வெள்ளி, 20 மே, 2016

கொழும்புவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்...வரலாறு காணாத வெள்ளம்.

 படகில் வெளியேறும் மக்கள். | கொழும்புவில் வரலாறு காணாத மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளம். படகில் வெளியேறும் மக்கள்.
கொழும்புவில் வரலாறு காணாத மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளம். படகில் வெளியேறும் மக்கள். . இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டு கொழும்புவிலிருந்து சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் கடந்த வார இறுதி முதல் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக நகரமெங்கும் வெள்ள நீர் சூழ்ந்ததோடு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 50 அடிக்கும் கீழ் மக்கள் புதையுண்டனர். கடும் அவதிக்குள்ளான மக்கள் தலைநகர் கொழும்புவிலிருந்து கையில் கிடைத்த பொருட்களுடன் மரக்கலம், படகு என்று எது கிடைத்தாலும் வெளியேறி வருகின்றனர்.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற அதிகாரிகள் வலியுறுத்தினர். ஏனெனில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப்பகுதியில் மாட்டிக் கொண்ட திலுகா இஷானி என்பவர் தான், கணவர், இரண்டு குழந்தைகளுடன் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் அகப்பட்டுக் கொண்டார். அவர்களை கடற்படைப் படகு தங்களை அருகில் இருக்கும் பள்ளிக்கு மீட்டு வந்தனர்.

இதுகுறித்து இஷானி கூறியபோது “நாங்கள் வெள்ள நீர் அதிகரிக்க அதிகரிக்க உயரமான இடம் நோக்கிச் சென்றோம், ஆனால் வெள்ள நீர் மேலும் உயர எங்களுக்கு போக இடம் இல்லை. கடற்படைதான் எங்களைக் காப்பாற்றியது, ஆனால் எங்கள் உடமைகளை இழந்தோம். வெள்ள நீர் எங்கள் வீட்டு கூரையைத் தொட்டுச் சென்றது'' என்றார்.

பள்ளியில் சுமார் 30 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் இவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கி வருகிறது.

இந்த வெள்ளத்திற்கு சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக ஆதரவுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி 1 மில்லியன் ரூபாய்கள் (7,000 டாலர்கள்) உதவித்தொகை அனுப்பியுள்ளது.

வெள்ளத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று இலங்கை வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இந்தியா 2 கடற்படைப் படகுகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளது

அயல்நாட்டிலிருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்புவோருக்கு முழு வரிவிலக்கு அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் கொழும்பு காலியாக உள்ளது. பாதி கொழும்பு மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்புவின் மக்கள் தொகை சுமார் 6,50,000 ஆகும்.

கொழும்புவின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்தது. கேலானி நதி பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.

வெள்ளிக்கிழமையான இன்றும் கொழும்புவில் பரவலாக கனமழை பெய்துள்ளது, வடக்குப் பகுதியில் கொஞ்சம் அதிகனமழை கொட்டியது இதனால் கேலானி நதி மேலும் வெள்ள நீர் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடும் நிலச்சரிவுகள் ஆங்காங்கே ஏற்பட இலங்கை மழை பலி 64 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவுக்கடியில் இன்னமும் உடல்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று மோசமாக பாதிக்கப்பட்ட கேகல்ல மாவட்டத்தில் 37 குழந்தைகள் உட்பட 144 பேர் கதி என்னவென்று தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

50 அடி சகதியில் புதையுண்டு போன 2 கிராமங்களிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் ஏறக்குறைய இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம்.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் இலங்கையில் மழை வரலாறு காணாத அளவுக்குக் கொட்டியது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: