புதன், 6 ஜனவரி, 2016

பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! vinavu.com

கல்வியை பாதுகாப்போம்புதிய கல்விக் கொள்கை – 2015 :
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! “எண்ணென்ப ஏனை யெழுத்தன்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.
ஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக்கொள்கை-2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது.
வரும் டிசம்பர்-15- இல் மோடி அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ( General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது. ஏற்கனவே, 90-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத் தையும் தொழில்துறையையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது; கோடிக்கணக்கான தொழிலாளிகள் உதிரிகளாகிப் போனது; சிறு-குறுந்தொழில்கள் பேரளவில் அழிந்துபோனது;
மென்பொருள் பணியாளர்கள் கூட நடுத்தெருவில் நிற்பது என “காட்”டின் காட்டாட்சி வாரிச்சுருட்டிய பேரழிவு வகை – தொகையற்றது.
தற்பொழுது மோடி அரசு கையெழுத்திடப்போகும் ஒப்பந்தம், சேவைத்துறையைச் சூறையாட அனுமதிக்கப் போகிறது. இதன்படி நாட்டின் அடிப்படை ஆதாரங்களான தண்ணீர், உணவு, கல்வி, கனிமவளம், இயற்கைச் சூழல் போன்றவைகள் நாட்டின் உடைமை மற்றும் உரிமை என்ற நிலையில் இருந்து விற்றுத் தீர்க்கும் நுகர்வுப் பண்டங்களாக அறிவிக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதிய கல்விக் கொள்கை – 2015, இந்தியக் கல்விக் கட்டமைப்பை நிர்மூலமாக்கி, மனிதவளச் சுரண்டலுக்கு உலகளாவிய அளவில் சட்டப்பூர்வ வடிவம் கொடுக்கவிருக்கிறது. கூடவே, மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவ கும்பல், தன் பங்கிற்கு புதிய கல்விக்கொள்கையில் கலாச்சார பாசிசத்தையும், பார்ப்பனிய மேலாண்மையையும் புகுத்த எத்தனித்திருக்கிறது.
கல்வி கடைச்சரக்கல்ல
கல்வியை முழுமையாகக் கடைச்சரக்காக மாற்றும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாதெனக் கோரி பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் (கோப்புப் படம்)
குறிப்பாக, இடைநிலை பள்ளிக் கல்வியில் (Secondary School Education) இருந்தே தொழிற்கல்வி புகுத்தப்பட வேண்டுமென அறிவிக்கிறது புதியக் கல்விக் கொள்கை. இதுவரை நம்நாட்டில் பின்தங்கிய பொருளாதார மற்றும் பார்ப்பனியத்தின் கொடூர சாதிய அடக்குமுறை பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி பொதுக்கல்வியாக வழங்கப்படும் வாய்ப்பு இருந்து வருகிறது. இத்தகைய வாய்ப்பு நீண்ட நெடுங்காலமாக பார்ப்பனியத்திற்கு எதிராக இடையறாது போராடிப் பெற்ற உரிமையாகும். ஆனால், புதிய கல்விக் கொள்கையோ மாணவர்களின் வறுமையைச் சுரண்டி, எட்டாம் வகுப்பிலேயே தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியைப் புகுத்துவதன் மூலம் உழைப்புச்சந்தைக்கேற்ற கூலிகளை ஒருபக்கம் உறுதிப்படுத்திக்கொண்டே, மறுபக்கம் பார்ப்பனியத்தின் வருணாசிரம தர்மத்தில் மக்களை மேலும் சிக்க வைக்கிறது. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்தின் மனிதவளச் சுரண்டலுக்கு உவப்பானதாக இருக்கிறது.
சான்றாக, மேக் – இன் இந்தியா திட்டத்தின் கீழ் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாராளமாக கூலிகளை அமர்த்தும் வேலையைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்படும் தொழிற்கல்வி செய்து கொடுக்கும். இதை முன்னிட்டே, குழந்தைகள் தங்கள் பாரம்பரியத் தொழிலைச் செய்ய அனுமதிக்கும் பொருட்டு குழந்தைத் தொழிலாளர் சட்டம் திருத்தப்படும் மசோதாவை இங்கு நாம் அவசியம் பொருத்திப்பார்க்க வேண்டும்.
தொழிற்கல்வி திட்டமென்று நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பான பள்ளிக் கல்வியையே நிர்மூலமாக்கிவிட்டால் இந்திய உயர் கல்வியின் நிலை என்னவாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை, உயர் கல்வி குறித்து முன் வைக்கும் 33 வகையான கருத்துகள் பேரழிவுக்கு கட்டியம் கூறுபவை.
கல்வியைப் பண்டமாகவும் மாணவர்களை நுகர்வோராகவும் கருதுகிற புதிய கல்விக் கொள்கை, கல்விக் கட்டமைப்பின் அங்கத்தினராக கார்ப்பரேட்டுகளையும், பன்னாட்டு கம்பெனிகளையும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையும் தனியார் முதலாளிகளையும் வரையறுக்கிறது. கல்வியை ‘வினியோகம்’ செய்கிற செயல் எந்திரமாக கார்ப்பரேட்டுகளின் சேவையையும் (Corporate social responsibility) தனியார்-பொது பங்களிப்பையும் (Public & Private Partnership) முன்வைக்கிறது.
இதன்படி, இனி நாட்டில் உள்ள அனைத்து கல்லுரிகளும் பல்கலைக்கழகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, நிதி தன்னாட்சி (Financial autonomous) நிறுவனங்களாக அறிவிக்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படும். நிதி தன்னாட்சியானது கல்லூரிகளே மாணவர்களிடமிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் வசூலித்துக்கொள்ள வழிவகை செகிறது. மேலும், கல்வியை விநியோகம் செய்வதில் தடை ஏதும் வராமல் இருக்க! மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கற்பித்தல் மற்றும் பாடத்திட்டங்களைக் கைப்பற்றி மையப்படுத்துகிறது.
கல்விக்குள் வாணிப சுதந்திரத்தை உறுதி செய்ய பாடத்திட்டம் அனைத்தும், CBCS (Choice based Credit System) ஆக மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி கல்விச் சந்தைக்குள் நுழைகிற நுகர்வோர், பரிந்துரைக்கப்பட்ட பாடங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பது என்பது தங்கள் கையிருப்பிற்கேற்ப நுகர முடியும் என்பதாக அமையவிருக்கிறது. இதற்காகவே புதிய கல்விக் கொள்கை, கல்வியை நுகரும் நுகர்வோர் கல்வி நிறுவனங்களுக்குள் எந்த ஆண்டிலிருந்தும் நுழையவோ நிறுத்திக் கொள்ளவோ முடியும் என்கிறது. இந்த வகையில் CBCS பாடத்திட்டம் கல்வியை அளக்கின்ற நிறுத்தல், முகத்தல், அளத்தல் அளவையாக இருக்கும்!
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளர் என்ன பொருள் வாங்குகிறார் என்பதை ஆராய்ச்சி செய்கிற பொழுது, ஒரு கம்பெனி தன் வியாபாரத்தின் மீதான இலாபத்தைத் திருப்பிக்கொள்ள முடியும். இதைத்தான் பிக் டேட்டா – Big Data என்கிறார்கள். இன்றைக்கு Big Data என்பது வென்ச்சர் மூலதன (Venture Capital) நிறுவனங்களின் ஆதாரமாக இருக்கிறது. இந்தியக் கல்வி சந்தையில் பிக்டேட்டா – Big Data விற்கான வாய்ப்புகளை ஏகாதிபத்தியங்கள் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும்படி, புதிய கல்விக் கொள்கையானது மாணவர்-ஆசிரியர்-கல்வி நிறுவனம் என்ற கட்டமைப்பைத் தகர்த்து, அதற்குப் பதிலாக “மூக்ஸ்” (Massive Online Open Course) எனப்படும் மாபெரும் திறந்தவெளி இணைய பாடத்திட்டங்களை முன்வைக்கிறது.
அடிப்படைக் கல்வி கட்டமைப்புகளின் மீது பாரமுகமாக இருக்கிற அரசு (சான்றாக இரண்டு இலட்சத்திற்கும் மேலான அரசுப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன), மூக்ஸ் போன்ற இணைய திட்டங்களின் மீது முனைப்புக்காட்டுவது என்பது கல்வியில் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் அரசின் ஆர்வம் காரணமாக அல்ல. மாறாக, பன்னாட்டு கம்பெனிகளின் இலாபவெறிக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதும் ஏகாதிபத்தியங்களின் பிடியில் நாட்டு அமைப்புகளை சரணடையச் செய்கிற வேலையேயாகும்.

கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோராகவும் மாற்றும் காட்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து அனைத்திந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பேரணி.
இதற்காகவே மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இருக்கிறது என்பதும், இதை நேரடியாக இயக்குபவர்கள் Ed&Ex, Coursera போன்ற பன்னாட்டு கம்பெனிகள் என்பதும், பிக்கி போன்ற முதலாளித்துவ கூட்டமைப்புகள் மூக்ஸை மூலதனமாகப் பார்ப்பதும், இந்திய கல்வி அமைப்பு எத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகவிருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட வல்லது.
இதுமட்டுமல்ல, DTH (நேரடி அலை வரிசை) வாயிலாக பெண்களுக்கான கல்வி அவர்கள் வீட்டுக்கே வரும் என்றும் இது பாதுகாப்பானது என்றும் சொல்வதன் மூலம், புதியக் கல்விக் கொள்கையானது, தொழில்நுட்பத்தின் உதவியோடு பெண்களை ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பார்ப்பனிய- நிலவுடமைச் சமூகத்தின் கோரப்பிடியில் தள்ளுகிறது.
இணைய பாடத் திட்டங்கள் என்கிற பொழுது புதிய கல்விக்கொள்கை ஆசிரியருக்கான பணிப் பாதுகாப்பை ஒழிக்கிறது. மாணவர்கள்-நுகர்வோர் என்றாகிவிட்ட பிறகு, இனி ஆசான்களின் பணி கார்ப்பரேட் கம்பெனியில் ஹெச்.ஆரைப் போன்று அடிமைகளிடம் வேலை வாங்கும் கங்காணிகளாக இருக்க வேண்டியதுதான். இந்த வகையில் புதிய கல்விக் கொள்கை ஆசிரியர்களுக்கான நிரந்தரப்பணியை ஒழித்து, ‘புரோபேசனரி” கட்டத்தை ஐந்து வருடங்களாகவும் பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் முன்வைக்கிறது. டிஜிட்டல் இந்தியா, மூக்ஸ் போன்ற திட்டங்கள் இதை துரிதப்படுத்துகிற அதே வேளையில், புதிய கல்விக் கொள்கை ‘இந்தியாவில் கற்பித்தல்’ (Teach In India) மூலமாக வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களையும் பல்கலைக்கழகங்களையும் இறக்குமதி செய்வதற்கு ‘கியான் திட்டத்தை (Global Initiative of Academic Network-& கல்விசார் வலைப்பின்னல்களுக்கான உலகளாவிய முன்முயற்சி)’ செயல்படுத்த முனைகிறது. புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை வருங்காலத்தில் ஆசிரியர்கள் இந்தியாவில் அருகிவரும் உயிரினமாக இருப்பார்கள் என்பதே இதன் சாரம்!
இந்திய உயர்கல்வியானது தற்பொழுது வரை நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சாதி மற்றும் பொருளாதார ரீதியாக மறுக்கப்பட்ட, மூடுண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை இதை மேலும் சுருக்கி, உயர் கல்வியிலிருந்து மக்களை கீழ்கண்ட வழிகள் மூலம் அணுகமுடியாதபடி தடுத்து வைக்கிறது.
  • கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் இரத்து செய்யப்படுவதுடன், இடஒதுக்கீடும் இரத்து செய்யப்படுகிறது. 1% கல்வியில் சிறந்தவர்கள் மற்றும் 1% பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை என அறிவிக்கிறது. இத்தகைய உதவித் தொகைகளும் கார்ப்பேரட் பொறுப்புணர்வின் (Corporate Social responsiblity) கீழ் வரவைக்கப்படுவதன் மூலம் பெரு முதலாளிகளிடம் கையேந்த வைக்கிறது! நாட்டின் எரிசக்தி வளங்களைக் கையகப்படுத்தியிருக்கும் அம்பானி போன்ற முதலாளிகள் தாங்கள் கொள்ளையடித்த இலாபத்தில் CSR என்பதன் பேரில் அற்பத் தொகையைக் கூட தனது மருத்துவமனையிலேயே முதலீடு செய்வதைப் பொருத்திப் பார்த்தால், CSR சுட்டிக்காட்டும் இந்த அரசு எப்படி ஓர் தேர்ந்தெடுத்த தரகனாகச் செயல்படுகிறது என்பது எளிதில் தெரியும்.
  • ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தனியாரிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறுகிறது புதிய கல்விக் கொள்கை. இதற்கு வசதியாக ஆட்சிமன்றக் குழுவில் கார்ப்பேரட்டுகளின் பங்களிப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. ஏற்கனவே எல்லா ஐ.ஐ.டி.க்களும் அப்படித்தான் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது!
  • அனைத்து சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு இனி தனியாரிடமிருந்து பெறப்பட வேண்டுமென்கிற புதிய கல்விக்கொள்கையின் சரத்து மோடி அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதுவரை ஆராய்ச்சித் திட்டங்களில் உருவாக்கப்பட்ட “கிளினிக்கல் டிரையல்ஸ்” தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் அணுக முடியாத வண்ணம் அறிவுசார் சொத்துரிமை (Intellectual property rights) விதிகளின்படி அமல்படுத்தப்பட இருக்கிறது. உலக மேல்நிலை வல்லரசான அமெரிக்காவிலேயே மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் காரணமாக, செனட்டில் இதற்காக தரகு வேலை பார்த்த Elsevier என்ற பன்னாட்டு அறிவியல் பதிப்பகம் பின்வாங்க நேர்ந்தது நினைவிருக்கலாம். ஆனால், இங்கோ வளர்ச்சி, விகாஸ் எனும் பெயரில் அப்பட்டமான வேசைத்தனமே IPRIப் பொறுத்தவரை மோடி அரசால் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இவ்விதம் புதியக் கல்விக் கொள்கை, ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை மறுகாலனியாக்குவதைத் துரிதப்படுத்துவது மட்டுமல்ல, மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவ கும்பலுக்கும் கலாச்சார பாசிசத்தையும் பார்ப்பன மேலாண்மையையும் அமல்படுத்துவதற்கு எந்திரமாக அமைந்திருக்கிறது.
கலாச்சார ஒருங்கிணைப்பு என்பதன் பெயரில் இந்துத்துவக் காலிகள் புதிய கல்விக் கொள்கையில் செத்த மொழிகளை மீட்டெடுக்கும் ஆய்வு நிறுவனங்களை அமைப்பது, பார்ப்பனியக் கலாச்சாரத்தை இந்தியக் கலாச்சாரமாக நிலைநிறுத்தும் இந்தியவியல் (Indology) ஆய்வுகளை மேற்கொள்வது உட்பட பல பரிந்துரைகள் புதியக் கல்விக் கொள்கையில் நிறைந்திருக்கின்றன.
சகல திசைகளிலும் இந்தியக் கல்விக் கட்டமைப்பைப் பித்தெறியும் புதியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிற பொழுது, இதை எதிர்க்கிற உரிமையை நாடாளுமன்றத்திடம் இருந்தும் இந்திய நீதி சட்ட இறையாண்மையிலிருந்தும் WTO&GATS முற்றிலும் பறித்து விடுகிறது.
காட்ஸ் ஒப்பந்தத்தின்படி, கல்விப்புலத்தில் உருவாகும் பிரச்சினைகள் அதற்கென அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை தீர்ப்பாயங்களிலே மட்டுமே தீர்த்துக்கொள்ள முடியும். இதில் மாணவர்கள், தொழிலாளிகள், சமூக ஜனநாயகக் குரல்கள் முடிவெடுக்கும் அங்கத்தினராக இருக்க முடியாது!
இப்படிப்பட்ட ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் என்ற வீரிய ‘ஒட்டுரக’த்தின் அப்பட்டமான வெளிப்பாடாகத்தான் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.
ஆக, ஏகாதிபத்திய நலனையும், பார்ப்பனிய மேலாதிக்க நலனையும் பிரதிபலிக்கும் ‘புதிய கல்விக் கொள்கையை‘ வீழ்த்தி, சுயசார்புள்ள, உண்மை தேசப்பற்றாளர்களை உருவாக்கும் மக்களின் நலனுக்கான புதிய கல்விக் கொள்கையைப் படைக்க வேண்டுமானால், WTO&GATS ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டியது அவசியம்.
– பரிதி

கருத்துகள் இல்லை: