செவ்வாய், 29 மார்ச், 2016

தென்மாவட்டங்களில் திமுக அதிமுக இடையேதான் போட்டி......

இதயம் இனித்தது, கண்கள் பனித்தன - 2' ரிலீசானவுடன், 'ஓ.எம்.ஜி.,' எனப்படும், 'ஒன் மேன் குரூப்' ரசிகர் மன்றம், தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறி, படம் திரையிடப்படுவதை நிறுத்தக் கோரினர். அதற்காக, சில ஜால்ரா மாவட்ட செயலர்கள் மூலம், ராஜினாமா மிரட்டலை பட தயாரிப்பாளருக்கு விடுத்தனர். தயாரிப்பாளர் 'தம்' உள்ள பார்ட்டி என்பதால், அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டார் என்பன பற்றிய செய்திகளை, ஏற்கனவே, நமது நாளிதழில் வெளியிட்டு இருந்தோம்.
அதை தொடர்ந்து, அந்த பட நாயகனுக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக, தென் மாவட்டங்களில் செய்தி வலம் வருகிறது. அந்த காலத்தில், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடானவர்களை வனவாசம் அனுப்பும் பழக்கம் இருந்ததாம். அப்படித்தான் அழகிரியும், இந்த தேர்தல் சமயத்தில் அமெரிக்கா வாசம் செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக, அழகிரியின் மனைவி காந்திமதி, முன்னரே அமெரிக்காவுக்கு சென்று, அவருடைய வருகைக்காக காத்திருந்தார்.ஆனால், கடந்த 25ம் தேதி, அவர் திடீரென சென்னை திரும்பி விட்டார்.
அதற்கு முந்தைய நாள் அழகிரிக்கும், கருணாநிதிக்கும் நடந்த சந்திப்பில், பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயங்கள், ஒரே நாளில் அமெரிக்க வாசத்தை கைவிடும் அளவிற்கு நம்பிக்கையை, அழகிரி குடும்பத்திற்கு தந்துள்ளதாக, அவருடைய ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
அழகிரியும், சென்னையில் காட்சிப் பொருளாக இருந்து, பத்திரிகைகளிடம் அகப்பட்டுக்

கொள்ளாமல், சாதுரியமாக புதுச்சேரி, மதுரை என இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். கருணாநிதி உடனான சந்திப்பை, அவர், ஸ்டாலினுக்கு எதிரான சொற்கணைகளை தொடுக்க பயன்படுத்தாமல் இருப்பது, தனக்கு காத்திருக்கும் தேர்தல் பொறுப்பின் பால் தான் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையேதான் போட்டி. காங்கிரசுக்கு சில தொகுதிகளிலும், தே.மு.தி.க., - ம.தி.மு.க.,வுக்கு ஒருசில தொகுதிகளிலும் தான் செல்வாக்கே. வட மாவட்டங்களை போல, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் மல்லுக்கு வரப்போவதில்லை.
மேலும், தென் மாவட்டங்களில், அ.தி.மு.க., சிங்கங்கள் சில சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைக்கு பயந்து, கூண்டுக்குள் ஒடுங்கி இருப்பதால், அங்குள்ள ஏறத்தாழ 30 தொகுதிகளில், அழகிரியின் தேர்தல்பணி மூலம் கணிசமான ஓட்டுகளை பெறலாம் என, கருணாநிதி கணக்குப் போடுகிறார். இதனால், அங்கு அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னோடு, தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்ல போகிறார் என்ற தகவல் தென் மாவட்ட, தி.மு.க., வட்டாரங்களில் வலம்வருகிறது. அப்பாவுடன் பயணிக்க, அழகிரியும் ஆசையோடு காத்திருப்பதாக, மதுரைக்காரர் ஒருவர் சொல்கிறார். இதன்மூலம், ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க, கருணாநிதி திட்டமிட்டு இருக்கிறார். அவை:தென் மாவட்ட தி.மு.க.,வினரை உற்சாகப்படுத்துவது ஒட்டுமொத்த பயணத்திற்கும், தனக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் அழகிரியை வைத்துக் கொண்டு, அவருடைய ஆதரவு வட்டாரத்தை, தேர்தலுக்கு முழு வேகத்தில் களமிறங்க செய்வது. ஸ்டாலினையும், அவரை வழிநடத்தும் 'ஒன் மேன் குரூப்'பை மட்டுமே, கட்சி குறித்த தகவல்களுக்கு நம்பி இருக்காமல், புதிய தகவல் மையத்தை உருவாக்குவது.
தற்போதைய தகவல்:
அழகிரியுடைய மகனும் மருமகளும், கருணா நிதியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். அமாவாசைக்கு பின், அதாவது, ஏப்ரல், 7ம் தேதிக்கு பின், எந்த நேரத்திலும் இந்த சந்திப்பு நடக்கலாம்.

- நமது நிருபர் --  தினமலர்.com

கருத்துகள் இல்லை: