திங்கள், 16 மே, 2016

ரூ. 570 கோடி பணம் தப்பியதில் ஜெயலலிதா, மோடி உறவு அம்பலம் : வைகோ குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடி அரசுடன், ஜெயலலிதா அரசியல் பேரம் பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளருமான வைகோ கூறியுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மே 13 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் பறக்கும் படையினர் மூன்று கண்டெய்னர்களைத் தடுத்து சோதனையிட்டதில், 570 கோடி ரூபாய் அதில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது.


இந்தக் கண்டெய்னர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று இன்னொவா கார்கள் மாயமாய் மறைந்துவிட்டன. இவ்வளவு பெருந்தொகையான பணம் எங்கிருந்து, எங்கு, யாரால், யாருக்காகக் கொண்டுசெல்லப்பட்டது? என்பது மர்மமாகவே இருந்தது. 18 மணி நேரம் கழித்து இந்தப் பணம் கோயம்புத்தூர் ஸ்டேட் வங்கியிலிருந்து விசாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஒரு கோயபல்ஸ் பொய் அவிழ்த்துவிடப்பட்டது.

இன்றைய முதலமைச்சரின் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பணத்தை இந்தக் கண்டெய்னர்களில் கொண்டுபோய் இருக்கிறார்கள் என்பதால், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன், மத்திய ரிசர்வ் போலிஸ் படையுடன் சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துப் பிரச்சார மேடைகளிலும் நான் முன் வைத்தேன்.

மூன்று நாட்கள் கழித்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுபற்றி விசாரித்ததாகவும், சிறுதாñர் பங்களாவுக்குள் அப்படி எதுவும் பணம் கொண்டுசெல்லப்பட வில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் கூறியதாகச் சொன்னார்.

இந்த உலக மகா மோசடியில், தமிழக காவல்துறை தலைமை ஆணையர் டிஜிபி அசோக்குமார் அவர்களுக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்பதும் அதிகார வட்டாரத்தில் நடமாடும் உண்மையாகும்.

காவல்துறை டிஜிபி அசோக்குமார் பணிக் காலம் முடிந்து, நீட்டிப்பில் இருக்கிறார். தேர்தல் பொறுப்புகளுக்கு டிஜிபி மகேந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது கைகளை அசோக்குமார் கட்டிப்போட்டுவிட்டார்.
;உளவுத்துறை தலைமை காவல்துறை அதிகாரி எந்த ரகசிய அறிக்கையையும் நேரடியாக முதலமைச்சருக்கு அனுப்பாமல், தனக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.">மிக முக்கியமான கேள்வி, திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப் படி 570 கோடி ரூபாய் (எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்ற உண்மை நமக்குத் தெரியாது) குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.
அதிமுக ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், திமுக ஊழல் பிரச்சினையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு இலட்சத்து எழுபத்து ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் திமுக கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

திமுகவினரும், அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவாக்குறிச்சி தொகுதி. அண்ணா திமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது

14 ஆம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய ராட்சச பணநாயகத்தால், உண்மையான ஜனநாயகம் வெல்லுமா? என்பது மே 19 ஆம் தேதிதான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: