வியாழன், 31 மார்ச், 2016

K.K.S.S.R.ராமச்சந்திரன் ஜெயலலிதாவை சி எம் ஆக்கியதற்கு உரிய பலனை போதும் போதும் என்ற அளவு.....

விகடன்.com :அதிமுகவின் நிறுவனரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகியம்மாள் அணி என்று அதிமுக இரண்டாக உடைந்து,  அரசியல் களம் அதகளப்பட்டுக்கொண்டிருந்தபோது,; ஜானகியம்மாளுக்கு ஆதரவாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட அவர் தலைமையில் பல தலைவர்கள் கச்சைகட்டிக்கொண்டிருந்தபோது,  ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து அவரை அரசியலில் காலுான்றச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன்.   31 அதிமுக MLA களை இவர் வடநாட்டுக்கு விமானத்தில் கூட்டி சென்று ஹோட்டல்களில் அடைத்து வைத்து ஜெயலலிதாவின் அரசியல் பலத்தை பாதுகாத்து ஜானகி அணியை கவிழ்ப்பதற்கு பெரும் உதவி  செய்தார். மாட்டுக்கார வேலன் என்ற பட்டத்தை அதன் மூலம் பெற்றுகொண்டார். ஜெயலலிதாவை அரசியல் அரங்கிற்கு தனது சுயநலம் கருதி கொண்டுவந்ததற்கு இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் .....ஜெயலலிதாவிடம் நன்றி என்ற வார்த்தையே கிடையாது அதனால்தானோ என்னவோ அவரால் பயன்பெற்ற எல்லோருமே அவரின் காலை வாரப் போகிரர்கள்...வரலாறு அதையும் காணத்தான் போகிறது  


அதிலும் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரைவிட ஒருபடிமேலாக தன் அதிகார பலத்தால் ஜெயலலிதாவுக்காக பெரும் கஷ்டங்களை சந்தித்து அவரை அரசியலில்‘‘ லைம் லைட்டுக்கு ’’ கொண்டு வந்தவர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர் ஆகிய இருவர்.  இவையெல்லாம் ஜெயலலிதாவே நினைத்துப்பார்க்க விரும்பாத விஷயங்கள் மற்றும் அதிமுகவின் சீனியர்கள் மட்டுமே அறிந்த சேதி.

காலச்சூழலில் ஜெயலலிதாவிடம் முரண்பட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திமுகவிலும், திருநாவுக்கரசர் தனிக்கட்சி, பாஜக தற்போது காங்கிரஸ் என ஐக்கியமானது காலத்தின் கோலம்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக,  சட்டசபையில் ஜெயலலிதாவின் பலத்தை காட்ட அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை குதிரைபேரம் பேசி விருதுநகரில் தன் ஸ்பின்னிங் மில்லில் தங்க வைத்து புதிய அரசியல் ஃபார்முலாவை அரங்கேற்றியவர் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரோடு நெருக்கமாக இருந்த அவரின் நிலைதான் இப்போது பெரும் பரிதாபத்திற்குரியது. திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., இதே சாத்தூர் தொகுதியில் ( இப்போது அது அருப்புக்கோட்டை தொகுதி)  4 முறைக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்,  அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு,  தொகுதிக்கு புதுமுகமான அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வனிடம் 11 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தற்போது 2016-ம் சட்டசபை தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தயாராகும் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தேர்தல் செலவுக்காக தனது சொத்துக்களை சத்தம் இல்லாமல் விற்று பணம் திரட்டி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா...

'என்ன பாஸ் நீங்க... சாதாரண கவுன்சிலர்கிட்டயே கோடிகளில் புரளும்போது அமைச்சர், எம்.எல்.ஏ., என்று பல முறை பதவி வகித்த அவரிடம் இல்லாத பணமா?' என்று நீங்கள் கேட்கலாம்.  ஆனால் அதுதான் உண்மை. பாரம்பர்யமாக பஞ்சு வியாபாரத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  பணம் வசதி படைத்தவர்தான். ஆனால் தாராளமாக பணம் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர். கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நாராயணன், ரமேஷ் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது.

கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக பதவி வகித்த அவர், தனது மகன்கள் மற்றும் மகளுக்கு அவர்களது பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தார். அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்கு கதிர் சில்க்ஸ் என்ற பெயரில் புதிதாக பெரிய துணிக்கடையும், புது ஸ்பின்னிங் மில்லும் ஆரம்பித்து கொடுத்தார்.

ஆட்சி மாறினால் ஏதாவது பிரச்னை வருமோ என்று நினைத்து தனக்கென்று தனியாக பணம் மற்றும் சொத்துக்களை வைத்துக்கொள்ளவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை செலவழித்தார். இந்நிலையில் திமுக தோற்று அதிமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலில் தோல்வி அடைந்த அவரால் வழக்கம் போல் தாராளமாக செலவு செய்ய முடியவில்லை. தன் மகன்கள் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைமை.

இந்நிலையில் 2016 சட்டசபை தேர்தலில்,  அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,  தேர்தலி செலவுக்காக பணம் திரட்டுவது தொடர்பாக குடும்பத்தினரிடம் கடந்த வாரத்தில் விவாதித்திருக்கிறார். “ஏற்கனவே கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்ததில் பணம் நெருக்கடி. பட்ஜெட் போட்டு செலவு செய்யாமல் இப்படி தாராளமாக கோடிக்கணக்கில் செலவு செய்தால் உங்கள் காலத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் நடுத்தெருவுக்குதான் வரவேண்டும் ”என்று  அப்போது அவரது மகன்கள் கை விரித்ததாக சொல்லப்படுகிறது.
பெற்ற பிள்ளைகளே இப்படி சொல்லி விட்டார்களே என்று மனம் நொந்து போனார் அண்ணாச்சி. பிறகு விஷயம் அறிந்த குடும்ப நண்பர்கள்,  கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களது பெயரில் இருக்கும் சில சொத்துக்களை விற்பதற்கு அவர்கள் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்காக தொடங்கப்பட்ட கதிர் சில்க்ஸ் மற்றும் விருதுநகர் தந்தி மரத்தெருவில் உள்ள 5 பெரிய வீடுகளில் 3 வீடுகள் என்று சில சொத்துக்களை விற்றிருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
'கஷ்டப்பட்டு' சம்பாதித்த சொத்துக்களை இப்படி அரசியலுக்காக விற்கிறாரே என்று இதனால் கொஞ்ச காலமாக அவரது குடும்பத்தில் புகைச்சல்.
இதில் அண்ணாச்சிக்கு ஆறுதலான விசயம்,  சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் அவரது மகள் தனது ஒரு பெரிய சொத்தை விற்று 3 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு தருவதாக உறுதியளித்துள்ளாராம். மகளின் ஆறுதல் வார்த்தையால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கொஞ்சம் மனம் தேறியிருக்கிறார்.

இப்போதெல்லாம் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று சொல்லி கலங்குகிறாராம். அதோடு ‘‘ எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு சொல்லி வருத்தப்படுகிறாராம்.

கவலைப்படாதீங்க அண்ணாச்சி மீண்டும் நீங்க அமைச்சரானீங்கன்னா அத்தனை பேரும் திரும்ப வருவாங்க...அதானே அரசியல்!

- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

கருத்துகள் இல்லை: