சனி, 9 ஜனவரி, 2016

கலைஞரை சந்தித்தித்த திருப்பதி தேவஸ்தானம்...ராமானுஜர் தொடரை தெலுங்கில் வெளியிட விருப்பம்

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் | படம்: கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம்.
திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான ராமானுஜர் தொடரை தெலுங்கில் தயாரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக தலைவர் கருணாநிதி வைணவ புனிதரான ராமானும் தொடர்பான தொலைக்காட்சி தொடருக்கு கதை வசனம் எழுதுகிறார் என்ற விஷயம் விவாதப் பொருளானது.
நாத்திகரான கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை சிதைத்துவிட வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராமானுஜர் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ராமானுஜர் தொடரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கோரி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்துள்ளனர். தொடரை சொந்த செலவில் ரீமேக் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தயாராக இருப்பதாகவும் ராமானுஜர் தொடர் உரிமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு சொந்தமானது என்பதாலேயே தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்துள்ளனர் என்றும் திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு முடிந்ததுமே கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை அவரை சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பு குறித்து திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை சிதைத்துவிடுவார் என்று விமர்சித்தவர்களுக்கு இது சரியான பதிலடி. திருப்பதி தேவஸ்தானமே ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கோருகிறது என்றால், கதை வசனத்தில் எவ்வித உள்குத்து வேலையும் இல்லை என்பதுதானே உண்மை" என்றார்.
ராமானுஜர் தொடர்பாக கருணாநிதி முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்றில், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜர்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் | படம்: கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம். தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை: