வெள்ளி, 8 ஜனவரி, 2016

அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்...நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

othisaivu.wordpress.com :நான் குர்தி । अहम् कुरदि । मैं कुर्दि हुँ। Je suis un Kurde । Ben Kürtüm । Ich Bin Kurde । I am Kurd । இஸ்லாமிய கழுத்தறுப்பு-கற்பழிப்பு முதல்வாதக் கொலையாளர்களுக்கும், துருக்கிய அநியாய கொன்றொழித்தல்களுக்கும் எதிராக, இராக்-இராக்​-ஸிரிய அன்றாட அட்டூழியங்களுக்கு எதிராக – கர்ட் மக்கள்திரள் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேலாகப் போராடுவது வியர்த்தமாகக்கூடாது… | இது ஒரு #ஔட்ரேஜ் அறச்சீற்ற அரைகுறைத்தனம் அல்ல, மன்னிக்கவும்; என்னைப் பொறுத்தவரை, நாம் முடிந்த வழிகளிலெல்லாம் கர்ட் மக்கள் திரளை ஆதரிக்கவேண்டுமென்பதுதான் என் அவா, அவ்வளவுதான்! ஆனால், நமக்கு வேறு பல முக்கியமான வேலைகள் – நடிகர்சங்கத் தேர்தல், சென்னைவெள்ள அறச்சீற்றம், கோயில்பூசாரிமுதல்வாதம், விடலை​_பாத்ரூம் பாட்டு விமர்சனம், இளையராஜாவா_ரஹ்மானா, விஜய்யா_அஜித்தா, கூட்டணிஎப்படிஉருவாகும், சகிப்புத்தன்மைமுதல்வாதம் போன்றவைதான் முக்கியம் என்பதையும் அறிகிறேன், கவலை வேண்டேல்! எனக்கும் எப்போதுமே இம்மாதிரி கேளிக்கைதான் பிடிக்கும், நன்றி; நானும் ஒரு சராசரித் திராவிடத் தமிழன் தானே! அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும்

08/01/2016

மூன்று நாட்களுக்கு முன் இடப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் மூலமாகத்தான், அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களை, ஸவூதி அரசாங்கம், ஜனவரி  2, 2016  அன்று சிரச்சேதம் செய்த கோரத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கொண்டேன். (எனக்குப் பொதுவாக – பப்பரப்பா டீவியோ, தினசரிகளோ,  இணையச் செய்திகளோகூட ஒத்துவரமாட்டா)

ஆனால், ஷாரியா படி நீதிபரிபாலனம் செய்யப்படும் நாடுகளில் — அதாவது, வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிவாதிகளால், ஷியாவாதிகளால், ஜஞ்ஜாவிட் கொலைகாரர்களால் ஆளப்படும் பிரதேசங்களில் — இம்மாதிரி வன்முறைகள் சகஜம்தான். பொதுமக்களால் வெகு சாதாரணமாக இவை எதிர்கொள்ளப்பட்டு, கூடியவிரைவில் அவர்களுடைய சொந்த உயிர் தரித்தல்களுக்காக, மறக்கப்படுபவைதான்!  Life in these countries is normal, for a given value of ‘normal,’ that is! :-(
நிம்ர் பக்ர் அவர்களின் சிரச்சேதம் எப்போதோ நடந்திருக்கவேண்டிய விஷயம்; அவரையும் அவர் குடும்பத்தினரையும் அவர் வழிநடத்திய மக்கள்திரளையும், இன்னமும் நீண்ட நாட்கள் துக்கத்திலும், அவநம்பிக்கையிலும் வாடவிடாமல், இழுத்தடிக்காமல் இப்போதாவது இது நடந்துமுடிந்ததே என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்; எப்படியும், இது போன்ற விஷயங்கள், இஸ்லாமை அதன் ஆரம்ப நாட்களின் கோர வீரவிளையாட்டுகளான படுகொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும்தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இப்படியும் இச்செய்தியைப் புரிந்துகொள்கிறேன். இதுதான் நிதர்சனம் என்றாலும், கொஞ்சம் குரூரம்.
-0-0-0-0-0-0-0-
ஸெக்யூலரிஸ்ம்/மதச்சார்பின்மை என்கிற பெயரில் சிறுபான்மைப் பழமைவாதத்துக்குத் துணைபோகும் இந்தியத் தொழில்முறை அறிவுஜீவிகளுக்கும், இந்தியாவில் சுணங்கிப்போவதாக கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் இந்த நாள் வரை, ஷாரியா என்றால் எப்படி நடைமுறையில் செயல்படுத்தப்படும் என்கிற சிந்தனையோ, நிதர்சன உண்மைகளைப் பார்க்கும் மனோதிடமோ இல்லவேயில்லை என நினைக்கிறேன்.
இந்த அழகில் – அவ்வப்போது அஞ்ஜும் சௌதுரியின் ‘இந்தியாவுக்கு ஷாரியா’ (sharia for india / ‘Sharia for Hind Project’ = இந்தியர் அனைவரும், 8ஆம் நூற்றாண்டு அரேபியாவின் ஷாரியா சட்டவிதிகளின் கீழ் ஆட்கொள்ளப்படவேண்டும்!) போன்ற வாயோர நுரை பொங்கும் இயக்கங்களும்,  அனைத்திந்திய முஸ்லீம்களுக்கான அவர்களில் உள்ள பிரிவுகளுக்கான  பலவிதமான  அமைப்புகளும், ஷாரியா தொடர்பான சப்தங்களைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருக்கின்றன; இந்திய முஸ்லீம்களைத் தனிமைப் படுத்தவும், அச்சமூகப் பெண்களை மேலதிகமாக ஒடுக்கவும், அச்சமூகத்தினரைப் பழமைவாதிகளாக மட்டுமே ஆக்கி அவர்களில் உணர்ச்சி வசப்படுபவர்களை தீவிரவாதத்தை நோக்கித் தள்ளவும் தான் இவை பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் முஸ்லீம்களுக்காக இயங்குவதாகச் சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளும் இப்படித்தான்! இவைகளுக்குத் தம் சமூக மக்களை நெறிப்படுத்துதல், அவர்களின் மேன்மையில் கரிசனத்தோடு இருத்தல், தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தொடர்ந்து செழுமைப் படுத்திக்கொள்ளுதல் போன்றவையெல்லாம் ஒத்துவரவே மாட்டா!
(கடந்த 30 ஆண்டுகளாவது இவ்வமைப்புகளைக் கூர்ந்து நோக்கிவிட்டுத்தான், நல்ல தலைவர்களாக வந்திருக்கக் கூடியபல இளம் இந்திய முஸ்லீம்கள் தம்மை விட்டால்போதும் என அமெரிக்காவையும், கனடாவையும், இங்கிலாந்தையும் சரணடைவதைப் பார்த்துவிட்டுத்தான் சலித்துப்போய் இப்படிச் சொல்கிறேன். இந்திய முஸ்லீம்களிலிருந்து பரந்த அறிவும் செயலூக்கமும் மிக்க ஒரு குதூகலமான இளைஞர் பட்டாளம் மேலெழும்பி, தம்மையும் தம் சமூகத்தையும் உய்வித்தால்தான் உண்டு. ஆனால் இந்தப் பட்டாளம் எங்கே? :-( அதன் விடிவெள்ளி இளம் தலைவர்கள் எங்கே?)
-0-0-0-0-0-0-
நம் சொந்தப் பிரச்சினைகள் இப்படியிருக்க இரான்(=ஷியா பெரும்பான்மை தேசம்) அரசு டர் புர்ரென்று சப்தம் போட்டுக்கொண்டிருக்கிறது – ஷியா குருவான, வன்முறையில் ஈடுபடாத நிம்ர் பக்ர் அவர்களை அநியாயத்துக்கு(இது உண்மைதான்!), ஸவுதி அரேபியா கொன்றுவிட்டதாகவும், இதற்கு ஸவுதி அரேபியா ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும்…
…எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனெனில், இதே ‘அறச்சீற்ற’ இரான் அரசானது – கண்டமேனிக்கும் அரசியல் கைதிகளை, ஷியாக்கள் அல்லாத பொதுமக்களை, வன்முறையில் ஈடுபடாமல் போராட்டங்களில் அமைதியாக ஈடுபடுபவர்களைக் கூட, அதே ஷாரியா விதிகளைப் பயன்படுத்தி, ஈவிரக்கமின்றிக் கொன்றிருக்கிறது, தொடர்ந்து கொன்று கொண்டிருக்கிறது.
கீழே உள்ள புகைப்படங்கள், இரான் அரசால் கொன்றொழிக்கப்பட்ட – ஆயுதம் தரிக்காத, ஆனால் போராட்டங்களில், பேரணிகளில் ஈடுபட்ட – அவற்றுக்குத் தலைமை தாங்கிய பாவப்பட்ட கர்ட் மக்கள் குறித்தவை. (இத்தனைக்கும், இந்த பாவப்பட்ட கர்ட் மக்கள் திரளிலும் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லீம்கள்தான்! ஆனால் ஷாரியாமுதல் வாதத்தின் கொடுமை, என்பது தாங்கொணாதது!)
iranian_kurd_executions1
க்ரேன் யந்திரங்களை இப்படியும் ஷாரியா விதிகளின்படி உபயோகிக்கமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் ஸவுதி அரேபிய சிரச்சேதமுறைதான், சரியான வழி.
iranian_kurd_executions4
iranian_kurd_executions3
மேற்கண்ட மூன்றும் கடந்த சில மாதங்களில் இரான் அரசு, பகிரங்கமாக நாற்சந்திகளில்  மரண தண்டனைகளை நிறைவேற்றிய சமாச்சாரங்கள். கீழே உள்ளது சுமார் 20 வருடங்களுக்கு முன்னே எடுத்த படம். (கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கர்ட் பொதுமக்கள்; ஆயுதம் தரித்தவர்கள் அல்லர். இப்படங்களைக் கொடுத்த/அனுப்பிய கர்ட் நண்பர்களுக்கு நன்றி)
iranian_kurd_executions2
நான் அறிந்த வரையில், சிரச்சேதங்களிலும், அநியாயக் கொலைகளிலும் ஒன்றை ஒன்று மிஞ்சுபவைதான் மிகப்பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், அவற்றின் அரசுகள்! இவைகளில் எந்தவொரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டைப் பற்றிப் பொரும, அறச்சீற்றம் கொள்ள, முகாந்திரமேயில்லை!
மாதாமாதம் இம்மாதிரி அநியாயக் கொலைகள்/தண்டனைகள் தொடர்ந்து, பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கின்றன. இக்கொலைகளை அரங்கேற்றுபவர்கள் அனைவரும், தாங்கள்தாம் உண்மையான இஸ்லாமியர்கள் என்கிறார்கள்; தங்கள் ஈனச்செயல்களுக்கு தங்களுடைய மதப்புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இவர்களுக்கு, நம்பவேமுடியாத அளவில், ஒரு பெரிய மக்கள்திரளின் ஆதரவும் இருக்கிறது. இது சோகம்தான். ஆனால் நான் இன்னமும் கல்வியறிவில் அது உருவாக்கக்கூடும் குடிமைப்பண்பிலும், மேன்மையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
-0-0-0-0-0-0-
நிம்ர் பக்ர் அவர்கள் கதை முடிந்தது – இணையத்தில் நிறையபேர் இதனைப் பற்றிப் பொங்கியிருக்கிறார்கள் என அறிந்தேன். என்னுடைய அரைகுறைச் செல்லங்களில் ஒன்றான ‘த ஹிந்து’ ஆங்கில தினசரியும், இது தொடர்பாக ஒரு ‘ஸ்காலர்லி’ அரைவேக்காட்டுக் கட்டுரையை இன்று பதிப்பித்திருக்கிறது:  Saudi Arabia’s deadly gamble – யார் இந்த ஸ்டேன்லி ஜானி எனும் இளைஞ்ஜர்?
அந்தக் கட்டுரைக்கு வந்த பல பின்னூட்டங்களும் கால்வேக்காடாகவே அமோகமாக இருக்கின்றன – முக்கியமாக பேரறிவாளர் ஸியாவுத்தீன் என்பவர் எழுதியுள்ளது. அனைத்தையும் படித்து இன்புறவும்.
-0-0-0-0-0-0-0-
இந்த கொடூரங்கள் தொடர்பாக ஒரு கையலாகாத்தன மன அழுத்தத்தில் இருந்தபோது, நேற்று ஒரு நண்பர் (வேறேதோ விஷயம் தொடர்பாக) அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், கம்பனை மேற்கோள் காட்டியிருந்தார், அது:
நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்
மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?
…விதி என்பதை, நடைமுறை இஸ்லாம் எனப் புரிந்துகொள்கிறேன். இப்படிப் பார்த்தால், பிற கேள்விகள்/விஷயங்கள், ஒரு அழகான ஜிக்ஸா புதிர் போல அவிழ்கின்றன.
islamic-art-jigsaw-puzzle-fa0e10-w192
அதேபோல என் பார்வையிலும் பிழை இருக்கலாம். அப்படியானால் விதி என்பது நான்தான். நம் கம்பனிடம் நிபந்தனையற்றுச் சரணடைவதைவிட எனக்கு வேறு வழியில்லை. உங்களுக்கு?

கருத்துகள் இல்லை: