வியாழன், 14 ஜூலை, 2016

23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் , தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி


குடிசை மாற்றுவாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது. மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். இதில் 7,204 அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் கட்டப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு, அவர்களது சொந்த வீட்டுமனைகளில் சென்னை, வேலூர், ஓசூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை மற்றும் 157 பேரூராட்சிகளில் 16,272 தனி வீடுகளும் கட்டப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுர அடி கட்டடப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டதாக அமையும். தனி வீடுகள் ஒவ்வொன்றும் 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும். தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.  மினம்பலம் .காம்

கருத்துகள் இல்லை: