சனி, 21 மே, 2016

வீரலட்சுமி ; எவன் நோட்டாவை கண்டுபிடிச்சான் ? அந்த 5 லட்சம் ஓட்டுக்களும் எங்களோடது... வீட்டுக்கு ஐந்தாயிரம் கொடுத்தார்கள்.....

இந்த 'நோட்டா' பட்டனை கண்டுபிடிச்சது யாருங்க?' -கொந்தளிக்கும் வீரலட்சுமி க்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம் 'அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி வாங்கிய ஓட்டுக்கள்தான்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர். சட்டசபைத் தேர்தலின்போது பல்லாவரம் தொகுதி களைகட்டி காணப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் வீரலட்சுமிக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருந்தன. '  அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். என்னைக் கண்காணிக்க தி.மு.க, அ.தி.மு.க ஆட்களை நியமித்திருக்கிறது, என்னைப் பார்த்து பெரிய கட்சிகள் ஓடிப் போகின்றன' என்றெல்லாம் கூறி தினம் தினம் தேர்தல் களத்தை அதிர வைத்தார் வீரலட்சுமி.

இந்நிலையில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர் 14,083 வாக்குகள் வாங்கியிருக்கிறார். அ.தி.மு.கவின் சி.ஆர்.சரஸ்வதி பெற்ற வாக்குகள்  90,726. வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் கருணாநிதி 1 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். ஏறக்குறைய அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறார் வீரலட்சுமி.

அவரிடம் பேசினோம். " நான்தான் வெற்றி வேட்பாளராக வந்திருக்க வேண்டியது. எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க. கடைசி நாளில் பணத்தை வாரிக் கொடுத்தாங்க. நீங்களே சொல்லுங்கண்ணே...வீட்டுக்கு 5 ஆயிரம், எட்டாயிரம்னு கொடுத்தால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க? எங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும் அளவுக்கு தீவிரமா பிரசாரம் செஞ்சோம். என்னைப் பார்த்த மக்களும், 'அஞ்சு வருஷமா ஆளுங்கட்சி எங்களுக்கு ஒண்ணும் பண்ணலை. நீ வந்துதான் தீர்த்துக் கொடுக்கணும்னு' சொன்னாங்க. கடைசி நாள்ல பணத்தைக் கொடுத்து மக்களை வாங்கிட்டாங்க" என்றவரிடம்,

தேர்தல் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்றோம்.

" எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. இது நான் எதிர்பார்த்ததுதான். இவ்வளவு பணம் கொடுத்தா யார்தான் நமக்கு ஓட்டுப் போட வருவாங்க. தவிர, இன்னொன்னும் சொல்லணும். வர்ற தேர்தல்ல நோட்டா பட்டனை நீக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். அந்த அஞ்சு லட்சம் ஓட்டும் எங்களுக்கு வர வேண்டியது. தேவையில்லாம நோட்டா பட்டனை வச்சு கெடுத்துட்டாங்க நான் பிரசாரம் செய்யப்போனா மட்டும் அதிகாரிகள் சோதனை பண்றாங்க. அ.தி.மு.க, தி.மு.கவை கண்டுக்கலை. இரண்டு பேருக்கும் சாதகமாகத்தான் தேர்தல் ஆணையம் இருந்துச்சு. எங்க அய்யா வைகோ எவ்வளவோ புகார் பண்ணினார். எதையாவது கண்டுக்கிட்டாங்களா? இனி சும்மா இருக்க மாட்டோம். அடுத்து வர்ற எம்.பி தேர்தல்லயும் பம்பரம் சின்னத்துல போட்டியிடப் போறேன். அதுக்காக, முன்கூட்டியே எப்படியெல்லாம் பிரசாரம் செய்யலாம்னு முடிவெடுத்து வச்சிருக்கேன்" என தடதடத்தார் வீரலட்சுமி.

ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை: