செவ்வாய், 29 மார்ச், 2016

பிரேமலதா : ஆண்டுதோறும் 25,000 விவசாயிகள் உலக நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்....அடே உலக மகா சாதனைடா...

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் ஏற்படுத்தப்படும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
 தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
 விவசாயக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்க முடியவில்லை. ஆனால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக விற்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் வெளிநாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் மழை நீரைச் சேமிக்க எதுவும் செய்யவில்லை. 

 எனவே, விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக விஜயகாந்த் பல திட்டங்களை வடிவமைத்து தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார். நம்மாழ்வார் விவசாயத் திட்டத்தில் மானிய விலையில் நாற்றுகள், இயற்கை உரம், தரமான விதை ஆகியவை வழங்கப்படும்.
 விவசாயத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் 25,000 விவசாயிகள் உலக நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதன் மூலம் உணவு உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கி பசுமைப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
 இதேபோல, பால் உற்பத்தியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு திட்டங்களை விஜயகாந்த் வடிவமைத்துள்ளார். பசுமைப் புரட்சியையும், வெண்மைப் புரட்சியையும் விஜயகாந்த் உருவாக்கப் போகிறார்.
 இதுவரை யாரும் அறிவிக்காத கீழ வெண்மணி ஓய்வூதியத் திட்டத்தில் 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 2,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதுபோல, விவசாயிகள், மீனவர்கள் நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்காக விஜயகாந்த் ஏராளமான திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார். எனவே, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
 கூட்டத்தில் தேமுதிக மாவட்டத் தலைவர்கள் த.லோ. பரமசிவம் (வடக்கு), வி. ஜயபிரகாஷ் (தெற்கு), மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் ச. சொக்கா ரவி, மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா. திருஞானம் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தினமணி.com

கருத்துகள் இல்லை: