சனி, 16 ஜூலை, 2016

ஆங்கிலத்தில் பேச முடியாததால் தீக்குளித்த பி.காம் மாணவி.. தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்

கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

தற்கொலைக்கான காரணமாக மாணவி குறிப்பிட்டுள்ள ஒற்றைக் காரணம், ' ஆங்கிலத்தில் பேச முடியாததால் அவமானமாக இருக்கிறது' என்பதுதான். " மாணவியின் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தாய்மொழியில் படிக்கும் பொறியாளர்கள் இருந்தால்தான், நமது மாநிலத்தை வளர்த்தெடுக்க முயற்சி செய்வார்கள். சொந்த மொழியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான், நமது மக்களின் நலன் குறித்து சிந்திப்பார்கள். இங்கு உருவாக்கப்படும் மாணவர்களின் நோக்கமெல்லாம் வெளிநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. வணிகமயமான கல்விச் சூழலில் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்" என வேதனையோடு பேச தொடங்கினார் திண்டிவனத்தில் தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வரும் பேராசிரியர்.பிரபா கல்விமணி.

அவர் நம்மிடம், " இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, ' உடல் மண்ணுக்கு  உயிர் தமிழுக்கு' எனச் சொல்லி உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அந்தத் தியாகத்தின் பலனாக ஆட்சிக்கு வந்தவர்கள், தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு எந்த அக்கறையையும் காட்டாததின்  விளைவைத்தான், மாணவியின் மரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க நமது கல்விமுறையில் ஏற்பட்ட குளறுபடி. வெளிநாடுகளில் பத்து லட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாநிலங்களில் உயர்கல்வி படிப்பு முழுவதையும் தங்கள் மொழியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறார்கள். பத்து கோடி மக்கள் பேசக் கூடிய தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை நோக்கி ஓட வைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: