புதன், 15 ஏப்ரல், 2015

ராகுலுக்கு கட்சி தலைவர் பொறுப்பை தராதீங்க: சோனியாவுக்கு ஷீலா தீட்சித் வேண்டுகோள்

'காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் தலைமைப் பண்பு தொடர்பாக, பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, கட்சித் தலைவர் பதவியை அவருக்கு வழங்கக்கூடாது. தலைவராக சோனியாவே தொடர வேண்டும்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், டில்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், 77, தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா உட்பட, சில மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இழந்த பெருமையை மீட்க, அக்கட்சித் தலைவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், 'காங்கிரசின் அடுத்த தலைவராக மகுடம் சூட்டப்பட உள்ளவர்' என, எல்லாராலும் நம்பப்படும், அந்தக் கட்சியின் துணைத் தலைவரான ராகுல், பார்லிமென்டின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இது, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இரண்டு மாதம்:

'ராகுல் ஓய்வில் இருக்கிறார்; இரண்டு வாரங்களில் திரும்பி வந்து விடுவார்' என, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், இரண்டு மாதமாகியும், அவர் திரும்பி வரவில்லை. ராகுல் எங்கிருக்கிறார் என்ற தகவலையும், காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவில்லை. அனேகமாக, இன்றோ, நாளையோ ராகுல் டில்லி திரும்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டில்லி திரும்பியதும், அடுத்த சில நாட்களில் அல்லது ஓரிரு மாதங்களில், அவருக்கு கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என, காங்., மேலிட வட்டாரங்கள் கூறி வருகின்றன. அதேநேரத்தில், ராகுலுக்கு தலைமைப் பொறுப்பு வழங்க, கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், ராகுலுக்கு தலைவர் பொறுப்பு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டில்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித் கூறியுள்ளதாவது: ராகுலின் தலைமைப் பண்பு தொடர்பாக, பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்து உள்ளன. அதனால், அவருக்கு கட்சித் தலைவர் பொறுப்பு வழங்குவது சரியாக இருக்காது. சோனியாவே கட்சியின் தலைவராக தொடர வேண்டும். சோனியா தலைமையில், கட்சி திறம்பட செயல்படுவதாக, மூத்த தலைவர்கள் எல்லாம் நம்புகின்றனர். தொடர் தோல்விகளால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ், மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் எனில், அதிகாரத்தை திறம்பட செயல்படுத்தக்கூடிய, வெற்றிகரமான தலைவர் தேவை. அந்தத் தகுதி உடையவர் சோனியா மட்டுமே.

நிரூபிக்கவில்லை:

கட்சித் தலைவராக ராகுல் பொறுப்பேற்றால், என்ன நடக்கும், என்ன நடக்காது என்பதை எல்லாம், என்னால் சொல்ல முடியாது. ஆனால், சோனியா தலைமை தொடர்ந்தால் நல்லது என, கட்சியினர் அனைவரும் நினைக்கின்றனர். ராகுலின் தலைமை பண்பு, இன்னும் முழுமையாக பரிசோதிக்கப்படவில்லை. எனவே, தலைவராக சோனியா தொடர்வதே, கட்சிக்கு நல்லது. மேலும், ராகுலின் திறமை இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு, ஷீலா தீட்சித் தெரிவித்தார். இம்மாத முற்பகுதியில், ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்தும், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான அம்ரீந்தர் சிங்கும், ராகுலை கட்சித் தலைவராக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சரியல்ல:

'கட்சியினரில், 99 சதவீதம் பேர் சோனியாவே தலைவராக இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். காங்கிரஸ் நெருக்கடியான சூழ்நிலையை சந்திக்கும் இந்த நேரத்தில், அவர் தலைவராக தொடர்வதே நல்லது. கட்சியில் தலைமுறை மாற்றத்தை இப்போது கொண்டு வருவது சரியாக இருக்காது' என்றும், கூறினர். அப்படிப்பட்ட நிலையில், ஷீலா தீட்சித்தும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்:

ஷீலா தீட்சித் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் தலைவரான சோனியா, கட்சியினர் எதிர்பார்க்காத பல விஷயங்களைச் செய்தவர். பொதுத்தேர்தலில், காங்கிரஸ் இரண்டு முறை வெற்றி பெற காரணமாக இருந்த அவர், பிரதமர் பதவியை வேண்டாம் என, மறுத்து விட்டார். எனவே, தன்னம்பிக்கை மிக்க அவர், தலைவராக தொடர்வதே சரியானது. ராகுல் மீது, கட்சியினருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அவரின் தலைமை குறித்து, இப்போது முடிவு செய்வது சரியாக இருக்காது. பொறுப்பை தட்டிக்கழிக்க நினைப்பவர் அல்ல சோனியா. கட்சியை துடிப்பாக செயல்பட வைப்பதிலும், கட்சியின் கொள்கைகளை காப்பாற்றுவதிலும் அவர் கைதேர்ந்தவர். இவ்வாறு, ஷீலா தீட்சித் கூறினார்.

வருவாரா ராகுல்? தவிக்கிறது காங்.,:


'இரண்டு மாதமாக ஓய்வில் உள்ள ராகுல், இன்று டில்லி திரும்பலாம்' என, காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக, டில்லி ராம்லீலா மைதானத்தில், வரும், 19ம் தேதி, பல மாநில விவசாயிகள் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்பார். பொதுக்கூட்டம் முடிந்ததும், கட்சியில் தலித் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது மற்றும் தலித் மக்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து, கட்சியில் உள்ள தலித் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். சட்டமேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாள் விழாவை, ஆண்டு முழுவதும் கொண்டாட, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. எனவே, ராகுல் வந்த பின்னரே, பிறந்த நாள் விழாவை எங்கெங்கு, எப்படி நடத்துவது என, இறுதி செய்யப்படும். இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிர அரசியலில் இருந்து, 55 நாட்களாக விலகி இருக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எப்போது, டில்லி திரும்புவார் என்பது பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. தகவல் தெரிந்தால், அதை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்போம்.
அஜய்மேக்கன்,
தகவல் தொடர்பாளர்,
காங்., dinamalar.com

1 கருத்து:

HOLLYWOOD DHAMAKA சொன்னது…

காங்கிரஸ் கட்சி தலை தூக்க வேண்டும் என்றால்..... பழைய காங்கிரஸ் தலைவர்கள் வர வேண்டும் முன்னே.....

சோனியா குடும்பம் ... விலக வேண்டும் என்றால்... நல்ல காங்கிரஸ் தலைவர்களாக போற்ற பட வேண்டும்...