவணனின் தந்தை கணேசன், திருப்பூர் கலெக்டரை நேற்று சந்தித்து, தன் மகன் மரணம் குறித்த விசாரணைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என, மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:என் மகன் எல்.கே.ஜி., முதல், எம்.பி.பி.எஸ்., வரை எப்போதும், 'டாப்' தான். முதல் தேர்விலேயே, எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்.டி., படிப்பு கிடைத்தது; அந்த அளவிற்கு திறமைசாலி. அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. டில்லி போலீசார், வழக்கை முடிப்பதில் தான் ஆர்வம் காட்டினரே தவிர, உரிய விசாரணை நடத்த முன்வரவில்லை. எனவே, மகனின் உடலை வாங்கி வந்து விட்டோம். நடந்தது திட்டமிட்ட கொலை தான். டில்லி வரை போராடும் சக்தி எங்களுக்கு இல்லை. விசாரணைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். போலீஸ் கமிஷனரிடமும் மனு கொடுக்க உள்ளோம். தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: