சனி, 9 ஜனவரி, 2016

நேர்மையான நீதிபதி அகர்வால் திடீரென மாற்றப்பட்டது ஏன்? ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு....

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின்
மேல்முறையீட்டை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மேல்முறையீட்டின் இறுதி விசாரணை ஜனவரி 8-ம் தேதி தொடங்கப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 23-ம் தேதி கூறியது. இந்த சூழலில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் ஒருவரான ஆர்.கே.அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவராய் அந்த அமர்வில் புதிதாக கடந்த 7-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.அகர்வால் நேர்மையான நீதிபதி என்பதால் அவர் இவ்வழக்கிலிருந்து விலக விரும்பியதால் தான், அவர் மாற்றப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறதாம்.
உச்ச நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜனவரி 8-ம் தேதி விசாரிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றப் பதிவுத் துறை கூறியதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கினை, விசாரணைப் பட்டியலிலே இணைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டது.
ஜனவரி 8-ம் தேதி நடக்கவிருந்த விசாரணையை ஏன் நீக்கினார்கள்? பிறகு ஏன் அதே நாளில் அந்த வழக்கினைச் சேர்த்தார்கள்? முதலிலே நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகளில் ஒருவரை ஏன் மாற்றினார்கள்? என்பதையெல்லாம் பார்க்கும்போது சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது.
எனினும், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் சட்டரீதியாகவே செய்துள்ளது என்றும், சட்டத்தின் வழிமுறைகளில் எந்த தலையீட்டையும் உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நீதியின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு நம்பிக்கை இருக்கவே செய்கிறது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.   tamil.thehindu.com/tamilnadu

கருத்துகள் இல்லை: